

ஒரு பெரியவர் இருந்தார். அவருக்கு எல்லாமே ராணுவ ஒழுங்குடன் இருக்க வேண்டும். திட்டமிட்ட நேரத்தில் எல்லாம் சரியாக நடக்க வேண்டும். ஒருமுறை அவரது மகன் விபத்து ஒன்றில் சிக்கிக்கொண்டான். உடனே அவருக்கு போன் செய்து ‘‘அப்பா, நான் வந்த பஸ் விபத்துக்குள்ளாகிவிட்டது’’ என்றான். அதற்கு அவர், ‘‘அதெல்லாம் இருக்கட்டும். ராத்திரி எட்டரை மணிக்குள்ள சாப்பிட வீட்டுக்கு வந்திடுவியா?’’ என்றார்.
பெரும்பாலும் வயது ஆக ஆக நம் உடலில் வளைந்துகொடுக்கும் தன்மை குறையத் தொடங்குகிறது. இதனால், முன்புபோல ஓடியாடி உழைப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. சோபாவுக்கு அடியில் விழுந்த பொருளை எடுக்கப் பேரனின் உதவி தேவைப்படுகிறது.
அதே நேரம், நம் மனதின் வளைந்துகொடுக்கும் தன்மையும் குறைந்து விடுகிறது. புதிதாக ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்வது சிரமமாக இருக்கிறது. பல வருடங்களாக வங்கியில் வரிசையில் நின்று டோக்கன் வாங்கிப் பழகிவிட்டுத் திடீரென்று ஏ.டி.எம். மூலம்தான் பணம் எடுக்க வேண்டும் என்றால் திகைப்பாக இருக்கிறது. மின்சாரக் கட்டணத்தை ஆன்லைனில் கட்டுங்கள் என்றால் மலைப்பாக இருக்கிறது.
புது விஷயங்களைத் தெரிந்துகொள்ள ஆர்வமின்மையும் இதற்கு ஒரு காரணம். அதுமட்டுமல்ல, ‘எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும். ஏற்கெனவே நன்கு தெரிந்த முறையிலேயே செய்துவிடலாமே’ என்ற அதீத பாதுகாப்பு உணர்வும் சேர்ந்துகொண்டு விடுகிறது. விளைவு? எல்லாமே ஒரு ஒழுங்குடன் இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஏதாவது ஒரு விஷயம் வழக்கத்துக்கு மாறாக நடந்தால் கோபப்படுகிறோம். காரணம் புது விஷயங்களின் மீதான பயம் மற்றும் ஆர்வமின்மையே.
திட்டமிட்ட ஒழுங்குடன் இருப்பது நல்ல விஷயம்தான். அதிலும் வயதானவர்களுக்கு மறதி, செயல் திறன் குறைவு போன்ற பிரச்சினைகள் இருக்கும்போது எதையும் ஒரு ஒழுங்குடன் செய்யத்தான் வேண்டும். ஆனால் அளவுக்கு மீறிய ஒழுங்கு என்பது புதிதாக எதையும் செய்யவிடாததாக மாறிவிடக் கூடாது. பல சமயங்களில் சின்ன விதிமீறலே புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஆரம்பப் புள்ளியாக இருந்திருக்கின்றன.
அதேபோல, சில வேளைகளில் நாம் திட்டமிட்டபடி நடக்காமல் போய்விடும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமேயன்றி ஏதோ இமாலயத் தவறு நடந்துவிட்டதுபோல வருந்தவோ, கோபப்படவோ தேவையில்லை.
காலையில் பேப்பர் போடும் பையன் தாமதமாக வந்தால் கோபப்படாமல், ‘‘என்னப்பா ஐ.பி.எல். பாத்துட்டுத் தூங்கிட்டயா?’’ என்று ஜோக் அடிக்கப் பழகுங்கள். ஒழுங்குடன் இருப்பது வேறு. செக்குமாட்டுத் தன்மையுடன் இருப்பது வேறு.