டாக்டர் பதில்கள் 44: மனநலத்துக்கு வாழ்நாள் முழுக்க மாத்திரை தேவையா?

டாக்டர் பதில்கள் 44: மனநலத்துக்கு வாழ்நாள் முழுக்க மாத்திரை தேவையா?
Updated on
3 min read

ஜப்பானிய நீர் சிகிச்சை முறை நிரூபிக்கப்பட்ட ஒன்றா? தெளிவுபடுத்துங்கள். - லாவண்யா, ஆதம்பாக்கம், சென்னை.

உடல் எடையைக் குறைப்பதற்கும் செரிமானத்தைச் சீராக்கு வதற்கும் உடலுக்குச் சக்தி கிடைப்பதற்கும் ஜப்பானிய நீர் சிகிச்சை முறை சமூக வலைதளங்களில் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், இச்சிகிச்சை முறைக்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லை.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் என் கணுக்காலில் கரப்பான் நோய் வந்து அரிப்பு ஏற்பட்டது. பிறகு, சிகிச்சை பெற்று கரப்பான் சரியாகிவிட்டது. ஆனால், இன்னும் அந்த இடத்தில் தழும்பு இருக்கிறது. இதைச் சரிசெய்வது எப்படி? - ஜி. செல்வமுத்துக்குமார், சிதம்பரம்.

உங்களுக்குக் கரப்பான் பிரச்சினை இன்னும் முழுவதுமாகச் சரியாகவில்லை என்றே தெரிகிறது. அரிப்பு நின்றதும் நோய் சரியாகிவிட்டதாகக் கருதிவிட்டீர்கள் என நினைக்கிறேன். சரும நல மருத்துவரைச் சந்தித்து, கரப்பான் நோய்க்குத் தொடர்ந்து சிகிச்சை எடுத்துவாருங்கள். தழும்பு மறையவும் களிம்புகள் உள்ளன. நீங்கள் குளித்து முடித்ததும் சருமத்தை ஈரப்படுத்தும் களிம்புகளை மருத்துவர் யோசனைப்படி கணுக்காலில் தொடர்ந்து பூசிக்கொண்டு வாருங்கள். அப்போதுதான் தழும்பு மறையும்.

‘மீல் மேக்கர்’ அடிப் படையில் எதிலிருந்து தயாரிக்கப்படுகிறது? இதைச் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன? அதைத் தொடர்ந்து சாப்பிடுவதால் உடலுக்குக் கெடுதல்கள் உண்டா? - ஏ. அன்பரசு, செங்கல்பட்டு.

சோயா பீன்ஸில் இருந்து சோயா பால் தயாரிக்கப்படுகிறது. சோயா பால் கழிவுகளில் இருந்து சோயா எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் உற்பத்தியில் கிடைக்கும் கழிவுகளில் இருந்து மீல் மேக்கர் தயாரிக்கப்படுகிறது. அசைவ உணவுக்கு மாற்றாக மீல் மேக்கர் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதை முதலில் தயாரித்து விற்ற நிறுவனத்தின் பெயர் ‘மீல் மேக்கர்’ என்பதால், இந்தப் பெயர் நிலைத்துவிட்டது. இது 1980களில் விருந்துகளில் வெஜிடபிள் பிரியாணி தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டது.

மீல் மேக்கரில் புரதம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம், துத்தநாகம், செலினியம் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. நூறு கிராம் மீல் மேக்கரில் சுமார் 50 கிராம் புரதம் உள்ளது. இது நீண்ட நேரம் வயிறு நிறைந்தது போன்ற உணர்வைத் தருகிறது; அடிக்கடி சாப்பிட வேண்டும் என்கிற ஆர்வத்தைக் குறைக்கிறது.

அதனால், இந்தப் புரதம் உடல் கொழுப்பைக் குறைக்கவும் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது. இதிலுள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலம் இதய நலத்துக்கு நல்லது. இதில் கொழுப்பு குறைவு. அதனால், உடல் பருமன் உள்ளவர்கள் இதை உட்கொள்ளலாம்.

சைவ உணவாளர்கள் இதை இறைச்சிக்கு மாற்றாக எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக, புரதக் குறைபாட்டால் அவதிப்படுபவர்களுக்கு மீல் மேக்கர் சிறந்த உணவு. இதைத் தொடர்ந்து உட்கொள்வதால் பெரிதாகக் கெடுதல் எதுவும் ஏற்படாது.

நான் கடந்த 30 வருடங்களாக மனநலத்துக்கு மருந்து சாப்பிட்டுவந்தேன். எனக்குச் சர்க்கரை நோயும் உள்ளது. இதற்கும் மாத்திரைகள் சாப்பிட்டுவருகிறேன். என் சர்க்கரை நோய் மருத்துவர் மனநல மாத்திரைகளைச் சாப்பிட வேண்டாம் என்று கூறிவிட்டார். இரவில் உறக்கத்துக்கு மட்டும் மாத்திரை சாப்பிட்டால் போதும் என்றார். கடந்த மூன்று மாதங்களாக நான் அப்படித்தான் மாத்திரை சாப்பிட்டுவருகிறேன். ஆனால், தற்போது எனக்கு நானே பேசிக்கொள்வது ஆரம்பித்துள்ளது. இதனால், நான் முன்பு சாப்பிட்ட மனநல மாத்திரையைத் தொடர வேண்டுமா? மேலும், மனநல மாத்திரையை வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டும் என்று சொல்கிறார்களே, இது உண்மையா? - மா. சுப்புலட்சுமி, விருதுநகர்.

நீங்கள் எடுத்துவந்த மனநல மாத்திரையை மனநல மருத்துவரைக் கலந்தாலோ சிக்காமல் நிறுத்தியது தவறு. சர்க்கரை நோய் மருத்துவர் உங்களுக்குச் சரியான வழிகாட்டுதலைத் தரவில்லை. எதற்காக உங்கள் மனநல மாத்திரையை அவர் நிறுத்தச் சொன்னார் என்பதும் தெரியவில்லை. எது எப்படியென்றாலும், இப்போது உங்களுக்கு மறுபடியும் மனநலப் பிரச்சினை ஆரம்பித்துவிட்டது.

ஆகவே, அதற்கு மருத்துவம் தேவை. இப்போது நீங்கள் ஏற்கெனவே எடுத்துக்கொண்ட மனநல மாத்திரையைத் தொடர்வதா, புது வகை மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பதை உங்கள் மனநல மருத்துவர்தான் தீர்மானிக்க முடியும். தற்போது உங்கள் மனநலம் தொடர்பான பிரச்சினை எந்தத் தன்மையில் உள்ளது என்பதைத் தெரிந்துகொண்ட பிறகே அவர் உங்களுக்கு மருந்துகளைப் பரிந்துரைப்பார். ஆகவே, உடனடியாக உங்கள் மனநல மருத்துவரைச் சந்தியுங்கள்.

அடுத்து, மனநல மாத்திரையை வாழ்நாள் முழுவதும் சாப்பிட வேண்டும் எனும் கருத்து பொதுச் சமூகத்தில் இருப்பது உண்மைதான். ஆனால், இது எல்லாருக்கும் பொருந்துவதில்லை; எல்லா மனநோய்களுக்கும் பொருந்துவதில்லை. சில விதிவிலக்குகளும் உண்டு.

சில மனநல மாத்திரைகளைக் குறைக்கலாம்; நிறுத்தலாம். இதை நீங்களாக முடிவுசெய்ய முடியாது. உங்களுக்கு உள்ள வேறு நோய்களின் நிலை குறித்து அறிந்த பிறகும் உங்கள் மன நோய் கட்டுப்பாட்டைப் பொறுத்தும் மனநல மாத்திரைகளின் விளைவுகளைப் பொறுத்தும் உங்கள் மனநல மருத்துவர்தான் அதைத் தீர்மானிப்பார்.

- gganesan95@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in