டாக்டர் பதில்கள் 50: முட்டையின் மஞ்சள் கரு முழுவதும் கொழுப்பா?

டாக்டர் பதில்கள் 50: முட்டையின் மஞ்சள் கரு முழுவதும் கொழுப்பா?
Updated on
3 min read

முட்டையின் மஞ்சள் கருவைச் சாப்பிடலாமா? - சி. செல்லதுரை, சென்னை. முட்டையின் வெள்ளைக் கரு முழுவதும் புரதம், மஞ்சள் கரு முழுவதும் கொழுப்பு என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை வைத்துத்தான் நீங்களும் இந்தச் சந்தேகத் தைக் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன். இப்போது முட்டை குறித்த அறிவியல் பார்வை மாறி இருக்கிறது.

கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன். வெள்ளைக் கரு, மஞ்சள் கரு இரண்டிலும் ஏறத்தாழ ஒரே அளவுக்குத்தான் புரதம் இருக்கிறது. மஞ்சள் கருவையும் சேர்த்து எடுத்துக்கொண்டால்தான் அதிலிருக்கிற புரதம் முழுவதுமாகக் கிடைக்கும். அடுத்து, முட்டையின் மேல் இருக்கும் பயம் அதிலுள்ள கொழுப்பில்தான் ஆரம்பிக்கிறது.

கொழுப்பு என்பது வேறு. கொலஸ்டிரால் என்பது வேறு. 100 கிராம் முட்டையில் பத்து கிராம் கொழுப்பு இருக்கிறது. இதில் கெடுதல் என்று சொல்லப்படுகிற நிறை கொழுப்பு 3.2 கிராம்தான். பலன் தரும் என்று நினைக்கிற நிறைவுறாக் கொழுப்பு 6.8 கிராம். இதில்கூட உடலுக்கு நன்மை சேர்க்கும் ஒற்றை நிறைவுறாக் கொழுப்பு நான்கு கிராம். கொழுப்பு தினமும் உடலுக்கு 40 கிராம் வரை தேவைப்படுகிறது என்னும் நிலையில், முட்டையில் இருக்கும் கொழுப்பு உடலுக்கு வலு சேர்க்கும் என்பதுதான் உண்மை.

100 கிராம் எடையுள்ள முட்டையில் 373 மி.கிராம் கொலஸ்டிரால்தான் இருக்கிறது. நம் அன்றாடப் பணிகளுக்குத் தினமும் 2,000 மி.கிராம் கொலஸ்டிரால் தேவை. அப்படி இருக்கும்போது முட்டையில் இருக்கும் கொலஸ்டிரால் குறித்து நாம் அதிகமாகவே அச்சப்படுகிறோம் என்றுதான் சொல்ல வேண்டும்.

உங்கள் வயதைச் சொல்லவில்லை. ஆகவே, முட்டை குறித்துத் தற்போதைய பொதுவான பரிந்துரையைத் தருகிறேன். குழந்தைகளுக்குத் தினமும் 50 கிராம் முட்டைகள் 2 கொடுக்கலாம். ஆரோக்கியமிக்க பெரியவர்களும் தினசரி 2 முட்டைகள் மஞ்சள் கருவுடன் சாப்பிடலாம். சர்க்கரை நோய் உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், ஏற்கெனவே மாரடைப்பு வந்தவர்கள், ரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகமாக உள்ளவர்கள் மஞ்சள் கருவுடன் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்.

சிறுநீரகம் செயல் இழந்தவர்கள் மட்டும் மருத்துவரின் நேரடி ஆலோசனைப்படி முட்டையைச் சாப்பிட வேண்டும். வேகவைத்த முட்டைதான் சிறந்தது. எண்ணெயில் பொரிப்பதைத் தவிர்ப்பது நல்லது. அதிகம் சூடுபடுத்தினால் பெரும்பாலான சத்துகள் அழிந்துவிடும். இப்படித் தினமும் முட்டை எடுத்துக்கொள்ளும்போது, எண்ணெயும் நிறை கொழுப்பும் மிகுந்த மற்ற உணவு வகைகளைத் தேவைக்கு அதிகம் எடுத்துக்கொள்ளக் கூடாது. கவனம் தேவை.

சி.ஓ.பி.டி. (COPD) நோய் உள்ளவர்கள் மூச்சுப் பயிற்சிகள் செய்யலாமா? - காந்திமதிநாதன், பழனி. சி.ஓ.பி.டி. பாதிப்பு உள்ளவர்கள் மூச்சுப் பயிற்சிகளைச் செய்வது பல வழிகளில் நன்மை பயக்கும். குறிப்பாக, ‘சி.ஓ.பி.டி’க்கான மூச்சுப் பயிற்சிகள் சுவாசத் தசைகளை வலுப்படுத்தவும், அதிக ஆக்சிஜனைப் பெறவும் குறைந்த முயற்சியுடன் எளிதாகச் சுவாசிக்கவும் உதவுகின்றன. 10 நிமிடங்கள் வீதம் தினமும் நான்கு முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சிறு வயதிலேயே பலர் குறட்டை விடுகிறார்கள். இதைச் சரி செய்வது எப்படி? - ஜி. செல்வமுத்துகுமார், சிதம்பரம். சிறு வயதில் குறட்டை ஏற்படுவதற்குப் பொதுவாகச் சளியுடன் கூடிய மூக்கடைப்பு, ஒவ்வாமை, சைனஸ் தொல்லை, அடினாய்டு/டான்சில் வளர்ச்சி, மூக்குத் தடுப்புச்சுவர் வளைவு, தைராய்டு பிரச்சினை போன்றவை தான் காரணங்களாக இருக்கும். மேற்சொன்ன பிரச்சினைகளுக்குச் சிகிச்சை எடுத்துக்கொண்டால், குறட்டையும் மறைந்துவிடும்.

அதிக உடல் எடை - கழுத்தைச் சுற்றிக் கொழுப்பு அதிகமாக இருப்பவர்களுக்குக் குறட்டை என்பது நிரந்தரத் தொல்லை தருகிறது. உடல் எடையைக் குறைப்பதுதான் குறட்டையைத் தீர்க்க ஒரே வழி. சிலருக்குக் கீழ்த்தாடை உள்வாங்கி இருந்தாலும் குறட்டை ஏற்படுகிறது. இதற்கு ‘கிளிப்’ போன்ற சில கருவிகளைப் பொருத்திக்கொண்டால் குறட்டையைச் சமாளிக்கலாம்.

அடுத்ததாக, மூக்கில் அல்லது தொண்டைக்குள் சதை வளர்ச்சி இருப்பவர்களுக்கு லேசர் சிகிச்சை மூலம் கரைத்து விடுகிறார்கள். இதற்கு ‘வுவுலோபேலட்டோ பெரிங்கோபிளாஸ்டி’ (Uvulopalato pharyngoplasty (UPPP) என்று பெயர். கடுமையாகக் குறட்டை உள்ளவர்களுக்கு ‘சிபாப்’ (Continuous positive airway pressure) என்னும் கருவியை முகத்தில் அணிந்துகொள்ளச் செய்கிறார்கள். குறட்டைக்கு உள்ள நவீன சிகிச்சைகள் இவை.

எனக்கு அடிக்கடி Anxiety Attack ஏற்படுகிறது. அப்போது இதயத் துடிப்பு அதிவேகமாக உள்ளது. மருத்துவரிடம் சென்றால், இசிஜி எடுத்துப் பிரச்சினை இல்லை எனக் கூறுகிறார். சிகிச்சை கூறுங்கள். - இமையாள், திருச்சி. உங்களுக்கு ஏற்பட்டுள்ளது ஓர் உளவியல் பிரச்சினையாக இருக்கலாம். மனக்கவலை, மனஎழுச்சி, மனப்பதற்றம், தவிப்பு போன்றவை இதில் தோன்றும். நீங்கள் எந்த அளவில் உளவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறியாமல் பொதுவான சிகிச்சை முறையைச் சொன்னால் சரிப்படாது. ஆகவே, நீங்கள் உளவியல் நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுவதே நல்லது.

எனக்குத் தொப்புளில் ஆறு மாதங்களாகப் புடைத்திருக்கிறது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார்கள். உடல் தகுதி இருந்தும், சில சூழ்நிலைகளால் அறுவைசிகிச்சையை மேற்கொள்ள முடியவில்லை. என் அறுவைசிகிச்சையைத் தள்ளிப் போடலாமா? இயற்கை வைத்திய முறையில் சரிசெய்ய முடியுமா? - சு.ராதாகிருஷ்ணன், கோவை – 7

உங்களுக்கு வந்துள்ள பிரச்சினைக்குத் ‘தொப்புள் குடல் இறக்கம்’ (Umbilical Hernia) என்று பெயர். இதற்கு அறுவை சிகிச்சைதான் தீர்வு. இயற்கை வைத்திய முறைகள் சரி செய்யாது. வலி இல்லை, வாந்தி இல்லை, வயிறு உப்புசம் இல்லை எனும்போது அறுவைசிகிச்சையைத் தள்ளிப் போடலாம். தவறல்ல.

(நிறைவடைந்தது)

- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்; gganesan95@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in