கவனக்குறைவின் மிகையியக்க நிலை

கவனக்குறைவின் மிகையியக்க நிலை
Updated on
2 min read

டாக்டர் ராதிகா முருகேசன்

அமலாவுக்கு (கற்பனைப் பெயர்) 30 வயது. காலையில் எழுந்தவுடன் அன்றைய நாளுக்கான வேலைகளை நினைத்தால் பதற்றமாகவும் சோர்வாகவும் ஆகிவிடுவார்.

மற்றவர்களால் எளிதாகச் செய்யக் கூடிய வேலைகள்கூட இவருக்குப் பெரும் சுமையாக இருக்கும். கட்ட வேண்டிய மின்சாரக் கட்டணம், வீட்டுப் பால் கணக்கு என அறை மேசையில் வாரக்கணக்காகக் குவிந்து கிடக்கின்றன.

பணம் இல்லாமல் இல்லை. ஆனால், எதை முதலில் செய்வது என்று தெரியாத நிலை. எப்போதும் போல அவசர அவசரமாக வேலைக்குக் கிளம்புகிறார். எவ்வளவு சீக்கிரம் அலாரம் வைத்து எழுந்தாலும் வேலைக்குத் தினமும் தாமதமாகத்தான் செல்வார். ஏனோ காலம் எப்படிச் செல்கிறது என்றே அறியாமல் இருப்பார்.

எல்லாரும் எளிதாகச் செய்யும் பணிகளைச் செய்து முடிப்பதற்கே இப்படிக் கடினமாக உள்ளதே என்கிற எண்ணம் நாளடைவில் தாழ்வு மனப்பான்மையில் அவரைத் தள்ளியது. இதில் இவருக்கு ஏ.டி.ஹெச்.டி., என்பதன் ஓர் அங்கமான கவனக்குறைவு நிலை மட்டுமே உள்ளது. சிலருக்குக் கவனக்குறைவு மட்டும் இருக்கலாம் அல்லது மிகையியக்கத்தோடு சேர்ந்தும் இருக்கலாம்.

எதனால் ஏற்படுகிறது?

நம் மூளையின் முன் பகுதி (prefrontal cortex) நிர்வாகச் செயல்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு பகுதி. ஓர் அலுவலகத்திற்கு எப்படி ஒரு நிர்வாகி இருக்கிறாரோ அப்படியே மூளைக்கும். மூளையில் நிர்வாகம் சரிவர வேலை செய்யாவிட்டால் என்ன நடக்கும்? நீங்கள் இசைக் கலைஞர்களைப் பார்த்திருப்பீர்கள். ஒரு குச்சியை வைத்துக்கொண்டு எந்த ஓசை மேலோங்க வேண்டும், எப்போது எந்த இசை வெளிவர வேண்டும் என ஒருவர் தீர்மானிப்பார். மூளையிலும் உள்ள நிர்வாகச் செயல்பாடுகள் எனும் executive functions இப்படித்தான் நிர்வகிக்கப்படும். இது தவிர டோபமின், நார்எபினெஃபிரின் (dopamine, nor epinephrine) போன்ற நரம்பியக் கடத்திகள் குறைவான அளவில் காணப்படும்.

மரபுவழியில் வரக்கூடிய நிலைதான் ஏடிஹெச்டி என்றாலும் ஒரு குறிப்பிட்ட மரபணுவை அறிஞர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை. இது தவிர தாய் கருவுற்ற சூழலில் நிகழும் சில மாற்றங்கள், மது போன்றவையும் இந்த நிலை ஏற்படக் காரணிகளாகும்.

டாக்டர் ராதிகா முருகேசன்
டாக்டர் ராதிகா முருகேசன்

பாதிப்புகள்

நிர்வாகச் செயல்களில் குறைபாடு இருப்பதால் இவர்கள் கவனத்தைச் சரிவர ஒழுங்குபடுத்த முடியாது. கவனம் சிதறிப்போகும். சில நேரம் ஒரு வேலையைச் செய்துமுடிக்க அதிகக் கவனம் எடுக்க (hyperfocus) வேண்டியதிருக்கும். சீராக ஒரு காரியத்தைச் செய்து முடிக்கச் சிலவற்றை முன்னிலைப்படுத்த வேண்டும். அடுத்த வேலைகளைப் படிப்படியாகச் செய்யவேண்டும். ஆனால், இதில் இவர்களுக்குச் சிக்கல் இருக்கும்.

அறிகுறிகள்

ஒரு காரியத்தைச் செய்ய செயல் நோக்கம் அறவே குறைந்து காணப் படும். கவனக்குறைவால் பிழைகள், நேரத்தை நிர்வாகம் செய்ய முடியாமல் தவித்தல், கவனக்குறைவால் பொருள் களைத் தொலைத்துவிடுவது, யாராவது பேசிக்கொண்டிருக்கும்போது கவனம் சிதறிச் செல்வது, எளிதாக வெளிச்சத்தங்கள் தங்கள் கவனத்தைச் சிதைப்பது உள்ளிட்ட கவனக் குறைவுக்கான அறிகுறிகள் இருக்கும்.

மிகையியக்க அறிகுறிகளும் இருக்கலாம். ஓரிடத்தில் இருக்க முடியாமல் தவிப்பது, எதையாவது பட படப்பாகச் செய்துகொண்டே இருப்பது, கடையில் வரிசையில் நிற்பது கூடக் கடினமாக இருப்பது, அதிகமாகப் பேசுவது, மற்றவர்களைப் பேசவிடாமல் தடுப்பது எனப் பல அறிகுறிகள் இருக்கலாம். பின்விளைவுகள் பற்றிச் சரிவரச் சிந்திக்காமல் முடிவுகள் எடுப்பது நடக்கலாம். உதாரணத்திற்கு ஒரு பயணத்தைத் திடீரென்று பதிவு செய்வர். இரண்டே நாள்களில் பயணத்தை ரத்து செய்துவிட்டுச் சென்றுவிடுவர். இப்படிச் சில அறிகுறிகள் இருக்கலாம். பின் விளைவுகள் பற்றிச் சிந்திக்காமல் செலவு செய்வதால் சிலருக்குப் பணப்பிரச்சினைகூட வரலாம். கோபத்தையும் மனநிலை யையும் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கலாம்.

சிகிச்சை

முன்பு குறிப்பிட்டது போல ஏடிஹெச்டி நிலையில் சில நரம்பியக் கடத்திகள் குறைவான அளவில் இருப்பதால் இவர்களுக்குத் தொடர்ந்து கிளர்ச்சியூட்டச் செய்ய போதைப் பொருள்கள் எடுத்துக்கொள்வது, தொடர்ந்து நாள் முழுவதும் காபி, டீ குடித்துக்கொண்டு இருப்பது போன்றவற்றைச் செய்வர்.

ஏடிஹெச்டி வாழ்க்கை முழுமைக்கும் இருக்கக்கூடிய ஒரு நிலை. ஆனால், அதன் வெளிப்பாடுகள் நாளடைவில் குறைந்துகொண்டே வரும். பலர் இந்த நிலையால் தங்கள் அன்றாடச் செயல்களைச் செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இதில் நல்ல செய்தி என்னவென்றால் இதற்கு மருந்துகள் உண்டு. சரியான சிகிச்சையின் மூலம் இந்த நிலையைக் கட்டுப்படுத்தித் தங்கள் அன்றாடச் செயல்பாடுகளைத் தடையின்றிச் செய்து முடிக்க முடியும்.

கட்டுரையாளர், மனநல மருத்துவர்.

தொடர்புக்கு: drradhika@chennaiminds.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in