

தென்னையிலிருந்து இறக்கப்படும் ‘நீரா’ என்னும் பானத்தைக் குடித்தால் சர்க்கரை நோய் குணமாகி விடும் என்கிற அறிவிப்போடு எங்கள் ஊர்ச் சந்தையில் விற்கப்படுகிறது. அது உண்மையா? - சோ. முத்துமாணிக்கம், பழனி.
முதலில், ‘நீரா’ குறித்துச் சொல்லிவிடுகிறேன். ‘நீரா’ என்பது பதநீருக்கும் கள்ளுக்கும் இடைப்பட்ட பானம். இதை அருந்தியதும் புத்துணர்வு கிடைக்கும். நீராவைப் பதநீர் இறக்குவதுபோல இறக்க முடியாது. ஐந்து டிகிரி செல்சியஸ் குளுமையில்தான் இது எப்போதும் இருக்கவேண்டும். அதாவது, சீவப்பட்ட தென்னம் பாளைகளில் அதற்கென்று வடிவமைக்கப்பட்ட பானை வடிவ ஐஸ்பெட்டிகளைப் பொருத்திக் கட்டிவைக்க வேண்டும்.
ஐஸ் பானைகளில் சேகரமாகும் நீராவை இறக்கி, தயாராக உள்ள குளிர்விப்பான் பொருத்தப்பட்ட வேனில் ஏற்றி, குளுமையான சேகரிப்பு மையங்களில் சேகரிக்கப்படும். பிறகு அவற்றைப் பாட்டிலில் அடைத்துக் குளிர்விப்பான் பொருத்தப்பட்ட வாகனம் மூலம் கடைகளில் விற்பனை செய்வார்கள்.
‘நீரா’வின் ‘கிளைசீமிக்ஸ் இன்டெக்ஸ்’ 35%. அதாவது, ரத்தச் சர்க்கரையை உயர்த்தும் அளவு இது. மற்ற குளிர்பானங்களோடு ஒப்பிடும்போது இது குறைவுதான். ரத்தச் சர்க்கரை அளவைச் சரியான அளவில் வைத்துக்கொள்கிறவர்கள் இதை அவசரத்துக்குப் பருகலாம்.
அடிக்கடி பருக வேண்டாம். காரணம், சர்க்கரை எந்த வழியில் உடலுக்குள் சென்றாலும் அது சர்க்கரை நோயாளிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது திண்ணம். அந்தப் பாதிப்பின் அளவு வேண்டுமானால், நாம் எடுத்துக்கொள்ளும் சர்க்கரையின் வடிவத்தைப் பொறுத்து மாறலாம். மற்றபடி சர்க்கரை, சர்க்கரைதான். இதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்து, ‘நீரா’ என்னும் பானத்தைக் குடித்தால் சர்க்கரை நோய் குணமாகிவிடும் என்பது தவறான தகவல்.
எனக்கு வயது 56. இன்சுலின் போட்டுக்கொள்கி றேன். எந்த வகையான உணவைச் சாப்பிட்டால், இயற்கையாக இன்சுலின் சுரக்கும்? - பி. ரகுநாதன், திருச்சி-1.
பொதுவாக, நார்ச்சத்து உள்ள எல்லா உணவும் இன்சுலின் எதிர்ப்புத்தன்மையைக் குறைத்து, இன்சுலின் சுரப்பதை அதிகப்படுத்தும். அதோடு, ஏற்கெனவே சுரந்த இன்சுலினையும் அவை சரியாக வேலை செய்ய வைக்கும். இயற்கை உணவில் பச்சை இலைக் காய்கறிகள், குறிப்பாக முட்டைக்கோஸ், வெண்டைக்காய், பாகற்காய்; அடுத்து, வெந்தயம், வெள்ளைப்பூண்டு, நெல்லி, மஞ்சள், லவங்கம், நட்ஸ் ஆகியவை இன்சுலின் உற்பத்திக்கு உகந்தவை.
நிறை கொழுப்பு உணவைக் குறைத்துக்கொள்வதும் சக்கை உணவை ஓரங்கட்டுவதும் முக்கியம். அதேசமயம், கணையத்துக்குச் சுமை கொடுக்கும் உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதும், உடல் இயக்கத்துக்குத் துணை செய்யும் நடைப்பயிற்சியை மேற்கொள்வதும் இன்சுலின் சுரப்புக்குக் கூடுதலாக உதவும்.
கடந்த சில ஆண்டுகளாக என் காதில் ஆண்டுக்கு இருமுறை காது இரைச்சல் ஏற்படுகிறது. காது உள்ளே இறுக்கமாக இருக்கும். அதிக சத்தம் கேட் கும். நான்கு வயதில் மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டேன். அதனால் இருக்குமா? இடது காது எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து கேட்பதில்லை. மருத்துவர்கள் காது கேட்கும் திறன் குறைவாக இருப்பதாகக் கூறுகின்றனர். என் வயது 34. ரொம்பப் பயமாக உள்ளது. என்ன செய்யலாம், டாக்டர்? - எஸ். கார்த்திக், சேலம்.
காது இரைச்சலுக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவை உடலியல் ரீதியாகவும் இருக்கலாம்; உளவியல் ரீதியாகவும் இருக்கலாம். காது - மூக்கு - தொண்டை நல நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். ஆடியோகிராம், HRCT ஸ்கேன், MRI ஸ்கேன், MRN ஸ்கேன், MRA ஸ்கேன் போன்ற பலதரப்பட்ட பரிசோதனைகள் மூலம் காது இரைச்சலுக்குக் காரணம் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் தீர்வு கிடைக்கலாம்.
பொதுவாக, காது இரைச்சல் உடனே சரியாவது சிரமம். பொறுமையுடன்தான் சிகிச்சை எடுக்க வேண்டி வரும். சிலருக்கு, முள்ளை முள்ளால் எடுப்பதுபோல் காது இரைச்சல் உள்ளவர்களின் காதுக்குள் அந்த இரைச்சலுக்குச் சவால்விடும் வகையில் அதிக டெசிபல் உள்ள மற்றோர் ஒலியைச் செலுத்தினால், இரைச்சலின் கொடுமையை உணரவிடாமல் அது தடுத்துவிடும். இதற்கு ‘மறையொலி தொழில்நுட்பம்’ (Masking technique) என்று பெயர். வாக்மேனின் இயர்போன்மாதிரி ‘மறையொலிக் கருவி’யைக் (Masker) காதில் பொருத்தி, இந்தச் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
என் அம்மாவுக்கு வயது 65. கடந்த நான்கு வருடங்களாக இரவில் கால் தசை நடுங்குகிறது. நரம்பியல் நிபுணர் Gabastone 100mg மாத்திரை கொடுத்தார். சரியாகவில்லை. என்ன செய்யலாம், டாக்டர்? - சுந்தரமூர்த்தி, மின்னஞ்சல்.
உங்கள் அம்மாவை மருத்துவர் கொடுத்த மாத்திரையோடு, விட்டமின் பி-12, விட்டமின்-டி, கால்சியம், மெக்னீசியம் கலந்த மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளச் சொல்லுங்கள். ரத்தத்தில் தாதுச்சத்து அளவுகள் சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிக்கச் சொல்லுங்கள். காபி குடிப்பது அளவோடு இருக்கட்டும். கவலை, கோபம், மன அழுத்தம் கூடாது. நிறைவான உறக்கம் அவசியம். சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு பிரச்சினை, ரத்த நாளப் பிரச்சினை, நரம்புப் பிரச்சினை இருந்தால் சரி செய்யுங்கள்.
(அடுத்த வாரம் நிறைவடையும்)
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்; gganesan95@gmail.com