

சாப்பிடும்போது இடையிடையே தண்ணீர் குடிக்கலாமா அல்லது சாப்பிட்டு முடித்த பிறகுதான் தண்ணீர் குடிக்க வேண்டுமா? - வெங்கட், தஞ்சை.
சாப்பிடும்போது இடையிடையே தண்ணீர் குடித்தால் இரைப்பையில் சுரக்கும் அமிலம் நீர்த்துவிடும்; செரிமானம் தடைபடும் என்று பலரும் தவறாகக் கருதுகிறார்கள். இதற்கு அறிவியல்பூர்வமாக ஆதாரம் இல்லை. சொல்லப்போனால், அதிகம் தண்ணீர் குடிப்பது செரிமானத்துக்கு நல்லதுதான்.
எனவே, உணவு சாப்பிடும்போதும் தண்ணீர் குடிக்கலாம்; சாப்பிட்டு முடித்த பிறகும் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்கலாம். உணவு சாப்பிட்டுத் தண்ணீர் குடிக்காமல் விக்கி, விக்கிச் சிரமப்படுவதற்குப் பதிலாகத் தாராளமாகத் தண்ணீர் குடியுங்கள்.
காலையில் வெறும் வயிற்றில் ரத்தச் சர்க்கரை அளவைப் பரிசோதித்த பிறகு, சாப்பிட்டுவிட்டு ரத்தச் சர்க்கரை அளவைப் பரிசோதிக்கும்போது இன்சுலின் போட்டுக்கொண்டும், மாத்திரை எடுத்துக்கொண்டும்தான் பரிசோதனை செய்ய வேண்டுமா? - எஸ். பாத்திமா, கோயம்புத்தூர்.
காலையில் வெறும் வயிற்றில் ரத்தச் சர்க்கரை அளவைப் பரிசோதித்த பிறகு, நீங்கள் வழக்கமாகச் சாப்பிடும் உணவை வழக்கமான நேரத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். எப்போதும்போல், உணவுக்கு முன்பு இன்சுலின் போட்டுக்கொள்ளுங்கள். சர்க்கரை நோய்க்கான மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு ரத்தச் சர்க்கரை அளவைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். இதுவே சரியான முறை.
என் மகனுக்கு வயது 22. பிறந்து இரண்டு வருடங்கள் கழித்துப் பரிசோதித்தபோது அவனுக்குப் பெருமூளை வாதம் (Cerebral palsy) இருப்பது தெரிந்தது. இடையிடையே வலிப்பு வரும். தொடர்ந்து 20 வருடங்களாக Volprin, Lamitor DT 50 mg, Prisium 10 mg ஆகிய மருந்துகளை எடுத்துவருகிறார். இவற்றை வாழ்நாள் முழுவதும் எடுக்க வேண்டுமா? தங்களின் மேலான பதிலை எதிர்பார்க்கிறேன். - அ. ராஜாராமன், மின்னஞ்சல்.
குழந்தை, சிசுவாகத் தாயின் வயிற்றுக்குள் வளர்ந்து வரும்போது, அதற்குத் தேவைப்படும் ரத்த ஓட்டமும் ஆக்ஸிஜன் அளவும் குறைவாக இருந்தால், மூளை நரம்பணுக்களுக்குச் சேதம் ஏற்படும். இதன் விளைவாகவே பெருமூளை வாதம் ஏற்படுகிறது. மூளையின் செல்களை மேம்படுத்துவதற்கு மருந்துகள் வழங்கப்படுகின்றன. உங்கள் மகனுக்கு வழங்கப்பட்டுள்ள மருந்துகள் சரிதான். வலிப்பைக் கட்டுப்படுத்தவும் மருந்து தரப்பட்டிருக்கிறது.
இவற்றைத் தொடர்ந்து கொடுத்து வாருங்கள். பொதுவாக, பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் உடலியக்கத்தைச் சீர்செய்ய மூளை செல் இயக்க மருந்துகளோடு இயன்முறை சிகிச்சையும் (Physiotherapy), அன்றாட வாழ்வுக்குத் தேவைப்படும் செயல்பாடுகளுக்கான சிறப்புப் பயிற்சிகளும் (Occupational Therapy) வழங்கப்பட வேண்டும். இவை குறித்தும் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.
கோழி ஈரலைவிட ஆட்டு ஈரல் நல்லது என்கிறார்களே, உண்மையா? - க. கோமதி, அழகர்கோயில்.
உண்மைதான். இரும்புச் சத்தும் விட்டமின் – பி12 சத்தும் கிடைப்பதற்குத்தான் ஈரல் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், விட்டமின் – பி12 சத்து, சைவ உணவில் அவ்வளவாக இல்லை. கோழி ஈரல், ஆட்டு ஈரல் இரண்டிலும் இரும்புச் சத்து அதிகமாக இருக்கும்.
அதேநேரம், திறந்தவெளிகளில் மேய்ந்து வளரும் கோழிகளின் ஈரலில்தான் விட்டமின் – பி 12 சத்து போதிய அளவுக்கு இருக்கும். பண்ணைகளில் தீவனம் கொடுத்து வளர்க்கப்படும் கோழிகளில் இந்தச் சத்து சிறிது குறைவாக இருக்கும். இதனுடன் ஒப்பிடும்போது ஆட்டு ஈரலில் விட்டமின் - பி12 சத்து அதிகம்.
எனக்கு வயது 72. சர்க்கரை நோயும் ரத்தக்கொதிப்பும் உள்ளன. இரண்டுக்கும் சிகிச்சை எடுத்துவருகிறேன். இரண்டும் நல்ல கட்டுப்பாட்டில்தான் உள்ளன. என்றாலும், சில நேரம் படுக்கையைவிட்டு எழுந்திருக்கும்போது மயக்கம் வருகிறது. இது ஏன்? இதை எப்படித் தவிர்ப்பது, டாக்டர்? - எஸ். சிவசுப்பிரமணியன், காஞ்சிபுரம்.
உங்கள் பிரச்னைக்கு ‘நிலை மயக்கம்’ (Postural Hypotension) என்று பெயர். முதுமை காரணமாக ரத்தக் குழாய்களின் உள்சுவர் தடித்து, சுருங்கி விரியும் தன்மையை இழந்துவிடும். உடலின் கீழ்ப்பகுதியிலிருந்து மேல்பகுதிக்கு ரத்தம் செல்லச் சிரமப்படும். இதனால், திடீரென ரத்த அழுத்தம் குறைந்து, மூளைக்குச் செல்லும் ரத்தம் குறையும். அப்போது மயக்கம் வரும்.
குறிப்பாக நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து எழுந்திருக்கும்போது, காலையில் படுக்கையிலிருந்து எழும்போது, சாப்பிட்டு முடித்தவுடன், சிறுநீர்/மலம் கழித்ததும் எனப் பல சூழல்களில் மயக்கம் வருவது இதனால்தான்.
இதைத் தவிர்க்க, கட்டிலின் தலைப்பகுதியை அரை அடி உயர்த்திக்கொள்ளலாம். தொடர்ந்து நீண்ட நேரம் படுப்பதையும் ஒரே இடத்தில் உட்கார்வதையும் தவிர்ப்பது நல்லது. சட்டென்று நேராக எழுந்திருக்காமல் தலையைப் பக்கவாட்டில் திருப்பிக்கொண்டு மெதுவாக எழுந்திருக்க வேண்டும்.
ஒரே வேளையில் வயிறு முட்டச் சாப்பிடுவதைவிட அரை வயிற்றுக்கு அடிக்கடி சாப்பிடுங்கள். சிறுநீர்/மலம் கழிக்கும்போது முக்கக் கூடாது. மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். கால்களில் ‘கால் மீளுறை’களை (Elastic Stockings) அணிந்து கொள்ளுங்கள்.
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்; gganesan95@gmail.com