

எனக்கு வயது 45. புகைப்பழக்கம் உண்டு. சர்க்கரை நோயும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. சில மாதங்களாக மூக்கில் வாசனை தெரிவது குறைந்துவருகிறது. இதற்கு என்ன காரணம்? நான் என்ன செய்ய வேண்டும்? - ஆர். குமரேசன், மானாமதுரை.
வாசனை குறைவதற்குப் பல காரணங்கள் உண்டு. சாதாரண சளி, ஜலதோஷம் பிடிக்கும்போதும், சைனஸ் தொல்லை தரும்போதும் தற்காலிகமாக வாசனை தெரியாமல் போகும். இவை சரியானதும் வாசனை மீண்டுவிடும். மூக்கில் பொடி போடும் பழக்கம் இருந்தால், நாள்பட நாள்பட வாசனை தெரிவது குறையும்.
உங்கள் வேலை எது என்பதைக் குறிப்பிடவில்லை. பொதுவாக, மாசு நிறைந்த இடத்தில் வேலை செய்பவர்களுக்கு வாசனை அறிதல் குறைய சாத்தியம் அதிகம். உதாரணமாக, மரப்பட்டறைகளில் வேலை செய்பவர்கள் மரத்தூள் கலந்த காற்றையே அதிகமாகச் சுவாசிப்பார்கள். அதுபோல், நிக்கல், குரோமியம், அமோனியா போன்ற சக்திவாய்ந்த வேதிப்பொருள்களை நுகர்ந்துவிட்டாலும் வாசனை குறையும்.
அடுத்ததாக, மூக்கின் நுழைவாயிலில் வாசனையை உணர்கிற ஒரு சவ்வுப் படலம் இருக்கிறது. அந்தப் படலத்தில் கட்டி அல்லது ஏதாவது ஒரு தடை இருக்குமானால், காற்று அந்தப் படலத்தில் படுவது தடைபடும். அப்போதும் வாசனை அறிதல் குறையும். மூக்கில் ‘டர்பினேட்’ (Turbinate) என்று ஒரு பகுதி உண்டு. இது சிலருக்கு அதிகப்படியாக வளர்ந்து, வாசனைப் படலத்தை அழுத்திவிடும். நாம் சுவாசிக்கும் காற்றின் திசையை அந்த வீக்கம் மாற்றிவிடும்.
இதனாலும் வாசனை குறையச் சாத்தியமுண்டு. சில மாத்திரை, மருந்துகள்கூட வாசனைத் திறனைக் குறைத்துவிடலாம். மூளையில் அல்லது வாசனை நரம்பில் பிரச்சினை என்றால் வாசனை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, ஒரு கட்டத்தில் துப்புரவாக வாசனையை அறிய முடியாமல் போகும்.
நவீன மருத்துவத்தில், வாசனைத் திறனை அளக்கவும், காரணம் அறியவும் பலதரப்பட்ட கருவிகள் இருக்கின்றன. காரணத்துக்கு ஏற்ப சிகிச்சைகள் மாறும். உதாரணமாக, ஸ்டீராய்டு மருந்துகள் பலருக்குப் பலன் தரும். மூக்கில் கட்டி, ‘டர்பினேட்’ வீக்கம் போன்றவற்றுக்கு எளிய அறுவைசிகிச்சைகள் உதவும். வாசனை நரம்பு தொடர்பான காரணத்தை முடிவு செய்வதுதான் கடினம்.
ஆனால், பலருக்கும் தற்காலிகமாக வாசனை உணர்வு குறைவதுதான் வழக்கம். காலப்போக்கில் அது தானாகவே சரியாகிவிடுவதும் உண்டு. கரோனா காலத்தில் அநேகருக்கும் வாசனை அறிதல் குறைந்து காணப்பட்டது. பின்னாளில் அதுவாகவே சரியாகிவிட்டதை இங்கே நினைவுகூரலாம். உங்களுக்கு எந்தக் காரணத்தால் வாசனை குறைகிறது என்பதைக் கண்டறிந்து சிகிச்சை பெறுங்கள்; வாசனை உணர்வு மீண்டுவிடும்.
எனக்கு நீண்ட காலமாக வயிற்றில் அல்சர் இருக்கிறது. மாத்திரைகளைச் சாப்பிட்டுவருகிறேன். இந்த மாத்திரைகளைச் சாப்பாட்டுக்கு முன்பு சாப்பிடச் சொல்கிறார்கள். நான் அப்படிச் சாப்பிட மறந்துவிடுகிறேன். இதனால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? உணவுக்குப் பிறகு இந்த மாத்திரைகளைச் சாப்பிடலாமா? - எம். வித்யாதரன், சேலம்.
பெரும்பாலான இரைப்பைப் புண் மாத்திரைகள் இரைப்பையில் மிதக்கும் அமிலத்தில் கரைந்து செயல் திறனைக் காட்டக் கூடிய வகையில் தயாரிக்கப்பட்டவை. ஆகவேதான் வெறும் வயிற்றில் அல்லது உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு அவற்றைச் சாப்பிடச் சொல்கிறார்கள். உணவு சாப்பிட்ட பிறகு அவற்றைச் சாப்பிட்டால், இரைப்பையில் சுரக்கும் அமிலத்தில் பெரும்பங்கு உணவு கலந்துவிடும்; மாத்திரை செயல்படத் தேவையான அமிலம் அங்கே இருக்காது.
இதனால், புண்ணுக்கான மாத்திரை செயல்படுவது தடைபடும் அல்லது முழுவதுமாகச் செயல்படாமல் போகும். அப்போது இரைப்பையில் புண் ஆறுவதற்குத் தாமதம் ஆகும். கவலை வேண்டாம். இப்போது எந்த நேரத்திலும் சாப்பிடக்கூடிய வகையில் இரைப்பைப் புண் மாத்திரைகள் வந்துவிட்டன. உங்கள் குடும்ப மருத்துவரிடம் அவற்றைக் கேட்டு வாங்கிச் சாப்பிடுங்கள்.
நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன். எனக்கு உதட்டைச் சுற்றிலும் தடிப்புகளும் சிறு சிறு கொப்புளங்களும் வருகின்றன. என் பெற்றோர் பல்லி எச்சம் காரணமாக அப்படி வருகிறது என்கிறார்கள். அது உண்மையா, டாக்டர்? - காயத்ரி மித்ரா, செங்கல்பட்டு.
உதட்டைச் சுற்றிலும் ஏற்படுகிற சிறு சிறு கொப்புளங்களுக்குப் பெரும்பாலானோர் பல்லி எச்சம்தான் காரணம் என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அந்தக் கொப்புளங்களில் நீர் கோத்திருந்தால், அதற்கு ‘ஹெர்பிஸ் சிம்ப்ளக்ஸ்’ (Herpes Simplex Virus) எனும் வைரஸ் கிருமி காரணமாக இருக்கலாம்.
இந்த வகைக் கொப்புளங்கள் ஒரு வாரத்தில் தானாகவே சரியாகிவிடும். இந்தப் பாதிப்பு உள்ள நேரத்தில் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க, புரதம் நிறைந்த உணவு வகைகளையும் காய்கறி, பழ வகை உணவையும் அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
நீர்க்கொப்புளங்களாக இல்லாமல், உதட்டைச் சுற்றி வெறுமனே தடிப்புகள் மட்டும் காணப்பட்டால், அவை ஒவ்வாமையின் விளைவாக இருக்கலாம். முக்கியமாக, உணவு ஒவ்வாமையைச் சொல்லலாம். அப்போது எந்த உணவு ஒவ்வாமை ஆகிறது என்பதைக் கவனித்து, அந்த வகை உணவைத் தவிர்த்தால் தடிப்புகள் மறைந்துவிடும். மருத்துவரின் ஆலோசனைப்படி, ஒவ்வாமையைத் தடுக்கும் மாத்திரை களைத் தற்காலிகமாக எடுத்துக்கொண்டாலும் பலன் கிடைக்கும்.
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்; gganesan95@gmail.com