

பரோட்டா, நூடுல்ஸ் போன்றவற்றைச் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்று கூறுவது உண்மையா, டாக்டர்?
- வளர்மதி, சங்கரன்கோவில்.
பொதுவாக, மைதாவில் தயாரிக்கப்பட்ட பரோட்டா, நூடுல்ஸ், ரொட்டி போன்றவற்றைச் சாப்பிட்டால் கலோரிகள் அதிகமாக உடலில் சேரும்; அதனால் உடல் பருமன் ஏற்படும். இது இன்சுலின் எதிர்ப்புத்தன்மையை அதிகரிக்கும். அதன் விளைவாகச் சர்க்கரை நோய் வரும் என்கிற கருத்து உண்டு. இந்த இடத்தில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டிய சில கருத்துகளைக் குறிப்பிடுகிறேன். நீங்கள் பரோட்டா, நூடுல்ஸ், ரொட்டி போன்ற உணவு வகைகளைச் சாப்பிடும்போது அவற்றிலிருந்து எவ்வளவு மாவுச்சத்து உங்களுக்குக் கிடைக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். உங்களுக்குத் தேவையான அளவுக்கு மாவுச்சத்து கிடைக்கிறது என்றால் பிரச்சினை இல்லை. அதன் அளவு கூடும்போதுதான் உடல் பருமன் குறித்தும் சர்க்கரை நோய் குறித்தும் பயப்பட வேண்டும். நடைமுறையில் ருசிக்கு மயங்கி, மைதா உணவை அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டுவிடுவோம். ஆனால், பழியை உணவின்மீது போட்டுவிடுவோம். அடுத்து, நீங்கள் எந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்பதும் முக்கியம். ஒருவேளை, நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாவுச்சத்தின் அளவு அதிகரித்துவிட்டது எனும்போது, அதைச் சரிகட்டத் தேவையான உடற்பயிற்சிகளைக் கூட்டிக் கொண்டீர்கள் என்றாலும் நீங்கள் சர்க்கரை நோய் குறித்துப் பயப்படத் தேவையில்லை.
என் அக்காவிற்கு வயது 70. ஆரோக்கியமாக இருந்தார். கடந்த இரண்டு மாதங்களாக அவரின் பேச்சு வழக்கத்தைவிடக் குறைந்தது. வாய் வலப்பக்கமாகக் கோண ஆரம்பித்தது. டாக்டரிடம் காண்பித்ததில் வயதின் காரணமாக முக நரம்புகள் பாதிக்கப்பட்டிருக்கிறது என்று கூறி அதற்காக மாத்திரைகள் கொடுத்தார். வீட்டிலேயே பிசியோதெரபி செய்துகொள்ளும்படியும் கூறினார். அதன்படி செய்துவந்தோம். ஆனால், கடந்த ஒரு வாரம் முன்பு இரவு படுக்கச் சென்றவர் காலையில் முற்றிலுமாகச் செயலிழந்து கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். பின்பு அவரைப் பரிசோதித்த டாக்டர் அவரது மூளையில் கட்டி இருந்து அது ரத்தக்குழாயை அடைத்துக்கொண்டதால் இவ்வாறு ஏற்பட்டுவிட்டது என்று கூறிவிட்டார். என் அக்காவை முதலில் பரிசோதித்த டாக்டர் அப்போதே மூளை-நரம்பு மருத்துவரிடம் பரிசோதனைக்கு அனுப்பியிருந்தால், என் அக்காவை கோமா நிலைக்குப் போகாமல் காப்பாற்றியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். எனது கருத்து சரியா?
- மனோகரன், வெள்ளக்கோவில்.
உங்கள் அக்காவுக்கு வாய் கோணுகிறது, பேச்சு குறைகிறது எனும்போதே அவருடைய மூளையை சி.டி.ஸ்கேன் அல்லது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனையை மேற்கொண்டிருந்தால் காரணம் தெரிந்திருக்கும். தகுந்த சிகிச்சையை உடனே ஆரம்பித்திருக்க முடியும். உங்கள் அக்காவுக்கு மூளையில் கட்டி இருந்ததாகச் சொல்கிறீர்கள். இது ஒரு நாள்பட்ட பிரச்சினை. இதனால் இதற்கு முன்பு தலைவலி, வாந்தி, குறுமயக்கம் போன்ற அறிகுறிகள் தெரிந்து, அவற்றை உங்கள் அக்கா கவனிக்கவில்லையா என்பதும் தெரிய வேண்டும். இப்போதுதான் பிரச்சினை ஆரம்பித்தது என்றால், மூளைக்கட்டியின் தன்மை, அளவு, மூளையில் அது இருக்கும் இடம், அதை உடனடியாக அகற்ற முடியும் என்கிற நிலையில் இருந்ததா, இல்லையா, வேறு சிகிச்சைகள் பலன் தருவதற்குச் சாத்தியம் இருந்ததா போன்ற பல்வேறு தகவல்களை வைத்துத்தான், உங்கள் அக்காவுக்கு கோமா வந்ததைத் தடுத்திருக்க முடியுமா என்று சொல்ல முடியும்.
நான் வேலை செய்யும் இடத்தில் இயந்திரச் சத்தம் மிக அதிகம். ஒரு பாதுகாப்புக்காகக் காதில் பஞ்சு வைத்து அடைத்துக் கொள்ளலாமா, டாக்டர்?
- குமரேசன், ராணிப்பேட்டை.
ஒலியை ‘டெசிபல்’ எனும் அலகால் அளக்கிறோம். உதாரணமாக, முணு முணுப்பது 20 டெசிபல். அலுவலகச் சத்தம் 40 டெசிபல். மழைச் சத்தம் 50. நாம் சாதாரணமாகப் பேசும்போது 55 - 65 டெசிபல். ரயில் சத்தம் 80 டெசிபல். இடிச் சத்தம் 120. பொதுவாக, 70 டெசிபல் வரை கேட்பது காதுக்குப் பாதுகாப்பு. 90 டெசிபல் சத்தத்தை எட்டு மணி நேரத்துக்குத் தொடர்ந்து கேட்டால், அது காதைப் பாதிக்கலாம். உங்கள் நிறுவனத்தின் இயந்திரச் சத்தம் எத்தனை டெசிபல் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அது 70 டெசிபல் அளவுக்கும் அதிகமென்றால், உங்கள் காதுக்குப் பாதுகாப்பு அவசியம். காதில் பஞ்சு வைத்துக்கொள்வது பாதுகாப்பானதுதான் என்றாலும், இது மட்டுமே போதாது. இதற்குப் பதிலாக ‘இயர் பிளக்’கைக் (Ear Plug) காதில் பொருத்திக்கொள்ளலாம். இது 25 டெசிபல் சத்தம் வரை தடுக்கக்கூடியது. 100 டெசிபலுக்கும் அதிகமாகச் சத்தம் உள்ள இடங்களில் வேலை பார்ப்பவர் களுக்கு ‘இயர் மஃப்’ (Ear Muff) எனும் கருவி நல்ல பலன் தரும். இது வெளிக்காது முழுவதையும் மூடி, பெருமளவு சத்தத்தைக் காதுக்குள் நுழையவிடாமல் வடிகட்டிவிடும்.