

எனக்கு வயது 30. கடந்த ஒரு வாரமாக இடது கால் சூடாவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதாவது நெருப்பு எரியும்போது அதனுள் கால் வைத்தால் எப்படி இருக்கும். அதே உணர்வை என் காலில் நான் உணர்கிறேன். இது எதனால் ஏற்படுகிறது, டாக்டர்? சிகிச்சை என்ன? - பெயர் கூற விரும்பாத வாசகர்.
உங்கள் பிரச்சினைக்குப் பல காரணங் களைச் சொல்லலாம். இவற்றில், ரத்தசோகை, விட்டமின்-பி12 குறைபாடு, ஃபோலிக் அமிலம் குறைபாடு, சர்க்கரை நோய், தைராய்டு பிரச்சினை ஆகியன முக்கியமானவை.
முதலில் நீங்கள் ஒரு முழுமையான உடல் பரிசோதனையை மேற்கொள் ளுங்கள். கால்களுக்கு ரத்த ஓட்டம் எப்படி இருக்கிறது என்பதை அறிய ‘டாப்ளர்’ (Doppler) பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அப்போதுதான் உங்கள் பிரச்சினைக்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அதற்கேற்ப உங்களுக்கான சிகிச்சையைப் பரிந்துரைக்க முடியும்.
மூக்கு நுனியில் சிறிய கறுப்பு நிற மரு போன்று உள்ளது. இது எதனால் வருகிறது? வருவதைத் தடுக்கவும் வந்த பின் நீக்கவும் என்ன சிகிச்சை உள்ளது? - இ. ராஜன்.
சருமத்தில் ‘மனித பாப்பிலோமா’ வைரஸ் (HPV) கிருமியின் தாக்கம், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவது, வயது முதிர்வு, அன்றாடம் நாம் பயன்படுத்தும் தண்ணீரில் உப்புச் சத்து அதிகமாக இருப்பது, சருமத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ளாதது, வியர்வையோடு இருப்பது, முறையான சருமப் பராமரிப்பு இல்லாதது போன்ற பலதரப்பட்ட காரணங்களால் மரு (Wart) உருவாகலாம். மருக்களை லேசர் சிகிச்சை அல்லது கிரையோ சிகிச்சையில் (Cryotherapy) நீக்கிவிடலாம். மரு வருவதைத் தடுக்க முறையான சருமப் பாராமரிப்பு முக்கியம்.
நான் சர்க்கரை நோயாளி. நல்ல கட்டுப்பாட்டில் உள்ளேன். நான் ரொட்டி சாப்பிடலாமா? கோதுமை ரொட்டி நல்லதா? பால் ரொட்டி நல்லதா? - எல். கந்தவேல், காட்பாடி.
பொதுவாக, ரொட்டி மைதாவில் தயாரிக்கப்படுகிறது. மைதாவில் மாவுச்சத்து அதிகம். சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஆகாது. அடுத்து, கோதுமை ரொட்டி, பால் ரொட்டி இந்த இரண்டுக்கும் அதிக வித்தியாசமில்லை. இரண்டிலும் சர்க்கரையைக் கலந்திருப்பார்கள். ஆகவே, எந்த ரொட்டி யாக இருந்தாலும் அதை குறைவாகச் சாப்பிடுவது தான் நல்லது.
- கட்டுரையாளர், பொது நல மருத்துவர்; gganesan95@gmail.com