

நவீன காலத்தில் கீரை போன்ற பாரம்பரிய உணவு நம்மைவிட்டு அகன்று சென்றுவிட்டது. கீரைகளுக்கு மாற்றாக உடலுக்கு ஒவ்வாத பீட்சா, பர்கர் போன்ற அயல்நாட்டு உணவு வகைகள் நமது உணவுப் பட்டியலில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளன.
நமது உணவுப் பழக்கத்திலிருந்து விடுபட்ட கீரைகளின் நன்மைகளை நினைவூட்டுகிறது டாக்டர் வி. விக்ரம்குமார் எழுதியுள்ள, ‘கீரைகள் தேசம்’ நூல். உணவே மருந்து என்பதற்குச் சிறந்த உதாரணம் கீரைகள். கீரையில் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து, விட்டமின் சத்துகள் புதைந்துள்ளன. ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கு மருந்துகளைச் சாப்பிடுவதைக் காட்டிலும் கீரைகளைத் தினமும் உணவில் சேர்த்துவந்தால் பல்வேறு உடல் பிரச்சினைகள் தீரும்.
சட்னி, துவையலுக்கு நாம் பயன்படுத்தும் புதினா, கொத்துமல்லித் தழை, கறிவேப்பிலை போன்றவையும் கீரை வகைகளே. இவை எளிதில் கிடைக்கக்கூடியவை. ஆனால், சத்து நிறைந்தவை. இப்படிப் பரவலாகக் கிடைக்கக் கூடிய 30க்கும் மேற்பட்ட முக்கியமான கீரை வகைகளைப் பற்றி இதில் விவரிக்கப்பட்டுள்ளது.
‘ஒரு நாளைக்கு 50 கிராம் முதல் 100 கிராம் கீரைகளை உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பாற்றல் பெருகும்’ என்பது போன்ற மருத்துவத் தகவல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அத்துடன் கீரைகளின் பலன்கள், ஆய்வுப்பூர்வ விளக்கங்கள், சித்த மருத்துவக் குறிப்புகள், பெயர்க் காரணம், பயன்படுத்தும் முறை, நுணுக்கங்கள் போன்றவையும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன.
கீரைகள் தேசம்
டாக்டர் வி.விக்ரம்குமார்
தமிழ் திசை (இந்து குழுமம்)
விலை: ரூ.130
தொடர்புக்கு: 7401296562 / 7401329402