டாக்டர் பதில்கள் - 38: மைக்ரேனால் வயிற்றுவலி வருமா?

டாக்டர் பதில்கள் - 38: மைக்ரேனால் வயிற்றுவலி வருமா?
Updated on
3 min read

என் மகளுக்கு 10 வயது. அடிக்கடி வயிற்றில் வலி வந்தது. மாதத்தில் மூன்று நாள்களுக்கு வயிற்று வலியால் துடித்துவிடுவாள். அதனால் அடிக்கடி பள்ளிக்கு விடுமுறை போட்டுவிடுவாள். அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது அது மைக்ரேன் வகை வலி என்று கூறினார்கள். மைக்ரேன் என்பது தலைவலியில் ஒரு வகை என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். வயிற்றுவலியும் மைக்ரேனில் சேருமா, டாக்டர்?

- குணசுந்தரி, திண்டுக்கல்.

மைக்ரேன் என்பது தலைவலியில் ஒரு வகை என்பது சரிதான். அதாவது, ஒற்றைத் தலைவலி என்று இதைக் கூறுவோம். அதேவேளையில், வயிற்றுடன் தொடர்புடைய மைக்ரேன் வலியும் உண்டு. இது மிகவும் அரிதாக வரக்கூடியது. பெரும்பாலும், உங்கள் மகளின் வயதை ஒட்டிய குழந்தைகளுக்குத்தான் இவ்வகை வலி வருவதுண்டு. பயம், பதற்றம், கோபம், எரிச்சல், சோகம், தோல்வி, ஏமாற்றம், மனச்சோர்வு போன்ற உணர்வுகள் சார்ந்த காரணிகள் இவ்வகை வலியைத் தூண்டுகின்றன. பல குழந்தைகளுக்கு இம்மாதிரியான பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தெரியாது. பெற்றோருடன் கலந்துபேசவும் கூச்சப்படுவார்கள். இந்த உணர்வுகளை நாள் கணக்கில் உள்ளத்தில் அடக்கிவைத்திருப்பார்கள். ஆனால், எப்போதும் அவர்களால் அவற்றை அடக்கிவைக்கவும் முடியாது. ஒரு கட்டத்தில் அதை வயிற்றுவலியாக வெளிப்படுத்துவார்கள். வயிற்றுவலியோடு வாந்தி, குமட்டலும் இருக்கும். பசி குறைவாக இருக்கும்.

தேவையான உறக்கம் இல்லையென்றாலும் இவ்வகை வலி வரக்கூடும். அதிக நீரிழப்பு, அதீத ஒலி அல்லது அதீத வெளிச்சம்கூட இந்த வகை வலிக்குக் காரணமாகலாம். பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் உள்ளிட்ட சில உணவு வகைகளும் இந்த வகை வலியைத் தூண்டக்கூடும். பொதுவாக, சாக்லெட், காபி, கோக், சீஸ், சிட்ரஸ் பழங்கள் ஆகிய 5 வகை உணவுகள் (5Cs) இந்த வலியைத் தூண்டும் என அறியப்பட்டுள்ளது. குடும்பத்தில் யாருக்காவது இவ்வகை வலி ஏற்பட்டிருக்குமானால், வாரிசுகளுக்கும் இது ஏற்பட அதிக சாத்தியம் உண்டு. மைக்ரேன் வலிக்குச் சிறந்த மருந்துகள் நவீன மருத்துவத்தில் உள்ளன. மருத்துவரின் ஆலோசனைப்படி உங்கள் மகளுக்கு அந்த மருந்துகளைத் தொடர்ந்து கொடுத்து வாருங்கள்; பிரச்சினை தீர்ந்துவிடும். அதோடு, வலியைத் தூண்டும் காரணிகளைத் தெரிந்துகொண்டு அவற்றையும் களையப் பாருங்கள். அப்போதுதான் உங்கள் மகளுக்கு வயிற்றுடன் தொடர்புடைய மைக்ரேன் வலி மறுபடியும் வராது.

எனக்குக் கடந்த ஜனவரி 24 அன்று குடலிறக்கம் ஏற்பட்டது. அன்று முதல் சரிவர ஜீரணம் ஆகாமல் தினமும் இரவில் திரிபலா சூரணம் சாப்பிட்டுத்தான் மலம் கழிக்கும் நிலை உள்ளது. அதுவும் காலை ஒரு வேளை மட்டுமே மலம் கழிக்கும் நிலை. மாலையில் மலம் கழிக்க இயலவில்லை. இதற்கு என்ன செய்வது?

- வி.கே. முருகேசன்.

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தினமும் இரு வேளைக்கு மலம் கழிக்க வேண்டும் என்று எந்த நியதியும் இல்லை. ஒரு வேளைக்கு இயல்பாகவும் நிறைவாகவும் மலம் கழித்துவிட்டால், அது போதும். நீங்கள் திரிபலா சூரணம் எடுத்துக்கொண்டுதான் மலம் கழிக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தம். அதற்கான காரணத்தைக் கண்டுபிடித்துச் சிகிச்சை பெறுங்கள். அடுத்து, உங்களுக்கு இருக்கும் குடலிறக்கப் பிரச்சினைக்கும் தீர்வு காணுங்கள்.

நான் ஒரு கூலித் தொழிலாளி. வயது 56. எனக்கு ரத்த அழுத்தம் உள்ளது. மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். ‘BP’ கட்டுப்பாட்டில் உள்ளதாக நர்ஸ் சொல்வார். ஒருமுறை எனக்கு சுகர் டெஸ்ட் எடுக்கச் சொன்னார். அதில் எனக்கு சுகர் இருப்பதாகச் சொன்னார். உணவுக் கட்டுப்பாடு குறித்தும் சொன்னார். சுகர் ஆய்வு குறித்தும் அது தொடர்பான விவரங்கள் குறித்தும் எனக்குப் புரியும்படி கூறுங்கள், டாக்டர்.

- இ. ராஜூ நரசிம்மன்.

உங்கள் ரத்தப் பரிசோதனை முடிவுகளைத் தெரிவிக்கவில்லை. ரத்தச் சர்க்கரை அளவு எவ்வளவு இருந்தது என்பது தெரிந்தால்தான் உங்களுக்குச் சர்க்கரை நோய் இருக்கிறதா, இல்லையா என்பதைத் தீர்மானிக்க முடியும். பொதுவாக, ஆரோக்கியமாக உள்ள ஒருவருக்கு அதாவது, இதுவரை சர்க்கரை நோய் இல்லாதவருக்கு வெறும் வயிற்றில் ரத்தச் சர்க்கரை 70 – 100 மி.கி./டெ.லி. என்கிற அளவிலும், உணவு சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 120 - 140 மி.கி./டெ.லி. என்கிற அளவிலும் இருக்கும். வெறும் வயிற்றில் ரத்தச் சர்க்கரை 100 – 125 மி.கி./டெ.லி. என்கிற அளவிற்கு இருக்கிறது என்றால், சர்க்கரை நோய் ஆரம்பித்திருக்கிறது என்று அர்த்தம். அப்போது உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிற்சிகளும் தேவை. இவற்றில் ரத்தச் சர்க்கரை அளவு இயல்பு நிலைக்குத் திரும்புகிறதா என்பதை மாதம் ஒருமுறை ரத்தச் சர்க்கரை அளவைப் பரிசோதித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். அது இயல்புநிலைக்குத் திரும்பவில்லை என்றால், மருத்துவரின் ஆலோசனைப்படி சர்க்கரை நோய்க்கான மாத்திரைகள் உட்கொள்ள வேண்டும். உங்கள் உடல்நலப் பிரச்சினை களுக்குச் செவிலியரிடம் ஆலோசனை கேட்பதைவிட மருத்துவரிடம் ஆலோசனை கேட்பதுதான் எப்போதும் சரியாக இருக்கும்.

கட்டுரையாளர், பொது நல மருத்துவர்.

தொடர்புக்கு: gganesan95@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in