

நானும் என் மனைவியும் நாற்பது வயதைக் கடந்துவிட்டோம். தற்போது ‘முழு உடல் பரிசோதனை’ செய்துகொள்ளலாமா என யோசிக்கிறோம். முழு உடல் பரிசோதனை என்பது என்ன? சில தனியார் மருத்துவமனையினர் இதனைத் தவறாகப் பயன்படுத்தி நம்மை நோயாளியாக்கிவிடுவர் என நண்பர்கள் எச்சரிக்கின்றனர். இந்தக் குழப்பத்தைத் தீர்த்து உதவுங்கள். - பாலகுமரன் குமார், திண்டுக்கல்.
‘முழு உடல் பரிசோதனை’ என்பது ஒரு நபரின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மதிப்பிடுவதற்காக மேற்கொள்ளப்படும் பரிசோதனை முறை. இது ஒரு வகை நோய்த் தடுப்பு மருத்துவம். வழக்கத்தில், பல நோய்கள் உடலுக்குள் ஆரம்பித்திருக்கும். அப்போது அவை அறிகுறிகளைக் காட்டாது.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கண் விழி அழுத்த நோய், புற்றுநோய், இதயநோய், சிறுநீரக நோய் போன்றவற்றை இதற்குச் சில உதாரணங்களாகக் கூறலாம். இவை வெளியே தெரிய ஆரம்பிக்கும்போது பல கட்டங்களைக் கடந்திருக்கும். அப்போது சிகிச்சை தீவிரமாகும்.
மாறாக, முறையான கால இடைவெளியில் ‘முழு உடல் பரிசோதனை’களை மேற்கொள்ளும் போது, இந்த நோய்கள் இருப்பதை ஆரம்பக் கட்டத்திலேயே தெரிந்து கொள்ள முடியும். அதற்கேற்ப சிகிச்சைகளை மேற்கொண்டு, அந்த நோய்கள் மேலும் வலுப்படாத வகையில் தடுத்துக்கொள்ள முடியும். இதனால் சிகிச்சை எளிதாகும்; சிகிச்சைக்கான செலவு குறையும்; நோயின் தொடர்விளைவுகளைத் தடுக்க முடியும்.
பொதுவாக, ஒருவரின் வயது, பாலினம், பரம்பரை மருத்துவ வரலாறு, ஏற்கெனவே எடுத்துவரும் சிகிச்சை போன்றவற்றின் அடிப்படை யில் ‘முழு உடல் பரிசோதனை’கள் மேற்கொள்ளப் படுகின்றன. அவற்றில், ரத்தப் பரிசோதனையும் சிறுநீர்ப் பரிசோதனையும் முக்கியமானவை. ரத்தத்தில் அணுக்கள் அளவும், சர்க்கரை, ‘ஹெச்பிஏஒன்சி’, கொலஸ்டிரால், யூரியா, கிரியாட்டினின் போன்றவற்றின் அளவுகளும் பரிசோதிக்கப்படும்.
ரத்த அழுத்தம், மார்பு எக்ஸ்-ரே, இசிஜி, எக்கோ, வயிற்று அல்ட்ரா சவுண்டு ஸ்கேன், கல்லீரல் திறன், தைராய்டு பரிசோதனை களும் இதில் அடங்கும். இவற்றோடு, கண், காது, பல் பரிசோதனை களும் தேவைப்படும். பெண்களுக்கு, வயதைப் பொறுத்து மேமோகிராம், பாப் ஸ்மியர் பரிசோதனைகள் அவசியப்படும். இதயம், நுரையீரல், வயிற்று உறுப்புகள் ஆகியவற்றின் ஆரோக்கியத்தை மருத்துவர் உடல் ரீதியாகப் பரிசோதித்து அறிவார்.
அவசியப்பட்டால், ஆஞ்சியோகிராம், சி.டி, எம்.ஆர்.ஐ., ‘பெட்’(PET) ஸ்கேன் போன்ற சில சிறப்புப் பரிசோதனைகளை மேற்கொள்ளவும் பரிந்துரைப்பார். பரிசோதனைகளின் ஒட்டுமொத்த முடிவுகளை வைத்து, ஏற்கெனவே இருக்கும் நோயின் நிலை, நோய் வருவதற்குச் சாத்தியமுள்ள நிலை போன்றவற்றை மருத்துவர் தெளிவுபடுத்துவார். ஏற்கெனவே இருக்கும் நோய்க்கான மருத்துவத்தைச் சொல்வார்; வரக் கூடிய நோய்க்குத் தடுப்பு முறைகள் கூறுவார்.
பொதுவாக, ‘முழு உடல் பரிசோதனை’யின்போது புதிதாக அறியப்படும் நோயை ஏற்றுக்கொள்ள பலருக்கும் மனம் வராது. நோயின் அறிகுறிகள் இல்லாதபோது உடலுக் குள் ஒரு நோய் இருப்பதாகக் கூறினால், ‘இது வணிக நோக்க மாக இருக்குமோ?’ என்று மருத்து வரின்மேல் சந்தேகம்தான் வரும்.
அப்படிச் சந்தேகம் வந்தால், உங்கள் குடும்ப மருத்துவரிடம் ‘இரண்டாம் ஆலோசனை’யைப் பெற்றுக்கொள்ளலாம். தனியார் மருத்துவர்களிடம் நம்பிக்கை இல்லையென்றால், அரசு மருத்துவமனைகளில் இந்தப் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படு கின்றன; பயன்படுத்திக் கொள்ளலாம்.
எனக்கு வயது 23. நான் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவன். ஒரு நாள் பயிற்சித் தேர்வு ஐந்து மணி நேரம். தலை குனிந்தபடியே எழுதிப் பின்கழுத்து பிடித்துக்கொண்டது. மாத்திரை எடுத்துக்கொண்டாலும் கழுத்து வலி குறையவில்லை. அதோடு, இப்போது தலைவலியும் வந்துவிட்டது. இதனால், மிகுந்த மன உளைச்சலாக உள்ளது. நான் என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. நீங்கள்தான் என் குழப்பத்தைத் தீர்க்க வேண்டும். - எம். சண்முகம்.
உங்கள் கழுத்து வலிக்குத் தேர்வு எழுதுவது மட்டும்தான் காரணமா அல்லது மற்ற காரணங்களும் உண்டா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். உதாரணமாக, ஒன்றுக்கும் மேற்பட்ட கெட்டியான உயரமான தலையணைகளை வைத்து அதிக நேரம் படுத்துக்கொண்டு படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, இரவில் அப்படியே உறங்குவது, கழுத்துக்கும் தோள்பட்டைக்கும் இடையில் கைபேசி வைத்துப் பேசுவது போன்றவற்றையும் காரணங்களாகச் சொல்லலாம். இந்தப் பழக்கங்கள் இருந்தால் மாற்றிக்கொள்ளுங்கள்.
உங்கள் கழுத்து வலிக்குக் காரணம் தசைப்பிடிப்பாக இருக்கும்பட்சத்தில் கழுத்துக்குப் போதிய ஓய்வு கொடுத்தால் வலி குறையும். கழுத்தில் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம். கழுத்து, தோள்பட்டை தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகள் வலியைக் குறைக்க உதவும். உடனடி நிவாரணத்துக்கு ‘IFT’ எனும் இயன்முறைச் சிகிச்சை சிறந்தது.
கழுத்து குனிந்த நிலையில் அமர்ந்து நீண்ட நேரம் பணிபுரிவதைத் தவிருங்கள். அப்படிப் பணிபுரிவது கட்டாயம் என்றால், இடையிடையே கழுத்தை நிமிர்த்தி, பக்கவாட்டிலும் மேலும் கீழும் அசைத்துக்கொள்ளுங்கள். படுத்து உறங்கும்போது மென்மையான, கனமற்ற தலையணையைப் பயன் படுத்துங்கள்.
- கட்டுரையாளர், பொது நல மருத்துவர்; gganesan95@gmail.com
| மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை: உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு டாக்டர் கு.கணேசன் பதில் அளிக்கிறார். கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் அல்லது மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம். மின்னஞ்சல்: nalamvaazha@hindutamil.co.in |