டாக்டர் பதில்கள் 43: வீசிங்கைக் குணப்படுத்த முடியுமா?

டாக்டர் பதில்கள் 43: வீசிங்கைக் குணப்படுத்த முடியுமா?
Updated on
3 min read

என் அக்காவுக்கும் ஒன்பது வயதாகும் அவள் மகனுக்கும் வீசிங் (wheezing) பிரச்சினை உள்ளது. மகன் இரவில் இருமிக்கொண்டே இருக்கிறான். தூக்கத்தில் மூச்சை இழுக்கும் போது வரும் சத்தம் மனதை வருத்துகிறது. அக்கா, தான் உபயோகிக்கும் ‘Puff’ மருந்தி னைத் தனது மகனுக்கும் செலுத்தி ஆசுவாசம் கொள்ளச் செய்கிறாள். ‘வீசிங்'கைக் குணப்படுத்த முடியாதா? குறைந்தபட்சம் குழந்தையாவது இதிலிருந்து மீள வழி உண்டா, டாக்டர்? - அல்மாஸ் அகமது, மண்ணடி சென்னை.

ஆஸ்துமா பரம்பரையாக வரும் பாதிப்புதான். ஆனால், அப்படி வரவேண்டுமெனக் கட்டாயம் இல்லை. சுற்றுச்சூழல் மாசு, ஒவ்வாமை ஆகிய இரண்டும் அடுத்த காரணங்கள். ஒவ்வாமையில் சைனஸ் ஒவ்வாமையும் உணவு ஒவ்வாமையும்தான் முதன்மைக் காரணங்களாக இருக்கும்.

குழந்தைகளுக்குப் பெரும்பாலும் பசும்பாலில் உள்ள புரதம் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அப்போது இரைப்பையில் அமிலம் அதிகமாகச் சுரந்து உணவுக்குழாய்க்குள் மேலே ஏறிச் சென்று புண் உண்டாக்கும் (GERD). இதனால் ஆஸ்துமா பாதிப்பு ஏற்படும்.

பொதுவாக, பெரியவர்களுக்கு ஏற்படும் இந்தப் பாதிப்பு, இப்போது குழந்தைகள் பலருக்கும் மிகப் பரவலாக உள்ளது. இப்படி, ஆஸ்துமாவுக்கு என்ன காரணம் எனக் கண்டறிந்து மருந்துகள் கொடுத்து, அதோடு ஆஸ்துமாவுக்கான மருந்துகளையும் எடுத்துக்கொள்ளச் சொல்லுங்கள், பிரச்சினை கட்டுப்படும். அடுத்து, அம்மா எடுத்துக்கொள்ளும் இன்ஹேலர் மருந்துகளைக் குழந்தைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது. வயதுக்கு ஏற்ப மருந்தின் அளவும் மாறும். இன்ஹேலர் மருந்தைத் தேர்வு செய்ய மருத்துவர் ஆலோசனை தேவை.

எனக்கு வயது 72. கடந்த பல ஆண்டு களாக BPக்கு மாத்திரை சாப்பிட்டு வந்தேன். அவ்வப்போது BP செக் செய்யும்போது நார்மல் [120/70] எனத் தெரிய வந்ததால், தற்போது மாத்திரை எடுப்பதை நிறுத்திவிட்டேன். ஆனால், BPக்குத் தொடர்ந்து மாத்திரை சாப்பிட வேண்டும் எனச் சிலர் கூறுகின்றனர். இது உண்மையா? நார்மல் எனத் தெரிந்த பிறகும் மாத்திரையைத் தொடர வேண்டுமா? விவரம் தெரிவித்தால் நலம். - அ. மாரியப்பன், விருதுநகர்.

உயர் ரத்த அழுத்த நோய்க்குத் தொடர்ந்து மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மாதம் ஒருமுறை உங்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதித்துக்கொள்ளுங்கள். உங்கள் தேவைக்கு ஏற்ப குறைந்த அளவிலாவது மாத்திரையை எடுத்துக்கொள்வதுதான் நல்லது. பொதுவாக, வயதான பிறகு ஒருவர் கைத்தடி உதவியுடன் நடக்கப் பழகிவிட்டால், எப்படி அதை விட முடியாதோ அது மாதிரிதான், உயர் ரத்த அழுத்த மாத்திரைகளும்.

மன வலிமை உள்ள சிலர் கைத்தடி இல்லாமல் நடந்து பார்ப்பார்கள். அப்படி நடக்கும்போது எதிர்பாராமல் அவர்கள் தடுமாறி விழுந்து விடுவார்கள். அப்படித்தான், ரத்த அழுத்தம் இயல்பாக இருக்கிறது எனச் சிலர் அதற்கான மாத்திரை எடுத்துக் கொள்வதை நிறுத்திவிடுவார்கள். ஒருநாள் திடீரென்று மயக்கம் வந்து மருத்துவமனைக்கு வருவார்கள். பரிசோதித்தால் ரத்த அழுத்தம் இயல்பை விட மிக அதிகமாக இருக்கும்.

இப்படிப் பலரை மருத்துவர்களாகிய நாங்கள் பார்த்திருக்கிறோம். இதனால்தான் உயர் ரத்த அழுத்த நோயை ‘அமைதியான ஆள்கொல்லி’ என்று அழைக்கிறோம். இந்தப் பிரச்சினை உள்ளவர்களுக்கு எப்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கும் என்று கூற முடியாது. ஆகவே, நீங்கள் ரத்த அழுத்தத்துக்கு மாத்திரை எடுத்துக் கொள்வதுதான் பாதுகாப்பு.

நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக ‘க்ரோன் நோய்’ (Crohn's disease) வந்து அவதிப்படுகிறேன். வெளியில், விஷேச இடங்களில் சாப்பிட்டாலே வயிற்றில் பிரச்சினை ஆகி அடிக்கடி வயிற்றுக் கழிச்சல் தொல்லை ஆரம்பமாகிவிடுகிறது. வியாபாரம் தொடர்பாக நான் அடிக்கடி வெளியூர்களுக்குச் செல்ல வேண்டிய நிலைமையில் இருக்கிறேன். இதற்கு எந்த மாதிரி உணவை எடுத்துக்கொள்ளலாம்? முக்கியமாக, நான் அசைவ உணவு வகைகளைச் சாப்பிடலாமா, டாக்டர்? - ரா. வேல்வேந்தன், டி. கல்லுப்பட்டி.

உங்களுக்கு வந்துள்ள பிரச்சினை ‘குடல் அழற்சி நோய்’ (Inflammatory Bowel Disease - IBD) வகையைச் சேர்ந்தது. இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு உணவுமுறை முக்கியமானது. நீங்கள் முடிந்தவரை வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது. வீட்டிலிருந்து சாப்பாட்டை எடுத்துக்கொண்டு போய்ச் சாப்பிடுங்கள். முடியாதபோது நான் சொல்லும் உணவுமுறையைப் பின்பற்றுங்கள். காரம் மிகுந்த, புளிப்பு ஏறிய, மசாலா நிறைந்த, எண்ணெய்யில் குளித்த உணவைக் கட்டாயம் ஓரங்கட்ட வேண்டும். இது பொதுவான விதி.

அடுத்து, பால் மற்றும் பால் சார்ந்த உணவு வகைகளான மோர், தயிர், யோகர்ட், நெய், வெண்ணைய், பாலாடைக்கட்டி போன்றவற்றைத் தவிருங்கள். காரணம், இந்த நோயுள்ளவர்களுக்குப் பாலில் ‘லேக்டோஸ்’ எனும் சர்க்கரை ஒத்துக்கொள்ளாது. இதை ‘லேக்டோஸ் ஒத்தியலாமை’ (Lactose intolerance) என்போம்.

நீங்கள் பழைய சாதம் சாப்பிடலாம். இதில் நல்ல நுண்ணுயிரிகள் உங்கள் குடல் நலத்துக்கு உதவும். அடுத்து, அரிசி உணவைச் சாப்பிடலாம். கோதுமை உணவைக் குறைத்துக்கொள்ளுங்கள். பச்சைக் காய்கறிகளை எடுத்துக்கொள்ளாதீர்கள். அவித்த காய்கள் நல்லது. பொரித்த காய்கள் வேண்டாம்.

தோலோடு உள்ள காய்கறிகளையும் விதையுள்ள காய்கறிகளையும் தண்டு உள்ள கீரைகளையும் தவிர்க்கவும். பதிலாக, தோலுரித்த காய்களை எடுத்துக்கொள்ளுங்கள். நார்ச்சத்து குறைவாக உள்ள, சதைப்பற்று அதிகமுள்ள பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள். உதாரணம் – வாழைப்பழம். அசைவ உணவைப் பொறுத்தவரை கோழி இறைச்சி, முட்டை, மீன் எடுத்துக்கொள்ளலாம்.

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவை வேண்டாம். இறைச்சிகளைப் பொறுத்தவரை குழம்பாக்கிச் சாப்பிடுவதே நல்லது. எண்ணெய்யில் வறுத்தல், பொரித்தல் வேண்டாம். சர்க்கரை, இனிப்பு அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிருங்கள். புகை, மது அறவே வேண்டாம். காற்றடைத்த பானங்களைத் தவிருங்கள்.

காபி, தேநீர் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ளுங்கள். கிரீன் டீ குடிக்கலாம். அப்போதே பிழியப்பட்ட பழச்சாறுகள் குடிக்கலாம். செயற்கைப் பழச்சாறுகள் வேண்டாம். மஞ்சள் சேர்த்த உணவு வகைகளை அடிக்கடி எடுத்துக்கொள்ளுங்கள். சோளம், பாப்கார்ன், சாக்லேட்டுகள் வேண்டாம். நட்ஸ் வகைகளைக் குறைவாக எடுத்துக்கொள்ளுங்கள்.

- கட்டுரையாளர், பொது நல மருத்துவர்; gganesan95@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in