

ஆண்களுக்கு விரை இறங்காமல் இருந்தால், அதைச் சீராக்க எத்தனை வயதுக்குள் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்? - ஜி. செல்வமுத்துகுமார், சிதம்பரம்.
ஆண்களுக்கு விரை இறங்காமல் இருப்பது ஒரு பிறவிக் குறைபாடு. பொதுவாக, ஒரு வயதுக்குள் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, வயிற்றில் இருக்கும் விரையை விதைப்பைக்குள் கொண்டுவந்துவிட வேண்டும். காலம் தாழ்த்தினால், பிற்காலத்தில் ‘அப்பா’ ஆவதில் சிரமம் உண்டாகும். வயிற்றுக்குள் இருக்கும் விரையை விதைப்பைக்குள் இறக்காமல் அப்படியே விட்டுவிட்டால், வயதான பிறகு ‘விரைப் புற்றுநோய்’ ஏற்படவும் கூடும்.
எனக்கு வயது 54. உடல் எடை 102 கிலோ. எனக்குச் சர்க்கரை நோயும் உயர் ரத்த அழுத்தமும் உள்ளன. உரிய சிகிச்சை மேற்கொண்டு கட்டுப்பாட்டில் உள்ளேன். எனது இடது காலில் 60% போலியோ பாதிப்பும் உள்ளது. இப்போது எனது வலது முழங்கால் மூட்டில் கடுமையான வலி உள்ளதால், மருத்துவரை அணுகிய நிலையில், ‘மூட்டு மாற்றுச் சிகிச்சைக்கு உங்கள் மூட்டு தகுதியானதாக இல்லை' எனத் தெரிவித்தார். அதற்கு மாற்றாக, ‘பிளாஸ்மா சிகிச்சை’ மேற்கொண்டால், பலன் கிடைக்குமா? - ஏ. ஜெகதீசன், பெரியகுளம்.
முழங்கால் மூட்டு வலி பிரச்சினை உள்ளவர்களுக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பதிலாக, ‘பிளாஸ்மா சிகிச்சை’ மேற்கொள்ளப்படுவது இப்போது நடைமுறையில் உள்ளது. குறிப்பாக, உங்களைப் போன்று மூட்டு மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ள முடியாதவர்களுக்கு இது பரிந்துரை செய்யப்படுகிறது.
இந்தச் சிகிச்சையில் 80% வெற்றி கிடைக்கலாம். இதுவும், பயனாளியின் உடல் தன்மை, மூட்டுச் சிதைவு நிலைமை, சர்க்கரை நோய் உள்ளிட்ட இணை நோய்களின் கட்டுப்பாடு ஆகிய வற்றைப் பொறுத்து அமையும். மூட்டு மாற்றுச் சிகிச்சையில் கிடைக்கும் 100% வெற்றியை இதில் எதிர்பார்க்க முடியாது.
எனக்குச் சமீபத்தில்தான் திருமணம் ஆனது. என் கணவருக்கு வயது 34. தாம்பத்தியத்தில் அவருக்கு விறைப்புத்தன்மையில் பிரச்சினை இருக்கிறது. அவருக்கு வேலை தொடர்பான மன அழுத்தமும் இருக்கிறது. மன அழுத்தத்துக்கும் விறைப்புத்தன்மைக்கும் தொடர்பு உண்டா, டாக்டர்? இதற்கு மருந்து உண்டா? என்ன வகையான உணவை அவர் எடுத்துக் கொள்ள லாம்? - மரகதம், தூத்துக்குடி.
மன அழுத்தத்துக்கும் விறைப்புத்தன்மைக்கும் நிறைய தொடர்பு உண்டு. உங்கள் கணவருக்கு விந்துப் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட முழு உடல் பரிசோதனைகள் செய்துகொண்டு, மனநல மருத்துவரிடம் கலந்து ஆலோசனை பெறுங்கள். இந்தப் பிரச்சினைக்கு இப்போது நவீன மருந்துகள் நிறைய உள்ளன.
உங்கள் கணவருக்குப் பொருத்த மான மருந்தை மருத்துவர்தான் தீர்மானிக்க முடியும். உளவியல் சிகிச்சை தவிர, விறைப்புத்தன்மைக்குச் சிறப்பு மாத்திரைகளும் உள்ளன; சிலருக்கு ஆண் உறுப்பில் சில கருவிகள் பொருத்தப்படுவதும் உண்டு. ‘வெற்றிட விறைப்புச் சாதனங்கள்’ சிகிச்சை முறை என்பது இதற்குப் பெயர்.
உங்கள் கணவருக்குச் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், போதைப் பழக்கம் போன்றவை இருந்தால் அவற்றுக்கும் சிகிச்சை தேவைப்படும். புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற பழக்கங்கள் இருந்தால் அவற்றை நிறுத்த வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். விறைப்புத்தன்மைக்கு உணவுமுறை ஓரளவு உதவும். சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறக் காய்கனிகள், கீரைகள் உள்ளிட்ட பச்சை இலைக் காய்கறிகள், நட்ஸ் உள்ளிட்ட ஆரோக்கியப் புரத உணவு வகைகள், முட்டை, இறைச்சி போன்றவை உதவலாம்.
எனக்கு வயது 50. கடந்த ஐந்து ஆண்டுகளாக உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்டிரால் பிரச்சினை உள்ளது. நான் தொடர்ச்சியாக மருந்துகள் எடுத்து வருகிறேன். இவை நல்ல கட்டுப்பாட்டில் உள்ளன. இப்படித் தொடர்ச்சி யாக மருந்துகளை எடுத்து வருபவர்கள் அதிகபட்சம் 20 வருடங்களுக்குத்தான் உயிர்வாழ முடியும் என்கிறார் என் நண்பர். இது சரியான தகவலா, டாக்டர்? - ராஜ்குமார், வஞ்சி மாநகர்.
இது நூற்றுக்கு நூறு தவறான தகவல். நீங்கள் மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டு வருவதால்தான் உங்களுக்கு உயர் ரத்த அழுத்தமும் சர்க்கரை நோயும் நல்ல கட்டுப்பாட்டில் உள்ளன. இப்படி மாத்திரைகள் சாப்பிட்டுக்கொண்டு மேற்சொன்ன நோய்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, 100 வயது வரை வாழ்ந்தவர்களை என் னால் அடையாளம் காட்ட முடியும்.
சமீபத்தில் சிவகங்கை மருத்துவமனையில் குரங்கு கடித்ததால் சிகிச்சையில் இருப்பவர் குரங்குபோல் சேட்டைகள் செய்யும் காணொளியை வாட்ஸ் அப்பில் பார்த்தேன். குரங்கு கடித்தால் இது போன்ற மாற்றம் வருமா? இதைச் சிகிச்சை மூலம் குணப்படுத்த முடியாதா? - பாபநாசம் நடராஜன், தஞ்சாவூர்.
குரங்கு கடித்தவருக்கு மனநோய் இருந்திருந்தால் இப்படி நிகழ வாய்ப்பிருக்கிறது. அடுத்து, கடித்த குரங்குக்கு வெறிநோய்த் தொற்று (Rabies) இருந்து, இவருக்கும் அந்த நோய் ஏற்பட்டிருந்தால், இது போன்று நடந்துகொள்வார்கள். மனநோய்க்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற்றால் குணப்படுத்த முடியும். வெறிநோய்க்குத் தடுப்பூசி ஒன்றுதான் தடுக்கும் வழி. வெறிநோய் வந்துவிட்டால் உயிரிழப்பைத் தடுப்பது கடினம்.
- கட்டுரையாளர், பொது நல மருத்துவர்; gganesan95@gmail.com