

எனக்கு வயது 67. நான்கு மணி நேரத் தூக்கமே இரவில் கிடைக்கிறது. 10 மணிக்குத் தூங்கினாலும் 4 மணி நேரம்தான். 12 மணிக்குத் தூங்கினாலும் 4 மணி நேரம்தான். 4 மணி நேரத் தூக்கத்துக்குப் பிறகு தூக்கம் கலைந்து விழிப்பு வந்துவிடுகிறது. அதன் பின் தூக்கம் வருவதில்லை. அலாரம் அடித்ததுபோல் தூக்கம் போய் விழிப்பு வந்துவிடுகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும், டாக்டர்? - கே. கிருஷ்ணசாமி, உடுமலை.
தூக்கம் குறைவதற்கு உங்கள் வயது ஒரு காரணமாக இருக்கலாம். இது தவிர, உடல் பிரச்சினைகளும் மனப் பிரச்சினைகளும் இதற்குக் காரணமாகலாம். உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனைப்படி காரணம் தெரிந்து சிகிச்சை பெறுங்கள். உங்கள் பிரச்சினைக்குத் தூக்க மாத்திரைகள் மட்டும் பலன் தராது. தூக்கத்தைத் தூண்டும் இந்தப் பத்துக் கட்டளைகளையும் கடைப்பிடியுங்கள்:
1. இரவில் படுக்கச்செல்லும் முன்பு வெளியில் சிறிது நேரம் காலார நடந்துசெல்லுங்கள். 2. பகலில் வீட்டிலேயே மேற்கொள்ளக்கூடிய சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். 3. இரவிலும் ஒருமுறை குளிக்கலாம். 4. இரவில் எளிய உணவு வகைகளைச் சாப்பிடுங்கள். 5. இரவில் காபி, தேநீர், மது போன்றவற்றை அருந்த வேண்டாம். 6. புகைபிடிக்காதீர்கள். 7. இரவில் நீண்ட நேரம் கைபேசியைப் பயன்படுத்தாதீர்கள். 8. தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னாலும் அதிக நேரம் உட்காராதீர்கள். 9. வீட்டில் நல்ல தூக்கச் சூழலை உருவாக்குங்கள். 10. பகலில் தூங்க வேண்டாம்.
எனக்குச் சிறுவயதிலிருந்தே தொப்புள் வெளியேதான் தெரிகிறது. எனக்கு 25 வயது ஆகிவிட்டது. இது இன்னும் அப்படியேதான் இருக்கிறது. என்ன காரணம், டாக்டர்? பின்னாளில் இதனால் பிரச்சினை ஏற்படுமா? - ஷிவ பிரியா.
தொப்புளைச் சுற்றியுள்ள தசைகள் வலுவிழக்கும்போது அங்கே குடலிறக்கம் (Umbilical hernia) ஏற்படுகிறது. இதனால் தொப்புள் பெரிதாகத் தெரிகிறது. உங்களுக்குப் பிறவியிலேயேகூட இது ஏற்பட்டிருக்கலாம். இதை இப்போதே அறுவைசிகிச்சை மேற்கொண்டு சரிசெய்துவிட வேண்டும்.
இல்லாவிட்டால், பின்னாளில் இது பிரச்சினை செய்யக்கூடும். எப்படியெனில், இப்போது உள்ளுக்கும் வெளிப்பக்கத்துக்குமாக வந்துபோய்க் கொண்டிருக்கும் குடலானது, திடீரென்று முறுக்கிக்கொள்ளும். அதன் கழுத்தில் ஒரு முடிச்சு விழும். இதனால், அந்தப் பகுதிக்கு ரத்தம் வருவது தடைபடும். குடல் அழுகிவிடும். குடலில் துளை விழுந்து வயிற்றுக்குள் மலம் கசியும். வயிறு உப்பி, வலி எடுக்கும். வாந்தி வரும்.
ரத்த அழுத்தம் குறைந்து, மயக்கம் வரும். இந்த நிலைமையில் அவசர அவசரமாக அறுவைசிகிச்சை மேற்கொள்ள வேண்டி வரும். அதில் ஆபத்தும் உண்டு. எனவே, குடலிறக்கத்தைப் பொறுத்தவரை பிரச்சினை பெரிதாவதற்குள் அறுவைசிகிச்சை மேற்கொண்டு சரிசெய்துவிட வேண்டும். அதற்கு யோசிக்கக் கூடாது.
என் கணவருக்கு 48 வயது. மதுப்பழக்கம் உண்டு. சில வாரங்களாக அவருக்கு மலம் கறுப்பு நிறத்தில் செல்கிறது. எப்போதும் களைப்பாக இருக்கிறார். பசி இல்லை என்கிறார். அவருக்குப் பல அலோபதி மருந்துகள் ஒத்துக்கொள்ளாது. அதனால், சிகிச்சைக்கு வர மறுக்கிறார். என் கணவ ருக்கு வந்துள்ள பிரச்சினை என்ன? இதற்கு என்ன செய்யலாம்? - கோகிலவாணி, திருவாரூர்.
மலம் கறுப்பாகச் செல்கிறது என்றால், உணவுக்குழாயில் தொடங்கி குதம் வரை உள்ள குடல் பகுதிகளில் எங்கிருந்தாவது ரத்தம் கசிகிறது என்று அர்த்தம். உங்கள் கணவருக்கு மதுப்பழக்கம் இருப்பதால், அவருக்கு முக்கியமாக இரண்டு வழிகளில் இந்த ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கலாம். முதலாவது, கல்லீரல் சுருங்கியிருக்கும் (Cirrhosis Liver).
இதனால், உணவுக்குழாயில் ரத்தக்குழாய்கள் வீங்கி, வலுவிழந்து, சிதைந்து (Esophageal varices) ரத்தக்கசிவை உண்டாக்கியிருக்கும். அடுத்ததாக, உணவுக்குழாயின் கீழ்முனையிலோ, இரைப்பையிலோ கடுமையான புண் ஏற்பட்டிருக்கலாம். அதிலிருந்தும் ரத்தம் கசியலாம். இந்தக் காரணங்கள் தவிர, இரைப்பையில் புற்றுநோய், நீர்க்கட்டிகள் (Polyps), ரத்தம் உறையும் தன்மையில் பிரச்சினை போன்றவற்றாலும் ரத்தம் கசிந்து மலம் கறுப்பாகப் போகலாம்.
பொதுவாக, கல்லீரல் பிரச்சினை காரணமாக ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதையும், இரைப்பைப் பிரச்சினையையும் எண்டோஸ்கோப்பி பரிசோதனையில் தெரிந்துகொள்ளலாம். உணவுக்குழாயில் ரத்தக்குழாய்கள் சிதைந்து இருந்தால், எண்டோஸ்கோப்பி வழியாகவே அதைச் சரிசெய்துவிடலாம். ‘பேண்டிங்’ (Banding) எனும் முறையில் கசிவு உள்ள ரத்தக்குழாயில் சிறிய முடிச்சு போட்டுவிட்டால், ரத்தக்கசிவு நின்றுவிடும்.
அடுத்து, இரைப்பையில் ரத்தக்கசிவு இருந்தால், அந்த இடத்தில் ஒரு கிளிப்பைப் (Hemoclip) பொருத்திச் சரிசெய்துவிடலாம். இது தவிர, ஊசி மூலம் சில வகை மருந்துகளைப் புண்ணைச் சுற்றிச் செலுத்தியோ, வெப்பம் கொடுத்துப் பொசுக்கியோ (Argon Plasma Coagulation – APC) இரைப்பைப் புண்ணிலிருந்து வரும் ரத்தக்கசிவைச் சரிசெய்யலாம்.
இந்தச் சிகிச்சைகளுக்கு மருந்துகள் அவ்வளவாகத் தேவைப்படுவதில்லை. ஆகவே, பயப்படாமல் இந்தச் சிகிச்சைகளை உங்கள் கணவருக்கு மேற்கொள்ள முடியும். தேர்ந்த இரைப்பைக் குடல்நல மருத்துவரைச் (Gastroenterologist) சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.
- கட்டுரையாளர், பொது நல மருத்துவர்; gganesan95@gmail.com