

பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்சினையைத் தீர்க்க வழிமுறைகள் என்னென்ன? - பி. நல்லுசாமி, மின்னஞ்சல்.
உடல் பருமன்தான் சினைப்பை நீர்க்கட்டிக்கு (Poly Cystic Ovarian Disease – PCOD) ஊற்றுக்கண். உடல் பருமன் உள்ளவர்களுக்கு ஆன்ட்ரோஜென் ஹார்மோன் அளவோடு சுரந்தால் ஆபத்தில்லை. அது அளவில்லாமல் சுரக்கும்போது நீர்க்கட்டி பிரச்சினை தூண்டப்படுகிறது. பொதுவாகவே, பெண்களுக்குச் சினைப்பையைச் சுற்றித் தேனடைபோல் ஆயிரக்கணக்கான சினைமுட்டைகள் முதிர்ச்சி அடையாமல் இருக்கும்.
இவற்றில் சில அவ்வப்போது நீர்க்கட்டிகளாகத் தோன்றி மறையும். இந்த நீர்க்கட்டிகள் 12க்கும் மேல் இருந்தால், அதை நீர்க்கட்டி என்கிறோம். இந்தக் கட்டிகள் இன்னும் அதிகமாக ஆன்ட்ரோஜெனைச் சுரக்கவைப்பதால், இந்தப் பெண்களுக்கு ஆண் தன்மை அதிகரிப்பதோடு, முகத்திலும் உடலிலும் முடிகள் முளைக்கின்றன. அதேநேரம் தலைமுடி உதிர்கிறது. முகப்பரு தொல்லை தருகிறது. மாதவிடாய் தள்ளிப்போகிறது.
உடல்பருமனைச் சரிசெய்வதுதான் நீர்க்கட்டி சிகிச்சையில் முதல் கட்டம்; முக்கியமான கட்டமும்கூட. இதற்கு அரிசி உணவைக் குறைக்க வேண்டும்; உடற்பயிற்சிகளைக் கூட்ட வேண்டும். நடைப்பயிற்சி நல்லது. நீச்சலடிப்பதும் சைக்கிள் ஓட்டுவதும் சினைப்பைக்குத் தோள் கொடுக்கும். யோகாவும் உதவும்.
ஹார்மோன் மாத்திரைகள் கொடுத்துச் சீராகச் சினைமுட்டை பிறக்கச் செய்வது சிகிச்சையின் அடுத்த கட்டம். இதில் மாதவிடாய் சீராகவில்லை என்றால், அடுத்தது அறுவைசிகிச்சைதான். அதில் சினைப்பையைச் சுற்றியுள்ள நீர்க்கட்டிகளை அகற்றுகிறார்கள் அல்லது லேப்ராஸ்கோப் வழியாக லேசர் ஒளியைச் செலுத்தி, சினைப்பையில் உள்ள தேவையில்லாத திசுக்களை அகற்றுகிறார்கள். இப்படி, ஆன்ட்ரோஜென் சுரப்புக்குக் கடிவாளம் போடுகிறார்கள்; நீர்க்கட்டிக்குத் தடை போடுகிறார்கள்.
எனக்குப் பத்து வருடங்களாக வாய்க்கசப்பு இருக்கிறது. மேல்தாடையும் கீழ்த்தாடையும் ஒட்டிக்கொள்கின்றன. இதற்கு என்ன காரணம்? என்ன தீர்வு? - ஆர். ரமணி, சென்னை - 5.
வாய்க்கசப்புக்குப் பல காரணங் கள் உள்ளன. முதலில், வாயில் ஏற்படும் வறட்சியைச் சொல்லலாம். சர்க்கரை நோய், புகையிலைப் பயன்பாடு, போதுமான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது எனப் பல காரணிகள் வாய் வறட்சிக்கு வழி வகுக்கும். உங்களுக்கு மேல்தாடையும் கீழ்த்தாடையும் ஒட்டிக்கொள்வதும் வாய் வறட்சியின் காரணமாகத்தான் இருக்கும். வாய்க்கசப்புக்கு அடுத்த காரணம், அமில எதிரொழுக்கு நோய் (GERD). இரைப்பையிலிருந்து அமிலம் உணவுக்குழாய் வழியாக வாய்க்கு வரும் நிலைமை இது.
மேலும், உங்கள் உணவுமுறையையும் கவனிக்க வேண்டும். காரம் மிகுந்த, புளிப்பான உணவை அடிக்கடி சாப்பிட்டால் வாய்க்கசப்பு ஏற்படலாம். சில ஹார்மோன்களின் அளவில் மாற்றங்கள் ஏற்பட்டாலும் வாய்க்கசப்பு உண்டாகும். கல்லீரலில் சுரக்கப்படும் பித்தநீரில் பிரச்சினை என்றாலும் வாய்க்கசப்பு ஏற்படச் சாத்தியம் உண்டு.
தொடர்ந்து எடுத்துக்கொள்ளப்படும் சில மாத்திரை, மருந்துகளும் இந்தப் பிரச்சினையைத் தூண்டும். வாய்க்கசப்புக்கு வயது மூப்பு, சுவை நரம்பு பாதிப்பு, பல் ஈறு பிரச்சினைகள், மதுப்பழக்கம் என இன்னும் சில காரணங்களும் இருக்கின்றன. உங்களுக்கு எந்தக் காரணத்தால் வாய்க்கசப்பு ஏற்படுகிறது என்பதை முதலில் கணிக்க வேண்டும். அதற்குரிய சிகிச்சை தேவைப்படும். இரைப்பை -குடல்நலச் சிறப்பு நிபுணரைச் (Gastroenterologist) சந்தித்து ஆலோசனை பெறுங்கள். தீர்வு கிடைக்கும்.
என் மகனுக்கு வயது 50. எப்போதாவது அவன் சுக்குத் தண்ணீர் குடித்தால், அடுத்த ஐந்து நிமிடங்களில் தொடர்ந்து விக்கல் வருகிறது. இதற்கு என்ன காரணம்? என்ன சிகிச்சை? - ஹெச். துளசி, பள்ளிப்படை.
உங்கள் மகனுக்குச் சுக்குத் தண்ணீர் குடிக்கும்போது மட்டும்தான் விக்கல் வருகிறது என்றால், அவர் உணவுக்குழாயில் அல்லது இரைப்பையில் புண்ணோ அழற்சியோ இருக்கச் சாத்தியம் உண்டு. இதற்குச் சிகிச்சை பெற்றுக்கொண்டால், விக்கல் வராது. உங்கள் குடும்ப டாக்டரைக் கலந்தாலோசித்து சிகிச்சை பெறுங்கள்.
அதோடு, உணவுமுறையை முறைப்படுத்த வேண்டும். காரமான, மசாலா நிறைந்த, வறுத்த, பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்கச் சொல்லுங்கள். மதுப்பழக்கமும் புகைப்பழக்கமும் இருந்தால் நிறுத்தச் சொல்லுங்கள். சரியான நேரத்தில் சாப்பிடச் சொல்லுங்கள்.
மஞ்சள், பூண்டு போன்றவற்றை முகத்தில் தேய்த்தால் முகப்பரு மறையுமா? - யமுனாராணி, பரமக்குடி.
மஞ்சள், பூண்டு போன்றவற்றை முகத்தில் தேய்த்தால் முகப்பரு மறையும் என்று கூறுவதற்கு நவீன மருத்துவத்தில் ஆதாரம் இல்லை. முகப்பருவைப் பொறுத்தவரை அதைத் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும். குறிப்பாக, அதைக் கிள்ளாமல் இருக்க வேண்டும். இளம் சூடான தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முகத்தைத் துடைத்துச் சுத்தப்படுத்துவதற்கு எனத் தனியாக ஒரு துண்டு பயன்படுத்தப்பட வேண்டும்.
மருத்துவர் ஆலோசனைப்படி மேற்பூச்சுக் களிம்புகளையும் சில நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளையும் பயன்படுத்த வேண்டும். உங்கள் முகப்பருவுக்கு ‘சினைப்பை நீர்க்கட்டி’ காரணமா எனத் தெரிந்துகொண்டு சிகிச்சை பெற வேண்டும். முகப்பருவுக்குக் காரணம் தெரியாமல், உங்களுக்குள்ள பிரச்சினையைப் புரிந்துகொள்ளாமல், ‘கூகுள் டாக்ட’ரிடம் கேட்டோ, ‘யூடியூபர்’களிடம் கேட்டோ நீங்கள் சுயமாக எதையும் முகப்பருவில் பூசாதீர்கள். அது தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்; gganesan95@gmail.com