டாக்டர் பதில்கள் 33: தினமும் முட்டை சாப்பிடலாமா?

டாக்டர் பதில்கள் 33: தினமும் முட்டை சாப்பிடலாமா?
Updated on
3 min read

என்னுடைய மாமாவுக்கு வயது 75. சமீபத்தில் அவருக்குத் திடீரென்று படபடப்பு வந்து மயங்கிவிட்டார். மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவருக்கு இதயத்தில் ‘SVT’ எனும் கோளாறு இருப்பதாகவும் அதனால் இதயம் வேகமாகத் துடிப்பதாகவும், அதற்கு ‘EPS’ எனும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும், அதைத் தொடர்ந்து ‘RFA’ சிகிச்சை தேவைப்படும் என்றும் கூறினார்கள். இந்த மருத்துவ பதங்களை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இது குறித்துக் கூடுதல் தகவல்களை உங்களிடம் எதிர்பார்க்கிறேன், டாக்டர். இந்தச் சிகிச்சை சென்னையில் இலவசமாக எங்கே மேற்கொள்ளப்படுகிறது என்பதையும் தெரிவியுங்கள். - ஜெய்சங்கர், சென்னை.

உங்கள் மாமாவுக்கு ‘அதிவேக இதயக் கீழறைத் துடிப்புக் கோளாறு’ (Supra Ventricular Tachycardia – SVT) ஏற்பட்டிருக்கிறது. இதயத்தின் வலது மேலறையில் மின்னோட்டம் புறப்படும் இடத்திலோ அது பரவும் இடத்திலோ ஏற்படும் பிரச்சினையால் இந்தக் கோளாறு உண்டாகிறது. மின்னோட்டத்தின் அளவு அதிகரித்திருக்கலாம் அல்லது விட்டுவிட்டு மின்னோட்டம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினை இதயத் துடிப்பின் லயத்தைப் (Heart rhythm disorder) பாதிக்கலாம். அதிக மின்னோட்டத்தால் இதயத் துடிப்பின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

பாதிக்கப்பட்டவரின் பிரச்சினையைப் பொறுத்து சிகிச்சை அமையும். அந்தப் பிரச்சினைகளைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் ‘EPS’ எனும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவ ஆலோசனை கூறப்பட்டுள்ளது. ‘EPS’ என்பது ‘electro physiological study’ஐக் குறிக்கும். சில மின் கருவிகளை இதயத்துக்கு நேரடியாக அனுப்பி இதய மின்னோட்டத்தை முழுவதுமாகச் சோதிக்கும் முக்கியப் பரிசோதனை இது. இந்தப் பரிசோதனைக்கு மின்உடற்செயலியல் மருத்துவரைச் (Electrophysiologist) சந்திக்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவரின் பிரச்சினையைப் பொறுத்து, மருந்துச் சிகிச்சை, இதய முடுக்கி (Pacemaker) பொருத்தப்படும் சிகிச்சை, ‘வானொலி அலைவரிசை நீக்கம்’ சிகிச்சை (Radio Frequency Ablation - RFA) ஆகியவற்றில் ஒன்று தேர்வு செய்யப்படும். உங்கள் மாமாவுக்கு ‘வானொலி அலைவரிசை நீக்கம்’ தேவைப்படும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இது சென்னையில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. பொதுவாக, அதிவேக இதயக் கீழறைத் துடிப்புக் கோளாறைச் சரியான நேரத்தில் கவனித்துச் சிகிச்சை பெறாவிட்டால், திடீரென்று இதயம் செயலிழப்பதற்கும் பக்க வாதம் வருவதற்கும் சாத்தியம் இருப்பதால், உடனடியாக உங்கள் மாமாவுக்குத் தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளுங்கள்.

எனக்கு வயது 45. உடல் பருமன் உள்ளது. சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் உள்ளது. நான் தினமும் இரண்டு முட்டை சாப்பிடுகிறேன். அப்படிச் சாப்பிடலாமா? - விவேகானந்தன், கோயம்புத்தூர்.

முட்டை என்றதும் எல்லாருக்கும் அதில் உள்ள கொலஸ்டிரால் எனும் கொழுப்புதான் முன்னத்தி ஏராக முன்வந்து அச்சுறுத்தும். கொலஸ்டிரால் தவிர நமக்குத் தேவையான புரதச் சத்தும் பலதரப்பட்ட விட்டமின்களும் தாதுக்களும் அதில் உள்ளதைப் பலரும் மறந்துவிடுகிறார்கள்.

நடுத்தர அளவுள்ள ஒரு முட்டையில் 200 மி.கி. கொலஸ்டிரால் உள்ளது. உங்களுக்கு இதய நோய் இல்லை; ரத்தத்தில் கெட்ட கொலஸ்டிரால் (LDL) 100 மி.கி. அளவுக்கும் குறைவாக இருக்கிறது என்றால் நீங்கள் தினமும் இரண்டு முட்டை சாப்பிடலாம். இந்தப் பிரச்சினைகள் இருந்தால், தினமும் ஒரு முட்டை போதும்.

இரண்டு முட்டை சாப்பிடும்போது 13 கிராம் புரதம், 9.5 கிராம் கொழுப்பு, 56 மி.கி. கால்சியம், 1.8 மி.கி. இரும்புச் சத்து ஆகியவை கிடைக்கின்றன. உங்களுக்கு உடல் பருமன் இருப்பதால், முட்டை சாப்பிடுவதை உங்கள் மனைவி தடுத்திருக்கலாம். உடல் பருமனைக் கட்டுப்படுத்த மாவுச்சத்து உள்ள உணவையும் நொறுக்குத் தீனிகளையும்தான் முதலில் குறைக்க வேண்டும். அதோடு, உடற்பயிற்சிகளைக் கூட்ட வேண்டும்.

என் வயது 43, கடந்த ஓர் ஆண்டுக்கு முன்பாக எனக்கு முகவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து 30 நாள்கள் நரம்பியல் மருத்துவரின் ஆலோசனைப்படி ஸ்டீராய்டு மருந்துகள் மற்றும் பிசியோதெரபி சிகிச்சை மேற்கொண்டதன் அடிப்படையில் முகவாதம் சரியானது. இருப்பினும், முன்புபோல் சரியான வகையில் இடது பக்க முகம், கண், வாய் போன்றவை செயலற்றவை போன்றே உள்ளன. இதற்குத் தொடர்ந்து நான் மருந்துகளை உள்கொள்ள வேண்டுமா? இவை மீண்டும் முகவாதம் வருவதற்கான அறிகுறிகளாக இருக்குமோ என்று அஞ்சுகிறேன். தங்களின் மேலான ஆலோசனை தேவை - சி. நீ. வீரமணி, அம்மையார்குப்பம்.

உங்களுக்குக் காணப்படும் அறிகுறிகள் பழைய பிரச்சினையின் நீட்சிதான்; மீண்டும் முகவாதம் வருவதற்கான அறிகுறிகள் அல்ல. மருத்துவரின் ஆலோ சனைப்படி சில நரம்பூட்ட மாத்திரைகளையும் ஊசிகளையும் பயன்படுத்துங்கள். அதோடு, இயன் முறைச் சிகிச்சையைத் (Physiotherapy) தொடர்ந்து மேற் கொள்ளுங்கள். பலன் கிடைக்கும்.

- கட்டுரையாளர், பொது நல மருத்துவர்; gganesan95@gmail.com

மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை: உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு டாக்டர் கு.கணேசன் பதில் அளிக்கிறார். கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் அல்லது மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம்.

மின்னஞ்சல்: nalamvaazha@hindutamil.co.in
முகவரி: டாக்டர் பதில்கள், நலம் வாழ,
இந்து தமிழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in