

எனக்கு வயது 33. சிறைவாசி. எனது உதடு, கால் மூட்டுகளில் சருமம் வெள்ளையாகக் காணப்படுகிறது. சிறை மருத்துவரிடம் இதைக் காண்பித்தேன். மெலனின் நிறமிக் குறைபாடு உள்ளதாகச் சொன்னார். இதற்கு என்ன மருத்துவம் உள்ளது? உணவுமுறையில் இதைக் குணப்படுத்த முடியுமா? - யூ.தௌபிக், மத்தியச் சிறை, சேலம்.
உங்களுக்கு வந்துள்ள பிரச்சினைக்கு ‘வெண்புள்ளி’ (Vitiligo) என்று பெயர். இது ஒரு தன்னுடல் தாக்கு நோய் (Auto-immune disease). உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் ஒரு பகுதி, சொந்தத் திசுவை அந்நியப் பொருள் என்று தவறாகக் கருதி, அதை அழித்துவிடுகிறது.
குறிப்பாகச் சொன்னால், சருமத்திற்கு நிறம் கொடுக்கும் ‘மெலனோசைட்டுகள்’ எனும் நிறமி செல்களை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் அழிப்பதன் விளைவுதான் வெண்புள்ளி. இது மரபுவழியிலும் வரலாம். தைராய்டு குறைபாடு, கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய், வைட்டமின் பி12 குறைபாட்டால் ஏற்படும் கடுமையான ரத்தசோகை, கடுமையான உளப்பிரச்சினை போன்றவற்றின் துணையோடும் இது வரலாம்.
இதற்கு நவீன மருத்துவத்தில், வாய்வழி மாத்திரைகளும் சருமத்தில் பூசப்படும் களிம்பு வகைகளும் வழங்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதியில், புற ஊதாக்கதிர்களைச் செலுத்தியும் சிகிச்சை வழங்கப்படுகிறது. வெண்புள்ளி பாதிப்பு பெரிய அளவில் சருமத்தைப் பாதிக்குமானால், சரும மாற்று அறுவைசிகிச்சையும் (Skin grafting) மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு மாற்று மருத்துவ முறைகளிலும் பலதரப்பட்ட சிகிச்சைகள் உள்ளன.
பொதுவாக, வெண்புள்ளியை முழுவதுமாகவும் நிரந்தரமாகவும் குணப்படுத்துவது கடினம். அது தீவிரமடைவதைச் சிகிச்சையால் தடுக்க முடியும். உடலில் மற்ற இடங்களுக்குப் பரவுவதைத் தடுக்க முடியும். பலருக்கும் சிகிச்சையின்போது குணமாவதும், சிகிச்சையை நிறுத்தியதும் மீண்டும் வெண்புள்ளிகள் தோன்றுவதும் வழக்கம். எனவே, இதற்குத் தொடர் சிகிச்சையும் தொடர் கவனிப்பும் தேவை.
வெண்புள்ளிக்குப் பொதுவான உணவுமுறையைப் பரிந்துரைக்க முடியாது. வெண்புள்ளிகளோடு காணப்படும் துணை நோய்களைப் பொறுத்து, நபருக்கு நபர் அது மாறும். அடுத்து, இது ஒரு தொற்றுநோய் எனும் தவறான புரிதல் நம் சமூகத்தினரிடம் இருக்கிறது. அது உண்மையல்ல. இது ஒரு தொற்றுநோய் அல்ல.
எனக்கு 60 வயது. நான் 5 ஆண்டு களாக இன்சுலின் போட்டுக்கொண்டு வருகிறேன். நான் இன்சுலின் போட்டுக்கொள்வதை நிறுத்த முடியுமா? - ஆர்.கனகராஜ், சென்னை- 88
உங்களுக்கு வந்துள்ள சர்க்கரை நோய் முதலாம் வகையாக இருந்தால் இன்சுலினை நிறுத்த முடியாது. இரண்டாம் வகை சர்க்கரை நோயாக இருந்தால், இன்சுலினை நிறுத்தச் சாத்தியம் உள்ளது. அதற்குச் சர்க்கரை நோய் சிறப்பு நிபுணரிடம் நேரில் ஆலோசனை பெறுவது நல்லது.
உங்களுக்குத் தற்போதுள்ள சர்க்கரை நோய்க்கட்டுப் பாட்டின் நிலைமை, உங்கள் உணவுமுறை, உடற்பயிற்சி, இன்சுலின் சுரக்கும் அளவு போன்ற பல விவரங்களைத் தெரிந்துகொண்டும் உங்களுக்குச் சிறுநீரகப் பிரச்சினை, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன், இதயப் பிரச்சினை, கண் பாதிப்பு, நரம்பு பாதிப்பு போன்றவை ஏதாவது துணைக்கு உள்ளதா என்பதையெல்லாம் கருத்தில்கொண்டும்தான் இன்சுலினை நிறுத்த முடியுமா என்பதை உறுதிசெய்ய முடியும்.
பொதுவாக, உடல் எடையை முறையாகப் பேணுதல், மருத்துவர் பரிந்துரைக்கும் உணவு முறையைப் பின்பற்றுதல், தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுதல், சர்க்கரை நோய்க்கான மூன்று மாதக் கட்டுப்பாட்டு அளவை (HbA1C) வயதுக்கு ஏற்றபடி நிலையாக வைத்துக்கொள்ளுதல், ரத்த அழுத்தத்தை இயல்பு அளவில் வைத்துக்கொள்ளுதல், சர்க்கரை நோய் உடலுக்குள் வேறு உறுப்புகளைப் பாதிக்காமல் கவனித்துக்கொள்ளுதல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளால் இன்சுலின் பயன்பாட்டைக் குறைத்துவிட முடியும்; நிறுத்திவிடவும் முடியும்.
இதற்கு நானே ஓர் உதாரணம். சில ஆண்டுகளுக்கு முன்பு இன்சுலின் எடுக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகள் இன்சுலின் செலுத்திக் கொண்டேன். படிப்படியாக அதைக் குறைத்து, பிறகு நிறுத்திவிட்டேன். இப்போது சர்க்கரை நோய்க்கான ஒரு வகை மாத்திரை மட்டும் சாப்பிட்டு என் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன். இதற்கிடையில் கழுத்திலும் முதுகிலும் எதிர்பாராத பெரிய அறுவைசிகிச்சை களையும் எதிர்கொண்டுள்ளேன். எனக்கு வயது 65.
எனக்கு 25 வருடங்களாகச் சர்க்கரை நோய் உள்ளது. மாத்திரை சாப்பிடுகிறேன். நோய் கட்டுப்பாட்டில் உள்ளது. அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுகிறது. அதைத் தவிர்க்க இரைப்பை – குடல்நல நிபுணரின் பரிந்துரைப்படி ‘டுபலாக்’ (Duphalac) சிரப் அருந்துகிறேன். நல்ல நிவாரணம் கிடைக்கிறது. இதைத் தொடர்ந்து அருந்தும்படி மருத்துவ நிபுணர் கூறுகிறார். அப்படி அருந்தலாமா, டாக்டர்? பக்க விளைவு இல்லையா? - வி. இளங்கோவன், செய்யாறு.
மலச்சிக்கலைப் போக்க, ‘டுபலாக்’ மருந்தைத் தொடர்ந்து அருந்தலாம். மருத்துவர் கூறும் அளவுப்படி அருந்த வேண்டியது முக்கியம். இதில் பக்கவிளைவு அவ்வளவாக இல்லை. இந்த மருந்தோடு வேறு ஏதேனும் மரபு சார்ந்த மாற்று மருந்துகளைச் சேர்த்துக்கொள்ளக் கூடாது. பல மாதங்களுக்கு இதை அருந்து கிறீர்கள் என்றால், உங்கள் ரத்தத்தில் சோடியம், பொட்டாசியம் ஆகிய தாதுக்களின் அளவை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
தினமும் 3 லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் அருந்துங்கள். நார்ச்சத்து மிகுந்த காய்கறி, கீரை, பழங்கள் போன்ற உணவு வகைகளையும் உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். தினமும் நடைப்பயிற்சி மேற் கொள்ளுங்கள். முடிந்தவரை மருந்து இல்லாமல் மலச்சிக்க லைப் போக்க வழி தேடுங்கள்.
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்; gganesan95@gmail.com