மீண்டும் பரவும் நிபா வைரஸ்

மீண்டும் பரவும் நிபா வைரஸ்
Updated on
1 min read

கேரள மாநிலத்தில் 14 வயதுச் சிறுவன் நிபா வைரஸால் உயிரிழந்த நிலையில் 60 பேர் இந்த வைரஸினால் பாதிக்கப் பட்டுள்ளதாக அம்மாநிலச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

நிபா வைரஸ் பரவல் தீவிரமாகியுள்ளதைத் தொடர்ந்து நிபா அறிகுறிகள் உள்ளவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரை 21 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும் எனவும் கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

என்ன காரணம்? - நிபா வைரஸ் விலங்கு களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் விலங்குவழித் தொற்று வகையைச் சேர்ந்தது. பழந்தின்னி வெளவால்கள் மூலமாகவே நிபா வைரஸ் மனிதர்களுக்குப் பரவியிருக்கலாம். பன்றிகள் மூலமாகவும் இவ்வைரஸ் பரவுகிறது.

கேரளத்தைப் பொறுத்தவரை 2018ஆம் ஆண்டில், முதன் முதலாக நிபா வைரஸ் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து 2019, 2021, 2023 ஆகிய ஆண்டுகளில் நிபா வைரஸின் பாதிப்பு அங்கே தொடர்ந்துவருகிறது.

பழந்தின்னி வெளவால்களின் எண்ணிக்கை கேரளத்தில் அதிகமாக இருப்பதாலும் அடர் காடுகள், தீவிரப் பருவநிலை மாறுதல்களைக் கேரளம் கொண்டிருப்பதாலும் நிபா வைரஸின் தாக்கம் அங்கே தொடர்ச்சியாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

நிபா வைரஸ் இதற்கு முன் அசாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அறிகுறிகள்: நிபா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் காய்ச்சல், தலைவலி, தசை வலி, வாந்தி உணர்வு, தொண்டை வலி போன்றவை ஆரம்ப அறிகுறிகளாகக் காணப்படுகின்றன.

தீவிரப் பாதிப்பில் இருப்பவர் களுக்கு மயக்கம், உடல் சோர்வு, தீவிர சுவாசத் தொற்றுகளும் ஏற்படும். மிகை தீவிர பாதிப்பில் மூளைப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டு கோமா, உயிரிழப்பு போன்றவையும் ஏற்படுகின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: நிபா வைரஸுக்கு இதுவரை தடுப்பூசி கண்டறியப்படவில்லை. மக்கள் நெருக்கமாகக் கூடும் இடங்களைத் தவிர்த்தல், முகக் கவசம் அணிதல், கைகளைக் கிருமிநாசினி போட்டுக் கழுவுதல் போன்றவை அடிப்படையான நோய்த் தடுப்பு வழிமுறைகளாக அறிவுறுத்தப்பட்டுள்ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in