சொத்தைப் பல்லை நீக்குவதுதான் தீர்வா?

சொத்தைப் பல்லை நீக்குவதுதான் தீர்வா?
Updated on
2 min read

சுமார் முப்பது வருடங் களுக்கு முன்னால் பல் மருத்துவத்துறையில் வேர்சிகிச்சை போன்ற நவீனச் சிகிச்சை முறைகள் இல்லை. ஆகையால் சொத்தைப் பற்களை எடுத்துவிட்டுக் கழற்றி மாட்டக்கூடிய (Removable Denture) அல்லது பிரிட்ஜ் எனப்படும் நிரந்தரச் செயற்கைப் பற்களை (Fixed Denture) பொருத்தி விடுவார்கள்.

ஆனால், இன்றைக்கு அப்படி இல்லை. பல்லை அகற்றுவது என்பது பல் மருத்துவரின் கடைசி தேர்வாகத்தான் இருக்கிறது. ஃபில்லிங், வேர்சிகிச்சை, போஸ்ட் முதலான நவீனச் சிகிச்சைகளின் மூலம் இயற்கைப் பற்களை முடிந்த வரை இருக்கும் இடத்திலேயே பாதுகாத்துத் தக்கவைப்பதே இன்றைய பல் மருத்துவர்களின் ஒரே குறிக்கோளாக உள்ளது.

வேர்சிகிச்சை
வேர்சிகிச்சை

பற்களை ஏன் எடுத்து விடாமல் பாதுகாக்க வேண்டும்? - பொதுவாக ஒரு பல்லில் சொத்தை ஏற்பட்டதிலிருந்து அதை எடுத்தே ஆக வேண்டும் என்கிற சூழல் வரும் வரை தோராயமாகப் பத்து முதல் இருபது ஆண்டுகள் ஆகும். சொத்தையானது, பல்லின் ஆழத்துக்குச் செல்லாமல் மேற்புறமாக எனாமல், டென்டின் பகுதி வரை மட்டும் இருந்தால் சொத்தையை அகற்றிவிட்டு, அதை அடைத்து (ஃபில்லிங்) சரிசெய்துவிடலாம்.

ஆனால், பல்லினுள் ஆழமாக அதாவது பற்கூழ் என்றழைக்கப்படும் பல்லின் நரம்புப்பகுதி வரை சென்றுவிட்டால் வேரின் அடிப்பாகம் வரையுள்ள பற்கூழை முற்றிலுமாக அகற்றிய பின்னரே அடைக்க வேண்டும். இதைத்தான் வேர்சிகிச்சை (Root Canal Treatment - RCT) என்று அழைக்கிறோம். வேர்சிகிச்சை என்பது ஆழமான பல்சொத்தை மற்றும் தொற்றினால் பாதிக்கப் பட்டுள்ள பற்களை அகற்றாமல் பாதுகாக்க உதவும் நவீனச் சிகிச்சை முறை.

பல்லில் சொத்தை உள்ள ஒருவர் எந்த நிலையில் பல்மருத்துவரிடம் வருகிறார் என்பதில்தான் அனைத் தும் இருக்கிறது. பல் சொத்தை தொடக்க நிலையில் உள்ளபோதே பல் மருத்துவரைச் சந்தித்துவிட்டால் சொத்தையைச் சுத்தம் செய்து அடைத்துச் சராசரியாக ஐந்து முதல் பத்து வருடங்கள் அந்தப் பல்லைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

அதன் பின்னர் தேவைப்பட்டால் வேர்சிகிச்சை செய்து மேலும் பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரை பல்லைக் காப்பாற்றலாம். இதைத் தவிர ஒருவேளை பல் உடைந்திருந்தால் அந்தப் பல்லை எடுக்காமல் டென்டல் போஸ்ட் எனும் சிகிச்சை முறையைக் கொண்டு காப்பாற்றலாம்.

சிகிச்சைக்குப் பின், பற்களை முறையாக ஸ்கேலிங், ஃப்ளாசிங் செய்து சுத்தமாக வைத்திருப்பது முக்கியம். இப்படிச் சொத்தையைத் தொடக்க நிலையில் இருக்கும்போதே கண்டறிந்துவிட்டால் போதும், அவற்றை எடுக்காமல் காப்பாற்றி விடலாம்.

இயற்கைப் பற்களை முற்றிலும் இழந்த வர்கள் உணவை மென்று சாப்பிடும் வழக்கத்தை இழக்கிறார்கள். மென்று சாப்பிடு வது குறையும்போது மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் குறை வதால் மறதி நோய் (Dementia) மற்றும் அல்சீமர்ஸ் (Alzheimer’s) நோய் ஏற்படுவதாகச் சமீபத்திய ஆய்வொன்று கூறுகிறது.

ஆகவே இயற்கைப் பற்களை இயன்ற வரையில் காப்பாற்றித் தக்கவைத்துக்கொள்ள வேண்டும். பல்லை எடுப்பதுதான் ஒரே தீர்வு எனும் பட்சத்தில் பல் இல்லாத இடத் தில் செயற்கைப் பல்லைத் தவறாமல் பொருத்திக்கொள்ள வேண்டும்.

- கட்டுரையாளர், வேர்சிகிச்சை சிறப்புப் பல் மருத்துவர்; drrvaparajitha@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in