Last Updated : 23 Jun, 2018 10:31 AM

Published : 23 Jun 2018 10:31 AM
Last Updated : 23 Jun 2018 10:31 AM

நலம், நலமறிய ஆவல் 40: கலக்கமூட்டும் கிரந்தி!

என் தம்பிக்கு வயது 28. தவறான உறவால் பிறப்பு உறுப்பில் சிறிய கொப்பளம் தோன்றியது. மருத்துவரிடம் காண்பித்து ஹெச்.ஐ.வி. சோதனை செய்து பார்த்தால், அது ‘எய்ட்ஸ்’ இல்லை. எஸ்.டி.டி. என்று சொல்லி நரம்பில் ஊசி போட்டு மாத்திரைகள் கொடுத்தார்கள். சரியானது. பிறகு இரண்டு மாத இடைவெளியில் மீண்டும் மீண்டும் தானாக வருகிறது. மீண்டும் மறைகிறது. இதற்கு எந்த மாதிரியான சிகிச்சை எடுக்க வேண்டும்? பரிபூரணமாகக் குணப்படுத்த முடியுமா? பின்னாளில் ஹெச்.ஐ.வி. தொற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா? குழந்தை பெற்றுக்கொள்ளலாமா? சரியான விளக்கம் தாருங்கள். தம்பி மிகுந்த மன உளைச்சலிலும், வேதனையிலும், பயத்திலும் உள்ளான்.

அருள்ராஜ், மின்னஞ்சல்.

ஆண்களுக்குத் தகாத உறவால், கிரந்தி நோய் (Syphilis) எனும் பால்வினை நோய் வருவது வழக்கம். இது ‘டிரிப்போனிமா பாலிடம்’ (Treponema pallidum) எனும் கிருமியின் பாதிப்பால் ஏற்படுகிறது. தொடக்கத்திலேயே இதற்குச் சரியான சிகிச்சை பெறத் தவறினால், இது பல தலைமுறைகளுக்குத் தொடர்ந்து வந்து, நெடிய துன்பங்களைத் தரக்கூடியது. எனவேதான், ஒவ்வொருக்கும் தனி மனித ஒழுக்கம் முக்கியம் என்பதை வலியுறுத்துகிறோம்.

பாதிப்புகள் என்ன?

தகாத உறவின்போது உடலுக்குள் நுழைந்துகொள்ளும் இந்தக் கிருமிகள், 9-லிருந்து 90 நாட்களுக்குள் ரத்தத்தில் பல்லாயிரக்கணக்கில் பெருகி, ஒருவித நச்சுத்தன்மையை வெளியிடும். இதன் விளைவாக, ஆண்குறியில் முதன்முதலில் கிரந்திக் கிருமிகள் நுழைந்த இடத்தில், சிறிய கொப்புளங்கள் ஏற்படும். இதுவே இந்த நோயின் ஆரம்ப அறிகுறி. அப்போதே உஷாராகி, தகுந்த சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால், அடுத்து வரும் ஆபத்துகளைத் தடுத்துவிடலாம்.

ஆனால், இதில்தான் பலரும் தவறு செய்கின்றனர். இந்த நோய்க்குச் சிகிச்சை பெற மருத்துவர்களிடம் நேரடியாக வருவதற்கு வெட்கப்பட்டு, போலி மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று, நோயை அதிகப்படுத்திக்கொள்கின்றனர். அடுத்து, இந்தப் புண்களில் வலி ஏற்படுவதில்லை என்பதால், பிறகு பார்த்துக்கொள்ளலாம் எனும் அலட்சியப்போக்கும், இந்த நோய் உடலுக்குள் பரவ அதிக வாய்ப்பளிக்கிறது. இந்த நோய் வந்தவர் பாதுகாப்பில்லாமல் பாலுறவு கொள்ளும்போது அடுத்தவருக்கும் இது பரவுகிறது.

பிறப்புறுப்பில் புண் ஏற்பட்ட சில வாரங்களில் தொடையிடுக்குகளில் நெறிகள் கட்டும். அப்போதாவது சிகிச்சை பெற்றுக்கொள்ள முன்வர வேண்டும். இப்போதும் தவறினால், இந்தக் கிருமிகள் உடலுக்குள் பல இடங்களில் பரவி ‘இரண்டாம் நிலை கிரந்தி நோயா’க வளர்ந்துவிடும். அப்போது பல பாதிப்புகளை அது கொண்டுவரும். உதாரணமாக, நெஞ்சு, வயிறு போன்ற இடங்களில் செந்நிறத் தடிப்புகள் தோன்றும். ஆனால், அரிப்பு இருக்காது. இதனாலும் இவர்கள் சிகிச்சைக்கு வருவதில்லை.

அடுத்ததாக, ஆசன வாயைச் சுற்றிலும் புண்கள் ஏற்படும். உதடு, வாய், அண்ணம் போன்றவற்றிலும் புண்கள் தோன்றும். இதற்கு உடல் சூடு என்று காரணம் கற்பித்துக்கொள்வார்கள். எலும்பு மூட்டுகளில் வீக்கம் ஏற்பட்டு வலி உண்டாகும். இதைச் சாதாரண நீர்க்கட்டு என்று கருதி தவறான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருப்பார்கள். இதற்கிடையில் இந்த நோய்க்கிருமிகள் கண், கல்லீரல், சிறுநீரகம், மூளை என எல்லா முக்கிய உடலுறுப்புகளுக்கும் பரவி பார்வை இழப்பு, மஞ்சள் காமாலை, தலைவலி, வாந்தி எனப் பல பாதிப்புகளை ஏற்படுத்தத் தயாராகிவிடும்.

இப்போதும் சிகிச்சை பெறவில்லை என்றால் ‘மூன்றாம் நிலை கிரந்தி நோயா’க அது மாறிவிடும். இப்போது ‘கம்மா’ (Gumma) எனும் கிரந்திக் கட்டிகள் உடலெங்கும் தோன்றும். இந்த நிலையில் உள்ள கிரந்திக் கிருமிகள் விரைகளைத் தாக்கினால், மலட்டுத்தன்மை ஏற்படும். வாரிசு இல்லாமல் போகும். இதயத்தைத் தாக்கினால், இதயத் தமனிக்குழாய்கள் பலூன்போல் வீங்கிக்கொள்ளும். இது கண்ணிவெடி போன்று ஆபத்தானது. எந்த நேரத்திலும் இது வெடித்து ரத்தம் வெளியேறி, உயிருக்கு ஆபத்தை வழங்கக் காத்திருக்கும்.

பொதுவாக, மூன்றாம் நிலை கிரந்தி நோயுள்ள ஒரு பெண் கருத்தரிக்க முடியாது. அப்படியே கருத்தரித்தாலும் குழந்தை கருப்பையில் சரியாக வளராது. கரு கலைந்துவிடும். அப்படியும் தப்பிக்கும் குழந்தைகளுக்கு இந்தக் கிருமிகள் கருப்பையிலேயே பரவி, பல பிறவி ஊனங்களை உண்டாக்கும். இத்தனை தொல்லைகளை ‘விலை’ கொடுத்து வாங்குவானேன்?

பரிசோதனை என்ன?

கிரந்தி நோயை அறிய வி.டி.ஆர்.எல். (V.D.R.L) எனும் ரத்தப் பரிசோதனை உள்ளது. இது தவிர, இன்னும் சில சிறப்பு ரத்தப் பரிசோதனைகளும் உள்ளன. நோய் அறிகுறிகளுக்கு ஏற்ப, நோய் நிலைகளுக்கு ஏற்ப இந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்துவர்.

சிகிச்சை என்ன?

கிரந்தி நோயை முற்றிலும் குணப்படுத்த பெனிசிலின் வகை மருந்துகளே பிரதானம். இந்த ஊசி மருந்தை நோயின் ஆரம்ப நிலையிலேயே பயன்படுத்தினால்தான் நோய் பரிபூரணமாகக் குணமாகும். அப்போதும் மருத்துவர் சொல்லும் கால அளவுக்கு மறுசிகிச்சைக்குக் கட்டாயம் வரவேண்டும். இப்போதும் இந்த நோயாளிகள் தவறு செய்வது இயல்பு. காரணம், இந்த ஊசிகளைப் பயன்படுத்திய சில வாரங்களில் புண்களும் தோல் தொடர்பான அறிகுறிகளும் மறைந்துவிடுவதால், தொடர் சிகிச்சையை அலட்சியம் செய்துவிடுவார்கள். மேலும், இந்த சிகிச்சையைப் பெறும்போது, தகாத உறவைத் தவிர்ப்பது, பாலுறவில் இருபாலினரும் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றுவது போன்றவை முக்கியமானவை. அப்போதுதான் இது அடுத்தவர்களுக்குப் பரவாமல் இருக்கும்.

உங்கள் தம்பியைப் பொறுத்தவரை அவர் சரியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இப்போது அவருக்கு நோய் எந்த நிலையில் உள்ளது என்பது முதலில் தெரிய வேண்டும். அப்போதுதான் சிகிச்சையைச் சொல்ல முடியும். இப்போதும் நோய் குணமாக வழி இருக்கிறது. பொதுநல மருத்துவரைச் சந்திப்பதைவிட, தகுதி வாய்ந்த பால்வினை நோய் நிபுணர் ஒருவரைச் சந்தித்து, இப்போதுள்ள நோய்நிலைக்கு ஏற்ப சிகிச்சை முறைகளை மேற்கொள்ள வேண்டும்.

பொதுவாக, தகாத உறவில் நாட்டம் உள்ளவர்களுக்கு எய்ட்ஸ் நோய் வர அதிக சாத்தியம் உண்டு. ஆனால், உங்கள் தம்பிக்கு இப்போது ஹெச்.ஐ.வி. தொற்று இல்லை எனத் தெரிவித்துள்ளீர்கள். அதனால் பயமில்லை. இனிமேல் எப்போதும் அவர் தகாத உறவு வைத்துக்கொள்ளமாட்டார் என்றால், அடுத்து அவருக்கு ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. இப்போதுள்ள வீணான மனக்குழப்பங்களும் பயங்களும் தேவையில்லை. நோயைப் புரிந்துகொண்டு, தகுந்த சிகிச்சையைத் தகுதியான இடத்தில், தேவையான கால அளவுக்கு மேற்கொள்வதுதான் நோயை வெல்வதற்குச் சிறந்த வழி.

‘நலம், நலமறிய ஆவல்' கேள்வி - பதில் பகுதியில் பதில் அளிக்கிறார் பிரபல மருத்துவ எழுத்தாளர் டாக்டர் கு. கணேசன். தங்களுடைய முக்கியமான மருத்துவச் சந்தேகங்களை வாசகர்கள் இப்பகுதிக்கு அனுப்பலாம். | மின்னஞ்சல்: nalamvaazha@thehindutamil.co.in | முகவரி: நலம், நலமறிய ஆவல், நலம் வாழ, தி இந்து, கஸ்தூரி மையம் | 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x