டாக்டர் பதில்கள் 46: பிராய்லர் கோழி சாப்பிட்டால் பூப்பெய்தும் வயது குறையுமா?

டாக்டர் பதில்கள் 46: பிராய்லர் கோழி சாப்பிட்டால் பூப்பெய்தும் வயது குறையுமா?
Updated on
3 min read

என் கணவருக்குச் சர்க்கரை நோய் இருக்கிறது. இன்சுலின் ஊசி மருந்து எடுத்துக் கொண்டுள்ளார். இந்த நோயுள்ளவர்கள் உண்ணாவிரதம் இருப்பது நல்லது எனக் கருதி உண்ணாவிரதம் இருக்கிறார். இதனால் பிரச்சினை வருமா, டாக்டர்? - கே. சித்ரா, கோயம்புத்தூர் - 26

உங்கள் கணவர் விரதம் இருக்கும் முன்பு மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெற்றாரா என்பதை நீங்கள் குறிப்பிடவில்லை. அப்படி ஆலோசிப்பது மிகவும் அவசியம். காரணம், உங்கள் கணவர் காலையில் எடுத்துக்கொள்ளும் இன்சுலின் ஊசி மருந்தின் அளவு, அவர் காலையில் சாப்பிடும் உணவின் அளவைக் கொண்டுதான் தீர்மானிக்கப்பட்டிருக்கும்.

விரதம் இருந்து இன்சுலின் ஊசி மருந்தையும் எடுத்துக்கொண்டால், ரத்தச் சர்க்கரை குறைந்துவிடும். ஆகவே, விரதம் இருக்கும் உங்கள் கணவர் இன்சுலின் ஊசி மருந்து எடுத்துக்கொள்ளும் நேரத்தை மாற்றிக்கொள்வது நல்லது.

இரைப்பையில் புண்ணும் செரிமானக் கோளாறுகளும் இல்லை என்றால், சர்க்கரை நோயாளிகள் விரதம் இருப்பதில் தவறில்லை. தினமும் ஒரு வேளை விரதம் இருப்பதுதான் சரி. காலை உணவைச் சாப்பிடாமல் மதிய உணவில் தொடங்கி இரவு எட்டு மணிக்குள் இரவு உணவை முடித்துக்கொள்வது சிறந்த முறை. காலை உணவு தேவைப்பட்டால் காலை, மதியம் உணவு எடுத்துக்கொண்டு, மாலையில் சிறிய அளவில் ஆரோக்கியத் தீனி சாப்பிட்டு முடித்துக்கொள்ள வேண்டும்.

விரதம் தவிர்த்து அடுத்ததாக இரண்டு வேளை சாப்பிடும்போது அதிக கவனம் தேவை. குறிப்பாக, உணவின் அளவு மிகவும் முக்கியம். உணவைக் குறைக்கிறேன் என்று சொல்லி ஊட்டச்சத்துகளைக் குறைத்துவிடக் கூடாது. விரதம் இருப்பவர்கள் இரு வேளை உணவை வீட்டில் சாப்பிடுவதே நல்லது.

ஹோட்டல்களில் சாப்பிட்டால் எப்படியும் உணவின் அளவும் கலோரிகளும் கூடிவிடும். விரதம் இருந்தும் பலன் கிடைக்காது. விரதம் இருக்கும் நேரத்தில் பால், பழம் போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது. தேவைப்பட்டால் உப்பு கலந்த எலுமிச்சைச் சாறு, நெல்லிச்சாறு, கிரீன் டீ அல்லது காய்கறி சூப் அருந்தலாம்.

எனக்கு வயது 23. சோரியாசிஸ் நோயால் கடந்த நான்கு வருடங்களாகப் பாதிக்கப்பட்டுள்ளேன். அலோபதி மருத்துவத்தில் சிகிச்சை எடுத்துப் பார்த்தும் பலனில்லை. சித்த மருத்துவமும் உதவவில்லை. இதற்கு வேறு எதுவும் மருத்துவத் தீர்வு உண்டா, டாக்டர்? - கீர்த்தி, தஞ்சை.

சோரியாசிஸ் நோய் என்பது தன்னுடல் தாக்கும் நோய் (Auto immune disease) வகைப்பாட்டைச் சார்ந்தது. நம் உடலில் உள்ள நோய்த் தடுப்பாற்றல் மண்டலத்தின் தவறான அணுகுமுறையால் இது ஏற்படுகிறது. இந்த நோய் ஒரு பருவத்தில் அறிகுறிகளை அதிகப்படுத்தும்; மறு பருவத்தில் அந்த அறிகுறிகளைத் தானாகவே குறைத்துக் கொண்டுவிடும். இதற்கு நிரந்தரத் தீர்வு கிடைப்பது கடினம். என்றாலும், இதை வென்றவர்களும் இருக்கிறார்கள். இது அவரவர் உடல் தன்மையைப் பொறுத்தது.

நவீன மருத்துவத்தில் இப்போது ‘உயிரின மருந்துகள்’ (Biological Drugs) எனும் புதுவித மருந்துகள் வந்துள்ளன. ஊசி மூலம் செலுத்தப்படும் இந்த மருந்துகளின் விலை சற்றே அதிகம். ஒரு முறை பயன்படுத்தப்படும் ஊசி மருந்தின் விலை 7,000லிருந்து 12,000 ரூபாய் வரை இருக்கும். முதல் மாதம் மொத்தம் நான்கு ஊசிகள் செலுத்தப்பட வேண்டும். அதற்குப் பிறகு மாதம் ஓர் ஊசி செலுத்தப்பட வேண்டும். இதற்கு நீங்கள் தயார் என்றால் சருமநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள்.

பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பூப்பெய்தி விடுகிறார்கள் என்கிறார்களே, அது உண்மையா, டாக்டர்? - சீதா, கோவை.

இது முற்றிலும் அறிவியலுக்குப் புறம்பான தகவல். அறிவியல் ரீதியாகச் சாத்தியம் இல்லாதது. குறைந்த விலையில் மிகுந்த புரதம் உள்ள உணவு பிராய்லர் கோழி ஒன்றுதான். பிராய்லர் கோழிகளை வளர்க்க ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றன என்றும் இதனால் இந்த இறைச்சியைச் சாப்பிடும் பெண் குழந்தைகள் சீக்கிரத்தில் பருவமடைகிறார்கள் என்றும் நம்புகின்றனர்.

இது தவறானது. காரணம், கோழிகளுக்கு ஹார்மோன் ஊசிகள் போடப்படவேண்டுமானால் அதிகம் செலவாகும். அப்படி அதிகம் செலவழித்து வளர்த்த கோழிகளைக் குறைந்த விலைக்கு விற்க யாரும் முன்வர மாட்டார்கள். பிராய்லர் கோழிகள் சீக்கிரம் வளர்வதற்குக் காரணம் அவை சாப்பிடும் ஊட்டச்சத்தும் புரதமும் நிறைந்த தீவனம்தானே தவிர, ஹார்மோன் ஊசிகள் அல்ல.

மருத்துவ ஆராய்ச்சிகளின்படி, இப்போது பெண் குழந்தைகள் சீக்கிரத்தில் பருவமடைவதற்கு மாறியுள்ள உணவுமுறையும் உடல் பருமனும்தான் காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் மாவுச்சத்து மிகுந்த நொறுக்குத் தீனிகள், அரிசிச் சோறு, இட்லி, தோசை, இடியாப்பம் போன்றவற்றை அதிக அளவில் சாப்பிடுகிறார்கள்.

இவர்கள் உடற்பயிற்சி எதுவும் செய்வதில்லை. இதனால் உடல் பருமன் ஏற்படுகிறது. அப்போது உடலில் தேங்கி நிற்கும் கொழுப்பிலிருந்து ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கூடுதலாகச் சுரக்கிறது. இதுதான் இவர்களைச் சீக்கிரத்தில் பருவமடைய வைக்கிறது.

கடந்த நூறு வருடங்களில், உலகம் முழுவதும் இயல்பாகவே பெண் குழந்தைகள் பருவமடையும் வயது 3 முதல் 4 ஆண்டுகள் வரை சராசரியாகக் குறைந்துள்ளது. குழந்தைகள் அவரவர் உடல் தன்மையைப் பொறுத்து பருவம் அடைகின்றனர். சைவ உணவு சாப்பிடும் பெண் குழந்தைகளும் சிறிய வயதில் பருவமடைகின்றனர். ஆகவே, பெண் குழந்தைகள் சிறு வயதிலேயே பருவமடைவதற்கு குறிப்பிட்ட உணவு வகை மீது பழி சுமத்துவது தவறு.

- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்; gganesan95@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in