Published : 05 May 2018 10:51 am

Updated : 05 May 2018 10:51 am

 

Published : 05 May 2018 10:51 AM
Last Updated : 05 May 2018 10:51 AM

மூலிகையே மருந்து 04: ‘மண’ (மகிழ்ச்சிக்கு) தக்காளி!

04

 

யராது உழைக்கும் உடலின் உள்ளுறுப்புகளைச் சாந்தப்படுத்துவதால், ‘இயற்கையின் கூலிங் ஏஜென்ட்’ என மணத்தக்காளிச் செடிக்குச் செல்லப்பெயர் சூட்டலாம். வாய் முதல் ஆசனவாய்வரை, வெப்பம் காரணமாக எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையில் மணத்தக்காளி பார்த்துக்கொள்ளும்.

பயனும் பெயரும் அறியாமலேயே, கிராமத்துச் சிறுவர்கள் ருசி பார்க்கும் மணத்தக்காளிப் பழம், பசி தீர்க்கும். உடல் வெப்பத்தைக் குறைக்கும். பலன்கள் நிறைந்த மணத்தக்காளிப் பழத்தை ‘கருப்பு முத்து’ என்றும் அழைக்கலாம்.

பெயர்க்காரணம்:

தக்காளிக் குடும்பத்தைச் சார்ந்து, தக்காளிபோல சிறிய உருவ அமைப்புடன், வாசனை நிறைந்த பழங்களைக் கொண்டிருப்பதால், ‘மணத்தக்காளி’ என்ற பெயர் உருவானது. சிறுசிறு மணிகள்போல இதன் பழங்கள் உருண்டிருப்பதால் ‘மணித்தக்காளி’ என்றும், மிளகளவு பழங்களைக் கொண்டிருப்பதால் ‘மிளகுத்தக்காளி’ என்றும் அழைக்கப்படுகிறது. இவை தவிர்த்து உலகமாதா, விடைக்கந்தம், வாயசம், காகமாசீ போன்ற பெயர்களும் உண்டு.

அடையாளம்:

சற்று அடர்ந்த பச்சை நிற இலைகளைக்கொண்ட செடி வகையைச் சார்ந்தது. மெல்லிய தண்டு அமைப்புடன், சிறுசிறு வெள்ளை நிறப் பூக்களைப் பூக்கும். கறுப்பு நிறத்தில் உருண்டையான சிறு பழங்களைக் கொண்டது. இதன் பழுக்காத காய்களை உட்கொள்வது நல்லதல்ல.

‘சொலானம் நிக்ரம்’ (Solanum nigrum) எனும் தாவரவியல் பெயர்கொண்ட மணத்தக்காளியின் குடும்பம் ‘சொலனாசியே’ (Solanaceae). மணத்தக்காளியில் ‘சொலாமார்கின்’ (Solamargine), ‘சொலாசொடின்’ (Solasodine), ‘கூமரின்ஸ்’ (Coumarins), ‘பைட்டோஸ்டெரால்ஸ்’ (Phytosterols) என தாவரவேதிப் பொருட்கள் அதிகம்.

உணவாக:

‘மலமிளகுந் தானே மகாகபமும் போகும் பலமிகுந்த வாதம்போம்’ எனும் அகத்தியரின் பாடல் வரி, மணத்தக்காளியின் ஆற்றலை விளக்குகிறது. இலைகளைப் பருப்புச் சேர்த்துக் கடைந்து, மணத்தக்காளி வற்றலைத் தூவி, கூடவே சீரகத்தையும், சின்ன வெங்காயத்தையும் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட வயிற்றுப் புண், ரத்தக் குறைவு, உடற்சோர்வு போன்றவை நீங்கும்.

மணத்தக்காளி கீரை மிகவும் சுவையானதும்கூட! குழந்தைகளுக்கு மணத்தக்காளிக் கீரையைக் கொடுக்க உடல் ஊட்டம் பெறும். மணத்தாக்காளிக் கீரையுடன் பசலைக் கீரையைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது வேனிற்கால நோய்களைத் தடுப்பதற்கான சிறந்த உணவு!

மணத்தக்காளிப் பழங்களை உலர வைத்து வற்றலாகப் பயன்படுத்தலாம். நாக் கசப்பு, வாந்தியை நிறுத்தும். நுரையீரல் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்கும். சிறுநீரை அதிகரித்து, சிறுநீர்ப் பாதை தொடர்பான நோய்களையும் குணமாக்கும். வற்றலை நெய்யில் லேசாக வதக்கிய பின்பு பயன்படுத்தலாம்.

மருந்தாக:

செரிமானப் பாதையில் உண்டாகும் புற்றுநோய் சார்ந்த ஆய்வில் மணத்தக்காளி சிறந்த முடிவுகளைக் கொடுத்திருக்கிறது. ஈரல் பாதிப்புகளைத் தடுக்கும் ஆற்றல் மணத்தக்காளிக்கு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுப்பதாகவும் (Anti-proliferative activity) சமீபத்திய ஆய்வு உறுதிப்படுத்துகிறது.

வீட்டு மருத்துவமாக:

வயிற்றிலும் குடல் பகுதியிலும் உண்டாகும் புண்களைக் குணப்படுத்தும் தன்மை மணத்தக்காளிக்கு உண்டு. வாய்ப்புண் ஏற்பட்ட உடன் தேடப்படும் முதல் மூலிகை மணத்தக்காளிதான். மணத்தக்காளிக் கீரையைச் சாப்பிட்டாலோ அதன் பழங்களைச் சாப்பிட்டாலோ வாய்ப்புண் குணமடையும்.

மணத்தக்காளியைக் கீரையாகப் பயன்படுத்தினால் சளி, இருமல் போன்ற கப நோய்களும் விலகும் என்கிறது சித்த மருத்துவம். மணத்தக்காளிச் செடியை அரைத்து நீரிலிட்டுக் காய்ச்சி, அந்த நீரைக்கொண்டு பிறப்புறுப்பைக் கழுவ வெள்ளைப்படுதல் குறையும்.

வளர்ப்பு:

பழங்களைப் பிசைந்து விதைகளைத் தூவி தொட்டிகளில்கூட வளர்த்துக்கொள்ளலாம். ஒரு மழை பெய்தால் போதும், விதைப் பரவல் மூலம் ஏற்கெனவே மண்ணில் புதைந்து கிடக்கும் மணத்தக்காளி விதைகள் முளைக்கத் தொடங்கிவிடும். மணத்தாக்காளியைப் போன்றே உருவ அமைப்புடைய சில செடிகள் சாப்பிட உகந்தவையல்ல. தாவரத்தை உண்பதற்குமுன் மணத்தக்காளிதானா என்று உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

மணத்தக்காளியை முறைப்படி சாப்பிட்டு வந்தால், ‘திருமணத்தால் உண்டாகும் மகிழ்ச்சி’ ஏற்பட்டு உடல்நலம் பெறும் என்கிறது சித்த மருத்துவம். மண் பானை மணக்கும் மணத்தக்காளி வற்றல் தூவப்பட்ட காரக்குழம்பின் ருசி, அன்று மட்டுமல்ல இன்றும் பலரது நாவைச் சப்புக்கொட்ட வைப்பதில் கில்லாடி. தூரத்துலிருந்து மண்சட்டியைப் பார்க்கும்போதே, நாவில் செரிமானச் சுரப்புகள் படர்ந்து, ஆரோக்கியத்துக்கு அஸ்திவாரம் அமைக்கத் தொடங்கிவிடும்!

கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர் தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author