மருத்துவ செயலிகள் அறிவோம்

மருத்துவ செயலிகள் அறிவோம்
Updated on
2 min read

ஆரோக்கியத்தை மறந்து நாளும் ஓடிக்கொண்டிருக்கும் வேலைபளுவில் பலரும் சிக்கிக் கொண்டிருக்கிறோம். இதில் உடல்நலம் சார்ந்த கவனம் பலருக்கும் இருப்பதில்லை. அந்நேரத்தில் எச்சரிக்கை மணி அடித்து, ‘உடல் நலமே முக்கியம்’ என நினைவூட்டினால் உதவியாக இருக்கும் அல்லவா? அதைத்தான் மருத்துவ செயலிகள் செய்கின்றன.

மெடிசேஃப் (Medi safe) - உடல் நலத்தை ஆரோக்கியமாகப் பேண நினைப்பவர்களுக்கு நண்பனாக உதவுகிறது மெடிசேஃப் (Medi safe) என்கிற மருத்துவ செயலி.
உங்கள் குடும்ப உறுப்பினர் நாள்பட்ட நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால் காலை, மதியம், இரவு வேளைகளில் அவர்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய மருந்து மாத்திரைகளைச் சரியான நேரத்துக்கு இச்செயலி நினைவூட்டுகிறது.

இச்செயலியில் நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய மருந்துகள் குறித்த தகவல்களும், அம்மருந்துகளை எப்போது எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது போன்ற தகவல்களும் மிக எளிமையாக விளக்கப்பட்டுள்ளன. மேலும், தேவைப்படும் மருந்துகள் அருகிலுள்ள எந்த மருந்தகத்தில் கிடைக்கும் என்பது போன்ற கூடுதல் தகவல்களும் இடம்பெற்றிருப்பது சிறப்பு. தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளை எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் அவை உடல் நலத்திற்கு நல்லதா என்பதையும் இச்செயலி மூலம் அறியலாம்.

ஸ்டெப்செட்கோ: ஸ்டெப் கவுன்டர் (Stepsetgo: Step Counter) - உடல், மன நிலையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நடைப்பயிற்சி சிறந்தது என்றே மருத்துவர்கள் பலரும் அறிவுறுத்து கின்றனர். அந்த வகையில் நடைப்பயிற்சியின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக ‘ஸ்டெப்செட்கோ: ஸ்டெப் கவுன்டர்' செயலி உள்ளது.

ஒரு நாள் எத்தனை அடிகளை நாம் எடுத்து வைக்கிறோம், இன்னும் கூடுதலாக எத்தனை அடி எடுத்துவைத்தால் நமது உடலிலுள்ள கொழுப்பு குறைக்கப்படும் என்பது உள்ளிட்ட உடல் நலம் சார்ந்த பல்வேறு தகவல்களை இச்செயலி அட்டவணையிடுகிறது. மேலும் தொய்வடையாமல் தினமும் நடைப்பயிற்சியை மேற்கொள்ள இச்செயலி நம்மை ஊக்கப்படுத்துகிறது.

ஃப்ளோ பீரியட்ஸ் (Flo Periods and Pregnancy Tracker) - PCOS காரணமாக, மாதவிடாய் தாமதமாகும்போது, மாதவிடாய்ச் சுழற்சியை ஒவ்வொரு மாதமும் கண்காணிக்கும் நிலை பெண்களுக்கு ஏற்படுகிறது. மாதவிடாய் சரியான நாளில் வரவில்லை என்றால் பதற்றம், மன அழுத்தத்துக்குத் தள்ளப்படும் பெண்கள் ஏராளம். மாதவிடாய் சுழற்சியைக் கண்காணித்து, மாதவிடாய்ச் சரியான நாளில் ஏற்படுகிறதா என்பதை அறிந்துகொள்ள ‘ப்ளோ பீரியட்ஸ்’ செயலி உதவுகிறது.

மாதவிடாய் காலத்தில் எம்மாதியான உணவினைப் பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்; அடுத்த மாதம் எந்த நாள் மாதவிடாய் ஏற்படும் என்பதைத் துல்லியமாகக் கணித்து இச்செயலி கூறுகிறது. மேலும், கர்ப்ப காலப் பெண்களுக்கு ஆரோக்கியமான வழிகாட்டுதல்களும் இச்செயலியில் இடம்பெற்றுள்ளன. மேலே குறிப்பிடப் பட்டுள்ள செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in