

எனக்கு வயது 58. 20 வருடங்களுக்கு முன்பு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துக்காக முழு உடல் பரிசோதனை செய்துகொண்டேன். அப்போது என் ‘இசிஜி’யில் இதயத் துடிப்புக் குறைபாடு உள்ளதாக மருத்துவர் தெரிவித்தார். இதயநல மருத்துவரைச் சந்தித்து ‘டிரட்மில் பரிசோதனை’ செய்துகொண்டேன். அதில் கோளாறு இல்லை என்று தெரிந்ததால் சிகிச்சை எதுவும் வேண்டாம் என்று அவர் கூறிவிட்டார். சமீபத்தில் மறு படியும் முழு உடல் பரிசோதனை செய்து கொண்டேன். இப்போதும் என் ‘இசிஜி’யில் இதயத் துடிப்புக் குறைபாடு உள்ளதாக வந்துள்ளது. எனவே, மின்உடற்செயலியல் மருத்துவரைச் (Electrophysio logist) சந்திக்க ஆலோசனை கூறப்பட்டது. எனக்கு உடலில் தொந்தரவு ஒன்றுமில்லை. நார்மலாக இருக்கிறேன். நான் அவசியம் மின்உடற்செயலியல் மருத்துவரைச் சந்திக்க வேண்டுமா? - சி. மீராபாய், மின்னஞ்சல்.
உங்களுக்குக் கடந்த 20 வருடங்களாக இதயத் துடிப்புக் குறைபாடு தொடர்ந்து இருப்பதை ‘இசிஜி’ பரிசோதனை தெரிவிக்கிறது. அதற்கான காரணம் தெரிய வேண்டுமானால், மின்உடற்செயலியல் மருத்துவரைச் சந்திக்க வேண்டும். இன்னும் சில பரிசோதனைகள் மூலம் உங்கள் பிரச்சினைக்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள முடியும்.
அந்தக் காரணத்தைப் பொறுத்து வரும்காலத்தில் அது இதயப் பாதிப்பை ஏற்படுத்துமா, அந்தப் பாதிப்பு அதிகரிப்பதைத் தடுக்க உங்களுக்குச் சிகிச்சை தேவையா என்று முடிவு செய்யப்படும். இந்தப் பரிசோதனை அரசு மருத்துவக் கல்லூரியுடன் இணைந்த மருத்துவ மனைகளில் இலவசமாகவே மேற் கொள்ளப்படுகிறது.
ஒரு சிறுநீரகத்துடன் மட்டுமேகூட நாம் வாழ முடியும் என்பது உண்மையா? அப்படியானால், நமக்கு ஏன் இரண்டு சிறுநீரகங்கள் இருக்கின்றன? - இல. குணசேகரன், சென்னை-90
ஒரு சிறுநீரகம் மூலம் ஆரோக் கியமாக வாழ முடியும் என்பது உண்மைதான். நமது சிறுநீரகங்கள் ரத்தத்தில் இருந்து கழிவுப் பொருள்களையும் அதிகப்படியான திரவத்தையும் வடிகட்டுவதற்குப் பொறுப்பேற்றுள்ள முக்கிய உறுப்பு களாகும். அதோடு, அவை ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகின்றன; முக்கியமான சில ஹார்மோன்களை உற்பத்தி செய்கின்றன; ரத்தத்தில் தாதுக்களின் சமநிலையைப் பராமரிக்கின்றன.
ஒரு சிறுநீரகம் செயலிழந்தால் அல்லது அகற்றப்பட வேண்டியிருந் தால், மற்ற சிறுநீரகம் அதை ஈடுசெய்து, கழிவுப் பொருள்களை அகற்றி, செயலிழந்த அல்லது அகற்றப்பட்ட சிறுநீரகத்தின் பணிச்சுமையைச் சிரமேற்கொள்கிறது. அதே வேளையில் சரியான உணவுமுறையைப் பின்பற்றுவது, புகைபிடிப்பதைத் தவிர்ப்பது, ரத்த அழுத்தம், ரத்தச் சர்க்கரை ஆகியவற்றைத் தொடர்ந்து நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது, இதயநோய்களைத் தவிர்ப்பது போன்றவற்றின் மூலம், செயல்படும் ஒரு சிறுநீரகத்தை ஆரோக்கியத்துடன் காத்துக்கொள்ள வேண்டியது மிக முக்கியம்.
அப்புறம் ஏன் நமக்கு இரண்டு சிறுநீரகங்கள்? பரிணாம வளர்ச்சிப்படி, சிறுநீரக நோய் அல்லது சிறுநீரகக் காயத்தின்போது உடல் அதிகக் கழிவை உற்பத்தி செய்யும் சூழ்நிலைகளில் இரண்டு சிறுநீரகங்கள் இருப்பது உதவியாக இருக்கும் என்று அவை அமையப்பெற்றுள்ளன.
எனக்குக் கடந்த இரண்டு வருடங்களாக வாசனை உணர்வு இல்லை. ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி போன்ற மருத்துவமுறைகளில் சிகிச்சை எடுத்துப் பார்த்தேன். ஆனால், இழந்த வாசனை உணர்வை மீட்டெடுக்க முடியவில்லை. அலோபதியில் இதற்கு மருத்துவம் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். எனக்கு 62 வயது. நீரிழிவு நோய் உண்டு. நான் வாசனை உணர்வை மீண்டும் பெற வழிகாட்டுங்கள். - இரவிச்சந்திரன், பாடியநல்லூர்.
‘வாசனை உணர்வின்மை’ (Anosmia) எனும் பிரச்சினை தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ நிகழலாம். இது பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். அவற்றுள் நாசி நிலைமைகள் முக்கியமானவை. உதாரணமாக, நாள்பட்ட சைனஸ் தொற்று, ஒவ்வாமை, நாசி பாலிப் (Polyp), நாசி நடுச்சுவர் வளைவு போன்றவற்றின் பாதிப்பால் இது ஏற்படலாம். அடுத்து, ஜலதோஷம், மூக்குச் சளி, காய்ச்சல் போன்ற காரணங்களால் தற்காலிகமாக வாசனை உணர்வு குறையலாம்.
தலை அல்லது முகத்தில் ஏற்படும் காயங்கள், குறிப்பாக வாசனை நரம்பு அல்லது மூளையின் வாசனை மையங்களைப் பாதிக்கும் காயங்கள், இந்த நிலைமையை ஏற்படுத்தக்கூடும். அல்சைமர் நோய், பார்கின்சன் நோய், மல்டிபிள் ஸ்கிளீரோசிஸ் (Multiple sclerosis) அல்லது மூளைக் கட்டிகள் போன்ற நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் கோளாறுகள் நிரந்தர வாசனை இழப்புக்கு வழிவகுக்கலாம்.
சில நேரம் வயதானதன் விளைவாகவும் இது ஏற்படலாம். ஏனெனில், வாசனை உணர்வு வயதுக்கு ஏற்ப குறைவது உண்டு. சிகரெட் புகை, சுற்றுச்சூழல் மாசு போன்றவற்றில் காணப்படும் சில வேதிப்பொருள்கள் அல்லது நச்சுகள் வாசனை நரம்புகளைச் சேதப்படுத்தும். அப்போதும் வாசனை இழப்பு ஏற்படுவது உண்டு.
வாசனை உணர்வு இழப்புக்கு இத்தனை காரணங்கள் இருக்கும்போது, உங்களுக்கான காரணத்தை அறிந்தால்தான் தீர்வு சொல்ல முடியும். நவீன மருத்துவத்தில் இதற்கு மருத்துவம் இல்லை என்பதில்லை. தகுந்த காது-மூக்கு-தொண்டை நிபுணரைச் சந்தித்து, தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு ஆலோசனை பெறுங்கள்; தீர்வு கிடைக்கலாம்.
- கட்டுரையாளர், பொது நல மருத்துவர்; gganesan95@gmail.com
| மருத்துவ சந்தேகங்களுக்கு ஆலோசனை: உங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு டாக்டர் கு.கணேசன் பதில் அளிக்கிறார். கேள்விகளைக் கீழ்க்கண்ட அஞ்சல் அல்லது மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பலாம். மின்னஞ்சல்: nalamvaazha@hindutamil.co.in முகவரி: டாக்டர் பதில்கள், நலம் வாழ, இந்து தமிழ், கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600 002 |