

கீரைகளின் தேசம் புதுமையான உணர்வுகளையும் பசுமை யான நினைவுகளையும் அளித்திருக்கும் என்கிற நம்பிக் கையில், கீரைகளுக்கான தேசத்தின் இறுதி முனையில் நின்றுகொண்டிருக்கிறோம். கீரைகளின் தேசத்திற்குள் பயணித்த வர்களுக்கு ‘பச்சை வைரம்’ என்கிற பெயர் கீரைகளுக்கு எவ்வளவு பொருத்தமானது என்பது புரிந்திருக்கும்.
வைரத்துக்கு நிகரான உறுதியை உடலுக்கு மிகக் குறைந்த விலையில் அளிக்கக்கூடியவை கீரைகள். அதுவும் வீட்டிலேயே கீரைகளை வளர்க்கும் எளிமை யான கலையைப் பழகிக்கொண்டால், கீரைகளின் பலன்களை இலவசமாகப் பெறலாம். மருத்துவக் குணம் நிறைந்த கீரை ரகங்களை அடிக்கடி உணவு முறைக்குள் சேர்த்துக்கொண்டு, நோயை எதிர்க்கும் வைர வலிமையோடு வாழ்ந்த சென்ற தலைமுறையினர் ஏராளம்.
கழிவுநீக்கி: பல்வேறு நோய்களுக்கு அடிப்படை மலச்சிக்கல். அப்படியான சிக்கலை எளிமையாக அவிழ்க்கும் திறன் படைத்தவை கீரைகள். கழிவுகளை முழுமையாக வெளியேற்று வதிலேயே கீரைகளின் நுணுக்கமான பணி தொடங்கிவிடுகிறது. செரிமான மண்டலத்தை உயிர்ப்பாக வைத்திருப்ப தோடு, நாம் எடுக்கும் உணவின் சாரங்கள் முழுமையாக உட்கிரகிக்கப்படுவதற்கும் கீரைகள் பேருதவி புரிகின்றன.
சமைக்கும் முறையைப் பொறுத்து, கீரைகளின் வெவ்வேறு பலன்களைச் சுவைபட அனுபவிக்க முடியும். கீரையோடு பருப்பு சேர்த்துக் கடைந்து, நெய் விட்டுப் பிசைந்த கடைசல் ரகம், வயிற்றுப் புண்களுக்கான சிறந்த தேர்வு. மற்ற இத்யாதிகளோடு சேர்த்து உருவாக்கப்படும் கீரைக் குழம்போ, அதன் சாரங்கள் முழுமை யாக உடலில் சேர உதவும்.
மருத்துவக் குணம் நிறைந்த கீரைகளைப் பூண்டு, சீரகம் சேர்த்துக் கொதிக்க வைத்துத் தயாரிக்கப்படும் சூப் ரகங்கள் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஊட்ட பானம். பொரியல்/ துவையல் சமைக்கப்படும் முறையில், கீரையின் பச்சையத்தை முழுமை யாக எடுத்துக்கொள்ள முடியும்.
இனி ஏதாவது சுப நிகழ்வுகளுக்குச் செல்வதாக இருப்பின் கீரைகளை ஆரோக்கியப் பரிசாக அளிக்கும் கலாச்சாரத்தை உருவாக்க முயற்சி செய்யலாம். புத்தகங்களைப் பரிசளிக்கும் நற்கலாச்சாரம் சமீப மாக அதிகரித்திருப் பதைப் போல, பசுமையான கீரைகள் அல்லது கீரைகளின் விதைகளைப் பரிசளித்து ஆரோக்கியத்தைப் பரவலாக்கலாம்.
தாய்மாமன் சீதனம்: பூப்பு நீராட்டுவிழாக்களில் பல்வேறு வகையான கீரைகளைத் தட்டில் நிரப்பிக் கீரை களின் அத்தியாவசியத்தைப் புரிய வைக்கலாம். உண்மையில் பருவமடைந்த இளம்பெண்களுக்காக இயற்கை அளித்த ‘தாய்மாமன் சீதனம்’ கீரைகள் தான்.
நெருங்கிய உறவுகள் கொடுக்கும் வலிமையையும் ஊட்டத்தையும் வளரிளம் பெண்களுக்குக் கீரைகள் தவறாமல் வழங் கும். இனி பூப்பெய்திய நிகழ்வுகளுக்குச் செல்லும்போது, நலம் பயக்கும் கீரைக் கொத்துகளை வாங்கிச் செல்லுங்கள். கீரை சீதனக் கலாச்சாரம் நம்மிடையே உருவாகட்டும்.
குளிர்ச்சி கொடுக்கும் கீரைகள்: வெப்ப மண்டலப் பகுதியில் வாழும் நமக்குக் கீரைகள் கொடுக்கும் குளிர்ச்சி பெரும் பரிசு. விட்டமின்கள், தாதுக்களின் தொழிற்சாலையாக விளங்கும் கீரை வகைகள், உடலுக்குள் குளிர்ச்சியை நிலைபெறச் செய்யக்கூடியவை.
அதிகமாக நாம் பயன்படுத்தத் தவறிய கொடிப்பசளைக் கீரை, வெயில் காலத்துக்கே உரிய ‘சிறப்பு மருத்துவர்’. Lutein, zea-xanthin போன்ற எதிர்-ஆக்ஸி கரணப் பொருள்களும் கொடிப்பசளையில் அதிகம். குளிர்ச்சியைக் கொடுப்பதோடு நலக்கூறுகளையும் கொண்டிருக்கும் திறனுக்குப் பசளைக் கீரை, பானைச் சோற்றுக்கு ஒரு பருக்கைப் பதம். இப்படி ஒவ்வொரு கீரை ரகத்திலும் நலம் கொடுக்கும் நுண் வேதிப்பொருள்கள் ஏராளமாக நிறைந்திருக்கின்றன.
பசளை, சிறுகீரை, பருப்புக்கீரை, பொன்னாங்கண்ணி, வெந்தயக்கீரை, தண்டுக்கீரை போன்றவற்றை வேனில் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தலாம். தூதுவளை, முடக்கறுத்தான், முசுமுசுக்கை போன்ற மிதவெப்பம் கொடுக்கும் ரகங் களைக் குளிர், மழைக்காலங்களில் உணவுகளில் சேர்க்கலாம். மேலும் நோயின் தன்மையைக் கருத்தில் கொண்டும் கீரைகளை மருத்துவ உணவாகப் பயன் படுத்தும் உத்தியைத் தெரிந்துகொள்வதும் அவசியம்.
கலவைக் கீரை சமையல்: தனிக் கீரையாக மட்டுமல்லாமல், உடலுக்குத் தேவையான சில கீரை ரகங்களை நுணுக்கமாகச் சேர்த்து உருவாக்கப்படும் கலவைக் கீரை சமையலும் கிராமங்களில் பிரசித்திபெற்றது. காலச்சூழல், நோய் நிலையை அனுமானித்துக் கலவைக் கீரை களைத் தேர்ந்தெடுத்துச் சமைக்கலாம். சேர்க்கப்படும் கீரைகளின் நுண்கூறுகள் நோயைப் போக்கும் ஆற்றலை வழங்கும். பித்த உடலினருக்குக் குளிர்ச்சி கொடுக்கும் கீரைகளைச் சேர்த்து, சுவையாகச் சமைத்து வெப்பம் போக்கலாம்.
கீரை விருந்து கலாச்சாரம்: சிறிய கிராமத்து வீடு; வீட்டைச் சுற்றி இயற்கையாக முளைத்துக் கிடக்கும் கீரைகள். அவற்றை அப்படியே பறித்து, ஓடும் நீரில் அலசி, மண்பானையில் சமைத்து ஆவி பறக்கப் பரிமாறப்பட்ட கீரை உணவின் ருசியைக் கிராமத்து வாழ்க்கையை ரசித்தவர்களால் மறக்கவே முடியாது.
வீட்டுக்கு வரும் உறவுகளுக்குக் கீரை உணவு வகைகளைச் சமைத்து ‘கீரை விருந்து’ அளிக்கும் கலாச்சாரம் மீண்டும் உயிர்பெற்றால் ஆரோக்கியத்துக்கான அஸ்திவாரம் பலமடையும். அதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது நலம் பரப்பும் கீரைகளின் தேசத்திற்குள் நுழைவதுதான்.
பசுமையான கீரைகளின் தேசத்துக்குள் நுழைந்து, அங்கே முளைத்திருக்கும் பச்சை வைரங்களான கீரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்; நோயில்லா வாழ்க்கை நூறு சதவீதம் சாத்தியம்!
(நிறைவடைந்தது)
- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com