

உணவே மருந்து என்பதிலிருந்து நகர்ந்து மருந்தே உணவு என்பதை நோக்கி நமது வாழ்க்கை சென்றுகொண்டிருக்கிறது. மருந்து தயாரிக்கும் துறையில் இந்தியா உலக அளவில் முன்னணி வகிக்கிறது.
மருந்துப் பொருள்களான மாத்திரை, கேப்சூல், ஊசிமருந்து (tablet, capsule, injection) போன்றவற்றைத் தயாரிப்பதில் சிறந்து விளங்கினாலும் அந்த மருந்துப் பொருள்களில் உள்ள நோயைக் குணப்படுத்தும் மருந்து மூலக்கூறுகள் (API-active pharmaceutical ingredient) கண்டுபிடிப்பு மற்றும் பயன்பாட்டுத் துறையில் நாம் பின்தங்கி உள்ளோம்.
இந்த மருந்து மூலக்கூறுகள்தான் நோயைக் கட்டுப்படுத்தும் அல்லது குணப்படுத்தும் வேலையைச் செய்கின்றன. நாம் இந்த மருந்து மூலக்கூறுகளை ஆராய்ச்சியின் மூலம் கண்டு பிடித்து, பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது என்பது மிகவும் குறைவு.
மாறாக, மற்ற நாடுகளின் மருந்து மூலக்கூறு கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி அதன் மூலம் மருந்துப் பொருள்களைத் தயாரித்து மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருகிறோம். இந்த நிலையில் மருந்து மூலக்கூறு கண்டுபிடிப்புத் துறையில் இந்தியாவும் தற்போது இணைந்துள்ளது.
இந்திய அறிஞர்களால் 2008இல் கண்டுபிடிக்கப்பட்ட ஆன்டிபயாடிக் (antibiotic) மூலக்கூறான Enmetazo bactum கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்றுகட்டப் பரிசோதனைகள் மூலம் குணப்படுத்துவதற்குக் கடினமான சிறுநீரக நோய்த் தொற்றைக் குறைந்த எதிர்வினைகளுடன் குணப்படுத்த வல்லது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ஆன்டிபயாட்டிக் மூலக்கூறானது முதன்முறையாக உணவு - மருந்து தரக் கட்டுப்பாட்டு மையம் (FDA), ஐரோப்பிய மருந்துக் கழகத்தால் (EMA) அங்கீகரிக்கப்பட்டு மருத்துவப் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த மூலக்கூறை ஆர்க்கிட் பார்மா (Orchid Pharma) என்கிற நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
அல்லேக்ரா தெரபியூட்டிக்ஸ் (Allecra Therapeutics) என்கிற ஜெர்மனி நிறுவனம் மூன்று கட்டப் பரிசோதனைகள் மூலம் Enmetazo bactum+Cefepime கூட்டு மருந்தானது கிராம் நெகட்டிவ் பாக்டீரியாவால் (gram-negative bacteria) வரும் சிறுநீரக நோய்த்தொற்றைக் குறைக்க வல்லது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருந்து மூலக்கூறு முழுமையாக இந்தியாவில் நமது நாட்டு ஆராய்ச்சி யாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதே போன்று புதிய மருந்து மூலக்கூறு கண்டுபிடிப்பில் நமது பயணத்தைத் தொடர்ந்தால் உலக அளவில் மருத்துவத் துறையில் நமது பங்களிப்பும் அதிகரித்து இந்தியாவின் பொருளாதாரமும் உயரும். இந்த ஆராய்ச்சி வெற்றியால் நமது மருத்துவத் துறை புதிய உயரத்தில் பயணிக்கும்.
மேலும், மத்திய, மாநில அரசுகளும் மருந்து மூலக்கூறு தொடர்பான ஆராய்ச்சிகளை ஊக்குவித்து அதற்காக அதிக நிதி ஒதுக்கினால் வரும் காலத்தில் இன்னும் பல புதிய மருந்து மூலக்கூறுகள் கண்டுபிடிக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.
- gover.anto@gmail.com