பண்டிகையைக் கொண்டுவரும் மனிதர்கள்

லங்காராம், திவ்யா தேவி, மேரி
லங்காராம், திவ்யா தேவி, மேரி
Updated on
3 min read

பண்டிகை நாள்களில் எவ்வளவோ ஆரவாரங்களுக்கு நடுவிலும் சமூகத்தில் ஒரு பகுதியினர், பண்டிகையிலிருந்து விலகி நிற்க நேர்வது உண்டு. தீபாவளியை நாம் கொண்டாடுவதற்கு அவர்கள் வழக்கம்போல வேலைக்குச் செல்லவேண்டியிருக்கிறது. தீபாவளி கொண்டாட்டம் எல்லாருக்குமே மகிழ்ச்சியும் பாதுகாப்பும் கொண்டதாக அமைந்துவிடுவதில்லை. சிலருக்கு விளையாட்டு வினையாகிவிடுகிறது.

தயாராகும் மருத்துவமனை: சென்னையில் உள்ள முதன்மையான மருத்துவமனைகளில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் ஒன்று. தீக்காயங்களுக்கான சிறப்பு சிகிச்சை மையம் தீபாவளி நாளில் கூடுதல் பரபரப்போடு இயங்கும். சென்னையைச் சுற்றிலும் உள்ள பல ஊர்களில் இருந்து தீக்காயம் அடைந்தவர்கள் சரணடைகிற இடம் இது.

தீபாவளி அன்று ஏற்படும் தீக்காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் ஸ்டான்லி அரசு மருத்துவமனை, எழும்பூர் அரசு கண் மருத்துவமனைபோல இதுவும் மக்களது நம்பிக்கையைப் பெற்றுள்ளது. தீபாவளிக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே கூடுதல் நோயாளர்களை ஏற்கத் தயாராகிவிடுகிறது இந்த மருத்துவமனை. குறைந்தபட்சம் 20 படுக்கைகளிலாவது மானிட்டர், வென்டிலேட்டர் உள்ளிட்ட வசதி களும் ஆக்சிஜன் உருளைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.

ஓர் இணைப் பேராசிரியர், மூன்று முதுநிலை மருத்துவ மாணவர்கள், ஏழு செவிலியர், ஓர் இயன்முறை மருத்துவர் ஆகியோர் அன்றைக்குப் பணியில் இருப்பார்கள். ஷிஃப்டு மாறும்போதும் இதே விகிதம் ஏறக்குறையத் தொடரும். இவர்களுக்கு வழிகாட்டத் துறைத் தலைவரும் துறை இணைத் தலைவர்களும் ஆலோசனைகள் வழங்க டீனும் தயாராக இருப்பார்கள். “நாங்கள் சில வாரங்களுக்கு முன்பே மருந்து போன்றவற்றைக் கூடுதலாக வாங்கி இருப்பு வைத்துவிடுவோம்” என்கிறார் செவிலி மேரி.

“பாதுகாப்பாகப் பட்டாசு வெடிப்பது குறித்து எவ்வளவுதான் அறிவுறுத்தினாலும் பலர் அவற்றைக் கடைப்பிடிப்பதில்லை. பட்டாசுகளில் உள்ள வெடிமருந்துப் பொடியைச் சேகரித்து மொத்தமாகப் பற்ற வைக்கும் பழக்கம் இந்தக் காலத்திலும் நீடிக்கிறது. அது மத்தாப்புபோல எரியாமல், வெடிக்க நேர்ந்தால் கடுமையான காயம் ஏற்படும்.

நாங்கள் காலையில் வார்டுக்குள் நுழைந்த சில நிமிடங்களிலேயே தீபாவளி குறித்த எண்ணமெல்லாம் சிகிச்சைகளுக்கான பரபரப்பில் காணாமல் போய்விடும்” என்கிறார் தீக்காயத்துக்கான சிகிச்சைப் பிரிவில் உதவிப் பேராசிரியராக உள்ள திவ்யாதேவி.

“5-10 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் பலர் வருவார்கள். புஸ்வாணம், ராக்கெட் போன்றவை வெடிக்காது என்கிற துணிச்சலில் இவற்றை மிக அருகில் நின்று பற்ற வைப்பதால் விபத்து நேர்கிறது. இந்த வகை விபத்துகள், சில வேளைகளில் பார்வைத் திறனையே பறிக்கக்கூடும். பெண் குழந்தைகள் அரிதாகவே வருவார்கள்.

அவர்கள் மத்தாப்பு கொளுத்தும்போது தீக்காயம் உண்டாகியிருக்கும். சிறு காயம் எனில் 5-10 நாள்கள் தங்க வேண்டியிருக்கும். தீவிரமான பாதிப்பு எனில், 3-6 மாதங்கள் வரை சிகிச்சை தேவைப் படும்” என்கிறார் மற்றோர் உதவிப் பேராசிரியர் லங்காராம்.

சிகிச்சையின் தொடக்கம்: முதலுதவியுடன் சிகிச்சை தொடங்கும். மயக்க மருந்து அளிப் பது, அறுவைசிகிச்சை செய் வது, காயம் பட்ட பகுதி இயல்பாக அசைக்கப்படுவதற்கு வசதியாகப் பழைய நிலைக்கு வரும்வகையில் இயன்முறைச் சிகிச்சை அளிப்பது என ஒவ்வொரு கட்டமாகச் சிகிச்சை நிகழும். “தீக்காயம் பட்டுப் பெரியவர்களும் வருகின்றனர். ஊதுவத்தியைப் பயன்படுத்தாமல் பட்டாசை நேரடியாக நெருப்பில் காட்டிப் பற்ற வைப்பதால் கையிலோ, முகத்திலோ அவர்களுக்குக் காயம் ஏற்படுகிறது.

ஒரே நேரத்தில் பலர் சேர்க்கப்படும்போது, தீவிரக் காயம் பட்டோரைத்தான் முதலில் கவனிப்போம். லேசான காயம் அடைந்தவர்கள் தங்களைக் கவனிக்கவில்லை எனக் கோபப்படுவார்கள். காயத்தின் அளவைப் பொறுத்துத்தான் நாங்கள் செயல்பட முடியும் என்பதை நேரம் செல்லச் செல்ல அவர்கள் புரிந்துகொண்டு, எங்களுக்கு ஒத்துழைப்புக் கொடுப்பார்கள்” என்கிறார் பேராசிரியரும் தீக்காய சிகிச்சைப் பிரிவின் துறைத் தலைவருமான மருத்துவர் நெல்லையப்பன்.

நெல்லையப்பன்
நெல்லையப்பன்

“எத்தனை சதவீதம் காயம் ஏற்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து அவர்க ளுக்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும். மணிக்கட்டுப் பகுதி வரை உள்ள பாதிப்புகளுக்கு நாங்களே சிகிச்சை அளிப் போம். கைவிரல்கள் தொங்கும் நிலைக்கு உள்ளாவது போன்ற சேதங்களைக்கூடச் சரிசெய்துவிடுவோம். மணிக்கட்டுப் பகுதிக்கு மேல் பாதிப்பு எனில், எலும்பியல் துறை சிகிச்சை அளிக்கும்” என்கிறார்கள் பேராசிரியர் மகாதேவனும் இணைப் பேராசிரியர் சுதாவும்.

“அனைத்துத் தொழில்நுட்ப வசதியும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ளது. தீக்காயம் அடைந்தவர்களுக்குத் தரமான சிகிச்சை அளிக்கப்படுகிறது. எனினும் பட்டாசு களால் காயம் அடைவோரின் எண்ணிக்கை பூஜ்யமாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். கொண்டாட்டங்களுக்கு இடையே கவனத்தை இழந்துவிடக் கூடாது. வெடி, பட்டாசு போன்றவற்றால் காயமுறுவது செயற்கையான துன்பம்.

உறுப்புகள் துண்டிப்புக்குள்ளாகிற பல பிரச்சினைகளுக்கு நாங்கள் சிகிச்சை அளிக்கிறோம். பிறக்கும் போதே ஏற்பட்ட இயற்கையான சிக்கல்களால் துன்பப்படுபவர்களுக்குச் செலவிட வேண்டிய நேரமே இதற்குச் செலவிடப்படுகிறது. மருத்துவ வசதிகள் எல்லாமே துன்பத்தைக் குறைப்பதற்குத்தான். எனினும், நம் அலட்சியம் காரணமான விபத்துகளைத் தவிர்ப்பதுதான் நல்ல வழிமுறை” என அனுபவ முதிர்ச்சியுடன் கூறுகிறார் டீன் பி.கே.பாஸ்கர்.

- anandchelliah@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in