Published : 12 May 2018 11:49 am

Updated : 12 May 2018 11:49 am

 

Published : 12 May 2018 11:49 AM
Last Updated : 12 May 2018 11:49 AM

சி.எம்.சி. 100: தென்னக மருத்துவப் பெருமிதம்

100

இந்திய மருத்துவத் துறையில் தனக்கென ஒரு முன்னோடி பாதையை ஏற்படுத்திக்கொண்ட வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி (Christian Medical College), சமீபத்தில் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது. பல்வேறு தடைகளையும் தடங்கல்களையும் கடந்துள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டுப் பயணத்தில் டாக்டர் ஐடா ஸ்கடர் என்ற அமெரிக்கப் பெண்ணின் பங்களிப்பு முதன்மையானது. சொல்லப்போனால் இந்தக் கல்லூரி, ஐடாவின் சாதனை என்பதில் சந்தேகமில்லை. சி.எம்.சி-யின் வரலாற்றைத் தாங்கி நிற்கும் அடித்தளமாக டாக்டர் ஐடா ஸ்கடர் எப்போதும் திகழ்கிறார்.

பஞ்சமும் பட்டினியும்

ஆங்கிலேயக் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தியாவில் சுகாதாரம் பின்தங்கி இருந்தது. அப்போது இந்தியர்களின் சராசரி ஆயுட்காலம் 25 வயதுதான். ஏழை, எளியவர்களுக்கு மருத்துவ வசதி எட்டாக்கனியாகவே இருந்தது. 1877-ல் நாட்டில் கடுமையான பஞ்சம் நிலவியது. பட்டினிச்சாவு மட்டும் கிட்டத்திட்ட 50 லட்சத்தைத் தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு, ஒரு வேளை உணவுகூட கொடுக்க முடியாத நிலையே இருந்தது.

அந்தக் காலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் இந்தியாவில் மருத்துவ சிகிச்சை அளிப்பது, உணவு வழங்குவது போன்ற பணிகளைச் செய்துவந்தன. அப்படி இந்தியா வந்தவர்களில் டாக்டர் ஜான் ஸ்கடரும் ஒருவர். பஞ்சத்தால் ஏற்பட்ட கோரக் காட்சிகளைத் தினமும் பார்த்த ஜானின் ஏழு வயது சிறுமி, இனி இந்தியாவுக்கு வரக் கூடாது என்றும் மிஷனரி பணியில் ஈடுபடக் கூடாது என்றும் தன் மனதுக்குள் நினைத்துக்கொண்டார். ஆனால், அந்தச் சிறுமிதான் மருத்துவ உலகின் சிறந்த கல்லூரி ஒன்றைப் பின்னாளில் தொடங்கினார்.

மூன்று அழைப்புகள்

டாக்டர் ஜான் ஸ்கடர் - சோஃபியா வெல்ட் ஸ்கடரின் மகளாக 1870 டிசம்பர் 9-ம் தேதி ராணிப்பேட்டையில் ஐடா ஸ்கடர் பிறந்தார். மிஷனரி பணியில் தங்களை முழுமையாக ஈடுபட்ட தன் குடும்பத்தினரின் வழியில் செல்ல ஐடாவுக்கு அப்போது விருப்பமில்லை. அமெரிக்கா திரும்பிய ஸ்கடர், படிப்பில் கவனம் செலுத்தினார். ஐடாவின் பெற்றோர் மட்டும் இந்தியாவில் மிஷனரி பணிகளில் ஈடுபட்டுவந்தனர். அவர்களைப் பார்க்க மீண்டும் இந்தியா வரவேண்டிய கட்டாயம் ஐடாவுக்கு ஏற்பட்டது.

12chbri_anna

அந்தப் பயணம் ஐடாவின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது. வேலூரில் மிஷனரி பணியில் ஈடுபட்டிருந்த பெற்றோருடன் சிறிது காலம் அவர் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தார். அப்போது ஐடாவுக்கு 14 வயது. ஒரு நாள் இரவு வீட்டுக் கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஐடா கதவைத் திறந்தார். வாசலில் நின்றிருந்த ஓர் இளம் அந்தணரின் முகத்தில் படபடப்பும் பதற்றமும் காணப்பட்டன.

ஐடாவைப் பார்த்ததும் அவர்தான் மருத்துவர் என நினைத்த அந்தணர், “அம்மா, கர்ப்பிணி மனைவியின் உயிர் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. நீங்கள்தான் வந்து என் மனைவியைக் காப்பாற்ற வேண்டும். அவளுக்கு 14 வயதுதான் ஆகிறது” என்று மூச்சுவிடாமல் சொன்னார்.

ஐடாவுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. தான் மருத்துவர் இல்லை என்று சொல்லிவிட்டு மருத்துவரான தன் தந்தையை அழைப்பதாகச் சொன்னார். “ஐயோ, ஆண் மருத்துவரா, வேண்டாமம்மா. எங்கள் குல வழக்கம் இதற்கு இடம் தராது” என்று சொல்லிவிட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் மீண்டும் கதவைத் தட்டும் சத்தம். இந்த முறை வாசலில் நின்றுகொண்டிருந்தவர் ஓர் இஸ்லாமியர். தன் மனைவிக்குப் பிரசவம் பார்க்கும்படி ஐடாவிடம் அவர் சொன்னார். தன் தந்தைதான் மருத்துவர் என்ற ஐடாவின் பதிலைக் கேட்டதும், அந்தணரைப்போல் இவரும் வேண்டாமென்று சென்றுவிட்டார்.

அறைக்குத் திரும்பிய ஐடாவுக்குக் குழப்பம். இந்தியச் சமூகக் கட்டமைப்பு ஏன் இப்படி இருக்கிறது என யோசித்தார். மீண்டும் கதவைத் தட்டும் சத்தம். கண்கலங்கியபடி நின்றிருந்தவரும் தன் மனைவிக்குப் பிரசவம் பார்க்க அழைக்கிறார் என்பதை ஐடா தெரிந்துகொண்டார். ஆண் மருத்துவரை மறுத்த அவர், விதியின் மீது பழியைப் போட்டுவிட்டுச் சென்றார்.

சிறுமியின் முடிவு

மூன்று விதமான ஆட்கள், ஒரே காரணத்துக்காக அழைக்கிறார்கள் என்பதை நம்ப முடியாமல் தனக்குள் பல கேள்விகளை எழுப்பிக்கொண்டார் ஐடா. அவர் மனதுக்குள் ஒரு போராட்டம் நடந்தது. தனக்குத்தான் மருத்துவம் தெரியாதே, பின் எப்படி மருத்துவம் பார்க்க முடியும் என்ற பதிலையும் அவரே சொல்லிக்கொண்டார். மனப் போராட்டத்துக்கு நடுவே அன்றைய இரவு கழிந்தது. மறுநாள் மூன்று பெண்களின் சவ ஊர்வலம் செல்வதை ஐடா பார்த்தார். இரவில் மருத்துவ உதவி கேட்டு வந்த மூன்று ஆண்களின் மனைவிகளும் இறந்ததை ஐடாவால் நம்ப முடியவில்லை. ஒருவித குற்றவுணர்வு அவரை ஆட்கொண்டது. தனது எதிர்காலத்துக்கான விடையை அப்போது அவர் கண்டுகொண்டார்.

மருத்துவம் படித்து மிஷனரி பணியில் ஈடுபட விரும்புவதாக ஐடா தெரிவிக்க, அவருடைய பெற்றோருக்கு ஆச்சரியம். காரணம் தந்தை ஜான் ஸ்கடர் (ஜூனியர்), தாத்தா ஜான் ஸ்கடர் (சீனியர்) இருவருமே மருத்துவர்கள். தவிர ஐடாவின் தாத்தா டாக்டர் ஜான் ஸ்கடர், அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு மிஷனரி பணிக்காக வந்த முதல் மருத்துவரும்கூட!

மருத்துவம் படிக்க அமெரிக்கா சென்ற ஐடா ஸ்கடர், பிலடெல்ஃபியா மருத்துவக் கல்லூரியில் 1895-ல் சேர்ந்தார். மருத்துவப் படிப்பு முடிந்ததும் ஐடாவின் மிஷனரி பணிக்குத் தோழி ஆனி ஹான்காக் உதவினார். வேலூரில் பெண்களுக்கென மருத்துவமனை கட்ட வேண்டும் என்ற எண்ணம் ஐடாவுக்கு இருந்தது. மருத்துவமனை தொடங்க எட்டாயிரம் அமெரிக்க டாலர்கள் தேவைப்பட்டது. நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். ஐந்து, பத்து அமெரிக்க டாலராகச் சேர்க்கும் நிதியால் இலக்கை எட்ட முடியுமா என்ற அச்சமும் ஐடாவுக்கு இருந்தது.

Ida scudder ஐடா ஸ்கடர் rightஎதிர்பாராத உதவி

ஒரு நாள் நிதி திரட்டுவதற்காக அறக்கட்டளை ஒன்றின் தலைவியாக இருந்த டேபர் என்பவரைச் சந்திக்கச் சென்றார். டேபருடன் ஷெல் என்ற முதியவரும் இருந்தார். முதியவரை அங்கேயே இருக்குமாறு கூறிய டேபர், அடுத்த அறைக்கு ஐடாவை அழைத்துச் சென்றார். இந்தியாவில் நிலவும் பெண்களின் பிரச்சினைகளையும் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் குறித்தும் ஐடா விளக்கினார்.

அவற்றைப் பொறுமையாகக் கேட்ட டேபர், அறக்கட்டளை கூட்டத்தில் நிதி திரட்டிக்கொள்வதற்குப் பேச வாய்ப்பளித்தார். நம்பிக்கையுடன் அங்கிருந்து புறப்பட்ட ஐடாவுக்கு மறுநாள் காலை ஒரு கடிதம் வந்தது. டேபரின் வீட்டில் பார்த்த முதியவர் ஷெல், அறக்கட்டளைக்குச் செல்லும் முன்பாகத் தன்னை ஒரு முறை பார்த்துச் செல்லும்படி எழுதியிருந்தார்.

ஷெல்லைப் பார்க்கச் சென்றார் ஐடா ஸ்கடர். ஐடாவும் டேபரும் முதல் நாள் பேசியதைக் குறிப்பிட்ட அவர், மேலும் சில விவரங்களைத் தெரிந்துகொள்ள விரும்புவதாகச் சொன்னார். வேலூரின் மக்கள்தொகை, ரயில்பாதை வசதி, மருத்துவமனை கட்டிடம் எப்படிக் கட்டப்படும் என்றெல்லாம் கேட்டார். ஐடாவின் பதில் ஷெல்லுக்குத் திருப்தியளிக்க, 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கான காசோலையை ஐடாவிடம் நீட்டினார் ஷெல். இன்ப அதிர்ச்சியில் இருந்த ஐடாவிடம், ‘‘என் அன்பு மனைவி மேரி டேபர் ஷெல்லின் நினைவாக, வேலூரில் பெண்கள் மருத்துவமனை அமைக்க நிதியுதவி அளிக்கிறேன். அவர் உயிரோடு இருந்திருந்தாலும் உதவி செய்திருப்பார்’’ என்று கூறினார்.

தேவைக்கு அதிகமாகவே கிடைத்த பணத்துடன் இந்தியாவுக்கு புறப்பட ஐடா ஸ்கடர் தயாரானார். மீண்டும் ஷெல்லிடம் இருந்து ஐடாவுக்கு உதவி கிடைத்தது. மருத்துவமனைக்குத் தேவையான கருவிகள் அடங்கிய மரப்பெட்டி ஐடா புறப்படத் தயாரான கப்பலுக்கு வந்துசேர்ந்தது.

தொடங்கியது மருத்துவ சேவை

தோழி ஆனி ஹான்காக்குடன் 1900 ஜனவரி மாதம் வேலூருக்கு வந்தார் ஐடா. இருவரும் மருத்துவப் பணியை உடனடியாகத் தொடங்கினர். கூடவே மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணியும் தொடங்கியது. திட்டமிட்டபடி நாற்பது படுக்கைகளுடன் பெண்களுக்கான மேரி டேபர் ஷெல் நினைவு மருத்துவமனை தொடங்கப்பட்டது.

அப்போது போதிய பயிற்சி பெற்ற செவிலியர்கள் இல்லாதது, ஐடாவின் மருத்துவப் பணிக்குப் பெருந்தடையாக இருந்தது. தொடர்ச்சியாக செவிலியர் பயிற்சிப் பள்ளியைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் ஐடாவின் மனதில் உதித்தது. அந்தக் காலத்தில் பெண்களுக்கு எதிராக இருந்த சமூகக் கட்டமைப்புகளை எப்படி உடைப்பது என்ற கவலையும் அவருக்கு இருந்தது. ஆண்டுதோறும் பயிற்சி பெற்ற செவிலியர்களை கிராமங்களுக்கு அனுப்பினால் நிலைமை மாறும் என்று நம்பினார். செவிலியர் பள்ளியைத் தொடங்குவதற்கான பணியை ஐடா ஸ்கடர் 1908-ல் தொடங்கினார். சுற்றுவட்டார மிஷன் பள்ளிகளில் படித்த ஐந்து மாணவிகளுடன் செவிலியர் பயிற்சி பள்ளியைத் தொடங்கினார்.

மருத்துவப் பள்ளி

கோடை விடுமுறையில் அனைத்து மிஷனரிகளும் கொடைக்கானலில் ஒன்று கூடுவது வழக்கம். அப்படிக் கூடிய மிஷனரி டாக்டர்கள் மாநாட்டில் ‘தென்னகத்தில் பெண்களுக்கென்று ஒரு யூனியன் மருத்துவக் கல்லூரி வேண்டும்’ என்ற கருத்தை ஐடா ஸ்கடர் முன்வைத்தார். நூறாண்டுகளுக்குப் பிறகு இதைப் பற்றி யோசிக்கலாம் என்ற ஏளன குரல்கள் எழுந்தன. மாநாட்டில் பங்கேற்ற பெண் டாக்டர்கள் ஆன்டா கூக்ளர், மக்ஃபெயில் ஆகிய இருவரும் ஐடாவுக்கு பக்கபலமாக இருந்தனர்.

அந்தக் காலகட்டத்தில் 15 கோடிப் பெண்கள் இருந்த இந்தியாவில் 150 பெண் மருத்துவர்கள் மட்டுமே இருந்தனர். மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஐடாவின் எண்ணத்தை, தென்னிந்திய மிஷனரி மன்றம் ஏற்றுக்கொண்டது. வேலூரில் பெண்களுக்கான மருத்துவக் கல்லூரி தொடங்குவது என்றும் அதற்கு ஐடாவே முதல்வராக இருக்க வேண்டுமென்றும் முடிவெடுக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்காக 200 ஏக்கர் நிலமும் தயாராக இருந்தது.

cmc logo

1914-ல் ஐடா நெடு விடுப்பில் அமெரிக்காவுக்குச் சென்றார். அதேநேரம் முதல் உலகப் போர் மூண்டது. 1915-ல் கடுமையான போர்ச் சூழலில் இந்தியா திரும்பிய ஐடா ஸ்கடர், மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான பணியைத் துரிதப்படுத்தினார். மருத்துவமனை கட்டிடம் கட்ட பத்து லட்சம் அமெரிக்க டாலர் பணம் தேவைப்பட்டது. பல இன்னல்களுக்கு இடையில் 1918-ல் டிப்ளமோ மருத்துவப் படிப்புடன் பெண்களுக்கான மருத்துவப் பள்ளி நடத்துவதற்கான அனுமதி, சென்னை மாகாண மருத்துவத் துறை தலைவர் கர்னல் பிரைசனிடமிருந்து கிடைத்தது.

முதல் 14 பேர்

எபி, கிருபம்மா, ஜெஸிலெட், லிஸி, நவமணி, லூஸி, தனம்மா, எலிசபெத், செஸிலியா, சோஃபி, தாய், கனகம், அன்னா, சாரம்மா ஆகிய 14 மாணவிகளுடன் முதல் ஆண்டு மருத்துவப் பள்ளி தொடங்கியது. 1918 ஆகஸ்ட் 12-ல் யூனியன் மிஷனரி பள்ளியை சென்னை மாகாண கவர்னர் பென்ட்லண்ட் பிரபு தொடங்கி வைத்தார். அந்தக் காலத்தில் மற்ற ஏழு மருத்துவப் பள்ளிகளுக்கு இணையான வசதிகள் இல்லாதபோதும், அதற்கான சாத்தியங்களை ஐடா ஸ்கடர் ஏற்படுத்திக்கொடுத்தார்.

நான்கு ஆண்டுகள் கழித்து நடந்த தேர்வில் சென்னை மாகாண மருத்துவப் பள்ளிகளிலே யூனியன் மிஷனரி மருத்துவப் பள்ளி முதலிடத்தைப் பெற்றது. அன்று தொடங்கிய வெற்றிப் பயணம் இன்று 100 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது. 1948-ல் யூனியன் மருத்துவப் பள்ளி, கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியாக தரம் உயர்த்தப்பட்டது. அப்போதுதான், பெண்களுடன் ஆண்களும் மருத்துவம் படிக்கத் தொடங்கினர். அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் பலரும் அறிந்த வரலாறு.

‘முதல்’ சாதனை

‘‘உலக அளவில் தொழு நோயாளிகளுக்கு முதல் அறுவைசிகிச்சையை டாக்டர் பால் பிராண்ட் தலைமையிலான குழுவினர் இங்கு செய்தனர். 1950 இறுதியில் இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்தியாவின் முதல் இதய அறுவைசிகிச்சையும் முதல் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையும் இங்குதான் நடைபெற்றன. முதல் மூளை நரம்பியல் சிகிச்சைப் பிரிவும் இங்கு தொடங்கப்பட்டது.

இங்கு படித்த பல மருத்துவர்கள் இந்தியாவின் முன்னணி மருத்துவர்களாக உள்ளனர். இங்கு பணியாற்றும் மருத்துவர் ஒருவர் விரும்பினால் ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறோம். இந்தியாவின் மிகவும் பின்தங்கிய பிகார், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் மிஷனரி மருத்துவமனைகளிலும் எங்கள் மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர்.

கிராமங்களுக்குச் சென்று சிகிச்சை அளிப்பதை எங்கள் அடிப்படைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளோம். புற்றுநோய், விபத்து சிகிச்சைப் பிரிவு, இதய அறுவை சிகிச்சை, கல்லீரல், சிறுநீரகம், குடல் சிகிச்சை பிரிவுகளில் உயர்தர சிகிச்சை அளிக்கும் நோக்குடன் செயல்பட்டு வருகிறோம். இந்தியாவில் இதய வால்வுகளைச் சரிசெய்யும் சிகிச்சையும் இங்குதான் செய்யப்படுகிறது” என்கிறார் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் முதல்வர் அன்னா புளிமூடு.

கட்டுரையாளர் தொடர்புக்கு: senthilkumar.v@thehindutamil.co.in
படங்கள்: சி.வெங்கடாசலபதி

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

tamil-story

கதை: புதிய கூடு

இணைப்பிதழ்கள்

More From this Author