டாக்டர் பதில்கள் 29: தசைநார் வலி ஏன் ஏற்படுகிறது?

டாக்டர் பதில்கள் 29: தசைநார் வலி ஏன் ஏற்படுகிறது?
Updated on
3 min read

எனக்கு 36 வயது. கடந்த சில மாதங்களாக மாலை முதல் அடுத்த நாள் காலை தூங்கி எழும் வரை கை, கால்கள், உடலில் உள்ள தசைகள் அனைத்தும் வலிக்கின்றன. சிறிது நேரம் கழித்து வலி மெதுவாகக் குறைந்துவிடுகிறது. இது எதனால் வருகிறது, டாக்டர்? இந்த நோயின் பெயர் என்ன? உடற்பயிற்சியின் மூலம் இதைச் சரிசெய்ய முடியுமா? ஏதேனும் மருந்துகள் உள்கொள்ள வேண்டுமா? - பெயர் வெளியிட விரும்பாத வாசகி.

உங்களுக்கு வந்துள்ள பிரச்சினைக்கு ‘தசைநார் வலி’ (Fibromyalgia) என்று பெயர். பரவலான உடல்வலியைக் குறிக்கும் மருத்துவ வார்த்தை இது. ஆண்களைவிடப் பெண்களை அதிகம் பாதிக்கிற நோய் இது. உடல்வலியோடு உடல் களைப்பு, உறக்கமின்மை, ஞாபக மறதி போன்றவையும் தொல்லை கொடுக்கும். ஒரே நேரத்தில் உடலின் இரண்டு பக்கமும் வலி ஏற்படுவது இதன் தன்மை.

ஹார்மோன்களின் சமச்சீர்த்தன்மை பாதிக்கப்படுவதுதான் இந்த நோய் வர முக்கியக் காரணம். நமக்கு உடலில் வலி ஏற்படும்போது ‘செரட்டோனின்’ ஹார்மோன் சுரக்கும். நாம் வலியால் பாதிக்கப்படாத அளவுக்கு அந்த வலியை இது கட்டுப்படுத்தும். சிலருக்கு இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்துவிடும். அல்லது முற்றிலும் சுரக்காமல் போய்விடும். இதனால், லேசான வலியைக்கூட இவர்களால் தாங்க முடியாது.

அடுத்து, சிலருக்கு நரம்பு மண்டலத்தில் வலியை உணரச் செய்கிற வேதிப்பொருள்களின் அளவு அதிகரித்து விடும். மன அழுத்தம், குடும்பத்தில் திடீரென ஏற்படும் அதிர்ச்சி நிகழ்வுகள், இழப்புகள், விபத்துகள், சோக நிகழ்வுகள் போன்றவை இந்த வலியைத் தூண்டும் காரணிகள். முதலில் நீங்கள் குடும்ப மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அதற்கு ஏற்ப சிகிச்சை பெறுங்கள். இந்தப் பிரச்சினை ஆரம்ப நிலையில் இருந்தால், மன அழுத்தம் குறைக்கும் வாழ்க்கை முறையும் உடற்பயிற்சி, யோகா, தியானம் போன்ற பயிற்சிகளும் உதவும். பிரச்சினையின் தீவிரத்தைப் பொறுத்து மனநல ஆலோசனையும் தேவைப்படும்.

என் வயது 70. எடை 49 கிலோ. 2022 இல் மருத்துவப் பரிசோதனையில் LDL கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்ததால் 10 மி.கி. மாத்திரை பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் அது சரியான அளவுக்கு வந்துவிட்டதால் 5 மி.கி. மாத்திரையைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளுமாறு மருத்துவர் அறிவுறுத்தினார். தற்போதைய மருத்துவர் உடல் எடையைக் கருத்தில் கொண்டு கொலஸ்ட்ரால் மாத்திரை தேவையில்லை எனக் கூறுகிறார். குழப்பமாக உள்ளது. எது சரி? - இரா. பூபதி, பள்ளத்தூர்.

கொலஸ்ட்ரால் மாத்திரையை நிறுத்தினால், மறுபடியும் கொலஸ்ட்ரால் அதிகரிக்கக்கூடும். தற்போது எடுத்துக் கொள்ளும் 5 மி.கி. மாத்திரையைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள். தவறில்லை. அதோடு, உணவு முறையிலும் உடற்பயிற்சி செய்வதிலும் கவனம் செலுத்துங்கள்.

என் மனைவிக்கு இடது கால் மூட்டில் வலி உள்ளது. அதிக நேரம் நின்றால் மூட்டில் வீக்கமும் வந்துவிடுகிறது. எலும்பு நல மருத்துவர் எடுத்துக்கொள்ளச் சொன்ன மாத்திரைகளால் வலி குறையவில்லை. இப்போது மூட்டில் ஊசி செலுத்த வேண்டும் என்கிறார் மருத்துவர். இதைச் செய்யலாமா, டாக்டர்? - ஆர். எம். விஜயக்குமார், கோயம்புத்தூர்.

மூட்டில் வலி வருவதற்குப் பல காரணங்கள் உள்ளன. முக்கியமானது, ‘மூட்டழற்சி’ (Osteoarthritis). மூட்டில் உள்ள குருத்தெலும்பு சிதைவதால் இது ஏற்படுகிறது. வலி நிவாரணிகள் பலன் தராதபோது அடுத்த கட்டமாக, மூட்டுக்குள் ஸ்டீராய்டு ஊசி செலுத்தப்படுவதை நவீன மருத்துவம் பரிந்துரைக்கிறது.

இதை உங்கள் மனைவிக்கு மேற்கொள்ளலாம். பலன் கிடைக்கும். அடுத்ததாக, வலி மறுபடியும் வராமலிருக்க மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உடல் எடையைப் பேணுவது, உடற்பயிற்சிகளைச் செய்வது, மூட்டுக்குப் பயிற்சி கொடுப்பது, அதிக எடையுள்ள பொருள்களைத் தூக்காமல் இருப்பது போன்ற தடுப்புமுறைகளைப் பின்பற்ற வேண்டியதும் முக்கியம்.

எனக்கு 65 வயது. ரத்தச் சர்க்கரை வெறும் வயிற்றில் 125 மி.கி.; சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 220 மி.கி. வரை இருக்கிறது. சர்க்கரை நோய்க்கு மாத்திரைகள் எடுத்துவருகிறேன். எனக்கு இடது பாதத்தில் வெளிப்பக்கமாக நடுப்பகுதியில் சில நேரம் வலி ஏற்படுகிறது. என்ன செய்யலாம், டாக்டர்? - ந. மனோகரன், சிங்கை, கோவை.

உங்களுக்கு ரத்தச் சர்க்கரை சரியான கட்டுப்பாட்டில் இருக் கிறதா என்பதை ‘ஹெச்பிஏ1சி’ (HbA1C) பரிசோதனை செய்து சரிபார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் வயதுக்கு அதன் அளவு 7 - 7-5%க்குள் இருக்க வேண்டும். அதன்படி சிகிச்சையைச் சரிசெய்துகொள்ளுங்கள்.

அதோடு, நரம்புகளுக்கு வலு சேர்க்கும் மாத்திரைகளையோ ஊசிகளையோ மருத்துவரின் நேரடி ஆலோசனையில் பெற்றுக்கொள்ளுங்கள். கால்சியம் மாத்திரைகளும் விட்டமின்-டி மாத்திரையும் தேவைப்படும். தினமும் நடைப்பயிற்சி செய்யுங்கள். குறைந்தது மூன்று மாதங்களுக்கு உங்கள் ரத்தச் சர்க்கரையைத் தொடர்ந்து சரியான அளவில் வைத்துக்கொண்டால், உங்கள் கால் வலி பிரச்சினை தீர்ந்துவிடும்.

- கட்டுரையாளர், பொது நல மருத்துவர்; gganesan95@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in