

எனக்கு வயிற்றுப் பகுதியிலும் நெற்றிப் பகுதியிலும் சிறு உருண்டைகள் போல் சில கட்டிகள் உள்ளன. அவற்றில் வலி எதுவும் இல்லை. இதனால் பாதிப்பு உண்டா? இதற்கு என்ன சிகிச்சை? - யூ. தௌபிக், மத்தியச்சிறை, சேலம்.
பொதுவாக, இந்த வகைக் கட்டிகள் சாதாரண கட்டிகளாகவே இருக்கும். கொழுப்புக் கட்டி அல்லது தசைக் கட்டி வகைகளாகவே இருக்கும். இவை அவ்வளவாகத் தொல்லை தராது. வலி ஏற்பட்டாலோ அளவில் பெரிதாக வளர்ந்தாலோ அருகில் உள்ள உறுப்புகளை அழுத்தினாலோ இவற்றைச் சிறு அறுவை சிகிச்சை செய்து அகற்றிவிடலாம். அதுவரை இவற்றை அப்படியே விட்டுவிடலாம். என்றாலும், நீங்கள் ஒருமுறை சிறை மருத்துவரிடம் நேரில் கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள். நான் சொல்வதுபோல் உங்களுக்கு உள்ள கட்டிகள் சாதாரண கட்டிகள்தானா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அதுதான் நல்லது.
என் தாய்க்குத் தைராய்டு பிரச்சினை இருந்தது. எனக்கும் தைராய்டு பிரச்சினை உள்ளது. இதற்கு மரபுதான் காரணமா? - வெ. நந்தினிதேவி, திருக்காட்டுப்பள்ளி.
மரபுப் பண்புகள் அம்மா, அப்பா வழியாக வாரிசுகளுக்குக் கடத்தப்படும்போது, பெற்றோருக்கு இருக்கும் சில நோய்கள் அவர்களின் வாரிசுகளுக்கும் கடத்தப்படுவது உண்டு. அந்த வகையில் உங்களுக்குத் தைராய்டு பிரச்சினை வர அதிக சாத்தியம் உள்ளது. ஆனாலும், இதை மட்டுமே காரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. தற்போது ‘தன்னுடல் தாக்கும் நோய்’ (Auto-immune disease) காரணமாகவும் பலருக்குத் தைராய்டு சுரப்பி பாதிக்கப்படுகிறது.
அதாவது, நம் உடலின் நோய்த் தடுப்பாற்றல் மண்டலம் தன்னிலை மறந்து, நம் தைராய்டு சுரப்பித் திசுக்களைத் தீங்கு தரும் திசுக்களாகப் பாவித்து அவற்றோடு போராடுகிறது. அப்போது தைராய்டு ஹார்மோன் சுரப்பது குறைந்து, ‘குறை தைராய்டு’ (Hypothyroidism) பிரச்சினை ஆரம்பிக்கிறது. சிலருக்கு அயோடின் பற்றாக்குறை இருக்கும்போது இப்பிரச்சினை தூண்டப்படுகிறது.
இன்னும் சிலருக்குக் கர்ப்ப காலத்தில் தைராய்டு சுரப்பது குறையும். இது பிரசவத்துக்குப் பிறகும் நீடித்துவிடும். அரிதாகச் சிலருக்கு பிட்யூட்டரிச் சுரப்பிக் கோளாறு காரணமாகவும் தைராய்டு ஹார்மோன் சுரப்பது பாதிக்கப்படலாம். சில ரத்தப் பரிசோதனைகள் செய்து, உங்கள் தைராய்டு பிரச்சினைக்கு எந்தக் காரணம் என்பதை குடும்ப மருத்துவரிடம் கலந்தாலோசித்துக் கொள்ளுங்கள்.
மூன்று மாதங்களுக்கு முன்பு எனக்குப் பக்கவாதம் வந்து, ஒரு மணி நேரத்துக்குள் நரம்பு மருத்துவரிடம் சென்றதால் நான்கு நாள்களில் முற்றிலும் குணப்படுத்தி விட்டார். தற்சமயம் எனக்கு எந்தவிதத் தொந்தரவும் இல்லை. ஆனால், இன்னமும் STROLIN P 800 mg, ORACITAM 500mg போன்ற மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவர். அப்படி உட்கொண்டால் சிறுநீரகப் பாதிப்பு வருமா? எனக்கு ‘பிபி’ இல்லை; ‘சுகர்’ இல்லை. - நவநீதம், கும்பகோணம்.
இன்றைய நவீன மருத்துவத்தில் பக்கவாத அறிகுறிகள் ஏற்பட்ட ஒரு மணிநேரத்துக்குள் சரியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால், அதை முற்றிலும் குணப்படுத்திவிடலாம் என்பதற்கு நீங்கள் சரியான உதாரணம்.
அதுபோல், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை இருந்தால்தான் பக்கவாதம் ஏற்படும் என்கிற தவறான நம்பிக்கையும் பொதுச் சமூகத்தில் இருக்கிறது. அதையும் நீங்கள் உடைத்திருக்கிறீர்கள். உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை இல்லாமலும் பக்கவாதம் ஏற்படும்; எச்சரிக்கை தேவை என்பதைச் சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.
பொதுவாக, மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால்தான் பக்கவாதம் வரும். உங்களுக்குத் தகுந்த நேரத்தில், தகுந்த மருந்துகள் கொடுக்கப்பட்டு அது சரிசெய்யப்பட்டுவிட்டது. ஆனாலும், மூளை செல்கள் மறுபடியும் பாதிப்படைய சாத்தியம் உள்ளது.
அதைத் தடுக்கவே உங்களுக்குச் சில மாத்திரைகளைப் பரிந்துரைத்திருக்கிறார் மருத்துவர். உணவும் பிராணவாயுவும் சரியான அளவில் மூளைக்குச் செல்ல வழி வகுத்து, மூளை செல்கள் பாதிப்படைவதைத் தடுக்கும் பண்பு உள்ள இந்த மாத்திரைகளால் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுகிற சாத்தியம் மிக மிகக் குறைவு. ஆகவே, நீங்கள் இவற்றைத் தொடர்ந்து எடுத்துக்கொள்வதே நல்லது.
- gganesan95@gmail.com