

உடல் நலத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதே அளவு கவனத்தை மனநலத்துக்கும் அளிக்க வேண்டும். நெருக்கடி மிகுந்த சூழல்களுக்கு இடையே மனநலத்தைப் பாதுகாக்க ஆலோசனைகளை அளித்து ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிகாட்டும் செயலிகள் பல உள்ளன.
Your dost பள்ளி, கல்லூரி, அலுவலகம், தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்த அனைத்து மனநலப் பிரச்சினைகளையும் பயனர்கள் இந்தச் செயலியில் பகிர்ந்துகொள்ளலாம். மேலும் மன அழுத்தம், பதற்றம், மனக் குழப்பம், தற்கொலை உணர்வு, பயம் போன்ற உளவியல் பிரச்சினைகளுக்கான மனநல மருத்துவர்களையும் இச்செயலி மூலம் தொடர்பு கொள்ளலாம். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உரிய சிகிச்சைக்குப் பின் மீண்டவர்களின் நம்பிக்கையூட்டும் கதைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
Evolve சின்னஞ்சிறு வெற்றிகளையும் கொண்டாடு வதற்கான மனநிலையை இச்செயலி கற்பிக்கிறது. நம்மை நாமே நேசிப்பதும் நமது குறைகளை ஏற்றுக் கொள்வதுமே இவ்வுலகில் வாழ்வதற்கான முதல் தகுதி என்பதை நமக்கு இது நினைவுபடுத்துகிறது. மன அழுத்தத்தைக் குறைக்கவும் அந்தந்த கணத்தில் நிலைத்திருக்கவும் யோகா, உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சிகள் இச்செயலியில் பிரதானப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாகப் பால்புதுமையினர் மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகளையும் இது வழங்குகிறது.
WYSA செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான இச்செயலி மூலம் மனநலச் சிக்கல் சார்ந்த கேள்விகளை எழுப்பலாம். அக்கேள்விகளுக்குத் தகுந்த உளவியல் நலன் சார்ந்த பதில்களை இச்செயலி அளிக்கிறது. மேலும், மனநலம் சார்ந்த தீவிரப் பிரச்சினைகளுக்கு ஏற்ற தொழிற்முறை உளவியலாளர்களை இச்செயலி பரிந்துரைக்கிறது.
Pillow நல்ல உறக்கமே பெரும்பகுதி உடல், மனநலப் பாதிப்பைக் குறைத்துவிடும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். நமது உடல் ஆரோக்கியத்திற்கு அடித்தளமாக உள்ள உறக்கத்தை மேம்படுத்தும் பணியை இச்செயலி செய்கிறது.
உறக்கமின்மையினால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த எச்சரிக்கையையும் இது அளிக்கிறது. எத்தனை மணி நேரம் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறோம், குறட்டை, தும்மல், இருமல் போன்ற உடல் உபாதைகளையும் இச்செயலி கணக்கிட்டு அளிக்கிறது. இந்தத் தகவல்களின் அடிப்படையில் முறையற்ற தூக்கத்தைக் கொண்டவர்கள் தங்கள் உறக்கத்தை நெறிப்படுத்திக் கொள்ளலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள செயலிகளை கூகுள் ப்ளேஸ்டோரில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.