

சமீபகாலமாகப் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. உடலின் எல்லா உறுப்புகளிலும் இது ஏற்படுகிறது. பொதுவாக, மனித உடலில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய செல்கள் எல்லாருக்கும் பிறவியிலேயே இருக்குமா? இதை வரும் முன்பு கண்டுபிடிக்க பரிசோதனைகள் உண்டா? அரசு மருத்துவமனைகளில் இந்தச் சோதனை வசதிகள் கிடைக்கின்றனவா? - ஆசும் மாலிக், பரங்கிப்பேட்டை.
மனித உடலில் புற்றுநோயை உண்டுபண்ணும் செல்கள் பிறவியி லேயே இருப்பதில்லை. மாறாக, பிற்காலத்தில் புற்றுநோயை உருவாக்கும் மரபணுக்கள் பிறவியிலேயே இருக்கச் சாத்தியமிருக்கிறது. இதனால்தான், மார்பகப் புற்றுநோய், புராஸ்டேட் புற்றுநோய், இரைப்பை மற்றும் குடல் புற்றுநோய் போன்ற சில வகைப் புற்றுநோய்கள் மரபுவழியில் வாரிசுகளுக்கும் ஏற்படுகின்றன.
இப்போதுள்ள நவீன மருத்துவத்தில், பல வகைப் புற்றுநோய்களை வரும் முன் கண்டறிய ‘நோய் முன்னறிதல் பரிசோதனைகள்’ உள்ளன. உதாரணமாக, மார்பாகப் புற்றுநோய்க்கு BRCA1/2, சினைப்பைப் புற்றுநோய்க்கு ‘சிஏ 125’ (CA 125) குடல் புற்றுநோய்க்கு ‘சிஏ 19.9’ (CA 19.9), புராஸ்டேட் புற்றுநோய்க்கு ‘பிஎஸ்ஏ’ (PSA) பரிசோதனைகள் உள்ளன. இந்தப் பரிசோதனை வசதிகள் பெருநகரங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாகக் கிடைக்கின்றன.
ஆண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுவதற்கான பொதுவான காரணங்கள் என்னென்ன? இதனைச் சரி செய்வது எப்படி? - ஜி. செல்வமுத்துக்குமார், சிதம்பரம்.
பொதுவாக, ஆண்களின் விந்தணுக்களில் ஏற்படும் பலதரப்பட்ட பிரச்சினைகள் மலட்டுத்தன்மையை உண்டாக்குகின்றன. விந்தணுக்களில் அமைப்புக் குறைபாடுகள் இருக்கலாம்; எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். அவை நகரும் வேகம் குறைவாக இருக்கலாம். விரைகளிலோ (Testes) மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியிலோ பிரச்சினை இருந்து, அங்கு சுரக்கப்படும் ஹார்மோன்களில் குறைபாடு இருந்தாலும் மலட்டுத்தன்மை ஏற்படும்.
தைராய்டு பிரச்சினையும் மலட்டுத்தன்மைக்கு ஒரு காரணமாக இருக்கிறது. அடுத்ததாக, விரைகளில் ‘விரி சுருள் சிரை நோய்’ (Varicocele) இருந்தால், அது விந்து சுரப்பதைப் பாதிக்கும். சிலருக்கு, விரைகள் இயற்கையிலேயே விதைப்பைக்கு இறங்கிவராமல் இருக்கும். அப்போது அவர்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். அரிதாகச் சிலருக்கு விரைகளிலோ விந்துக் குழாயிலோ கிருமித்தொற்று ஏற்பட்டு விந்துக் குழாயை அடைத்துவிடும்.
இதனாலும் மலட்டுத்தன்மை ஏற்படச் சாத்தியம் இருக்கிறது. உடலில் இருக்கும் வேறு நோய்களுக்குத் தொடர்ந்து எடுக்கப்படும் சில வகை மருந்துகளாலும் மலட்டுத்தன்மை ஏற்படுகிறது. புகைபிடித்தல், மது அருந்துதல், உடல் பருமன் போன்ற வாழ்க்கைமுறைகளும் சில மரபுக் காரணங்களும் இந்தப் பிரச்சினைக்குப் பாதை அமைக்கும். விரைப்புத் தன்மையில் குறை இருந்தாலும் மலட்டுத்தன்மைக்கு வழிவிடும். நவீன மருத்துவத்தில் மலட்டுத்தன்மைக்குக் காரணம் அறிந்து சிகிச்சை பெற்றால் வெற்றி கிடைக்கும்.
எனக்கு 70 வயதாகிறது. உயர் ரத்த அழுத்தம் உள்ளது. சிகிச்சையில் இருக்கிறேன். நான் இறந்த பிறகு உடல் தானம், கண்தானம் செய்ய விரும்புகிறேன். தானம் செய்ய என்னென்ன நடைமுறைகள் உள்ளன? - மு. வ. தேவேந்திரன், சென்னை - 82.
பொதுவாக, இயற்கை மரணம் எய்தினால் மட்டுமே உடல் தானம் செய்ய முடியும். ஒருவர் இறந்த பிறகு தானம் செய்யப்படும் சடலங்கள் முதலாண்டு மருத்துவ மாணவர்களின் உடற்கூராய்வுக்கும் வேறு சில ஆராய்ச்சிப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. தங்கள் உடலைத் தானம் செய்ய விரும்புகிறவர்கள் இறப்பதற்கு முன்பு, குடும்பத்தினரின் ஒப்புதலுடன் அருகில் இருக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள உடற்கூறியல் துறைக்குச் சென்று, உடல் தானத்துக்கு உரிய விண்ணப்பப் படிவத்தைப் பெற்று நிரப்பிக்கொடுக்க வேண்டும்.
இறந்த பிறகு உடல் தானம் செய்யச் சம்மதம் தெரிவிக்கும் வகையில் உறுதிச் சான்றிதழில் கையொப்பம் இட்டுத் தர வேண்டும். அதில் கேட்கப்பட்டிருக்கும் பிற தகவல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இறந்த பிறகு மருத்துவக் கல்லூரி உடற்கூராய்வுத் துறைக்குத் தகவல் தர வேண்டும். சடலத்தை ஒப்படைப்பதற்கு முன் செய்ய வேண்டிய மதச் சடங்குகளைச் செய்துகொள்ளலாம். அதன் பிறகு மருத்துவக் கல்லூரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
கண் தானம் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல. கண் தானம் செய்ய விரும்புவோர் முதலில் கண் வங்கியில் தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம். அவர்களுக்குக் கண் தான அட்டை வழங்கப்படும். ஆனால், இப்படிப் பதிவு செய்துதான் கண் தானம் வழங்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை. இறந்து 4 முதல் 6 மணி நேரத்துக்குள் கண் தானம் செய்ய வேண்டும். கண் வங்கிக்குத் தகவல் அனுப்ப வேண்டும்.
அல்லது சுழற்சங்கம் போன்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களையும் அணுகலாம். அவர்கள் ஒரு மருத்துவக் குழுவை வீட்டுக்கே அனுப்பிக் கண் தானம் பெற்றுக்கொள்கின்றனர். இரண்டு சாட்சிகள் முன்னிலையில் குடும்பத்தினரின் எழுத்துபூர்வ ஒப்புதலுடன் மட்டுமே கண் தானம் செய்யமுடியும்.
இறந்தவரின் கண்களை அகற்ற 30 நிமிடங்களே தேவைப்படும். இறந்தவரிடம் 10 மி.லி. அளவுக்கு ரத்தமும் எடுக்கப்படும். எய்ட்ஸ், மஞ்சள் காமாலை போன்ற தொற்றுநோய்கள் ஏதாவது இருக்கிறதா என்று ரத்தத்தைப் பரிசோதித்த பிறகே, தானமாகப் பெற்ற கண்களை மற்றவர்களுக்குப் பயன்படுத்துவார்கள். கண்களை அப்படியே முழுவதுமாகப் பயன்படுத்தமாட்டார்கள். ‘கார்னியா’ எனும் கருவிழியை மட்டுமே பயன்படுத்துவார்கள்.
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.; gganesan95@gmail.com