பச்சை வைரம் 29: கழிவை நீக்க பண்ணைக் கீரை; ஆஸ்துமாவுக்கு முள்ளுக் கீரை

பண்ணைக் கீரை
பண்ணைக் கீரை
Updated on
2 min read

மழை பெய்தால் போதும்; கூட்டமாக முளைத்து நிற்கும் பண்ணைக் கீரை. பஞ்சக் காலங்களில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும்போது உதவிக்கு வரும் கீரை ரகங்களில் பண்ணைக் கீரையும் முக்கியமானது. விலைக்கு வாங்க வேண்டிய அவசியமில்லை; ஆனால், கொடுக்கும் ஊட்டங்களுக்கோ விலைமதிப்பே இல்லை.

சுவையில் புதுமை: கொஞ்சம் துவர்ப்பையும் கூடுதல் இனிப்பையும் குழைத்து வழங்கும் சுவைமிக்க கீரை இது. உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுத்து, இனிப்பான பலன்கள் பலவற்றையும் நமக்காக வழங்கும் பண்ணைக் கீரை.

இக்கீரையில் சிறுபண்ணைக் கீரை, புற்பண்ணைக் கீரை, புனல்பண்ணைக் கீரை, நறும்பண்ணைக் கீரை போன்ற பல வகைகள் உண்டு. ஏறக்குறைய அனைத்து வகையான பண்ணைக் கீரைகளின் மருத்துவக் குணங்களும் ஒன்றே. பித்தத்தைக் குறைக்கும் குணமும் மலத்தை இளகலாக்கி வெளித்தள்ளும் பண்பும் பண்ணைக் கீரைக்கு உரித்தானவை.

சித்த மருத்துவம்: ‘பண்ணையிளங் கீரையது பற்று மலமிளக்கும்…’ எனத் தொடங்கும் அகத்தியர் குணவாகடப் பாடல், கீரையின் மருத்துவக் குணங் களைப் பட்டியலிடுகிறது. செரிமான உபாதைகள், வயிறு மந்தம், தோல் நோய் களுக்குப் பண்ணைக் கீரை முக்கிய உணவு என்கிறது சித்த மருத்துவம்.

கழிவுநீக்கி: அரிப்பு, தடிப்பு, எரிச்சல் போன்ற ஒவ்வாமை சார்ந்த பிரச்சினை இருப்பவர்கள் பயன்படுத்த வேண்டிய கீரை இது. கரப்பான், சிரங்கு நோய்களுக்கான மருந் தாகவும் அமையும். கழிவை உடலில் சேர்க்காமல், முழுமையாக வெளியேற்றும் பண்ணைக் கீரையை ‘கழிவு நீக்கி’ என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.

ஆய்வுக்களம்: ‘குடலுக்கு இதம் கொடுக்கும்…’ எனும் பண்ணைக் கீரை சார்ந்த சித்த மருத்துவக் குறிப்பின் மூலம் கீரையின் துவர்ப்புச் சுவை வயிறு, குடற்புண்களை விரைவாக ஆற்றும் தன்மை குறித்துத் தெரிந்துகொள்ளலாம். ‘குடலுக்கு வன்மையைக் கொடுக்கும்…’ எனும் பண்ணைக் கீரையின் பாடல் குறிப்பு, அறிவியல் குறிப்புகளைக் கண்முன் நிறுத்துகிறது.

குடற்பகுதியில் நலம் கொடுக்கும் நுண்கிருமிகளைப் பண்ணைக் கீரை அதிகரிக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறது ஆய்வு. குடல் பகுதியில் நற்கிருமிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் நமது ஆரோக்கிய மண்டலம் பாதுகாப்பாக இருக்கும் என்பது மருத்துவ விதி.

முள்ளுக் கீரை
முள்ளுக் கீரை

செரிமானப் பாதையில் ஏற்படும் புண்களால் உண் டாகும் வாய் நாற்றத்திற்குப் பண்ணைக் கீரையை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ளலாம். வாய்ப் புண் இருப்பவர்கள் பண்ணைக் கீரையின் ஆதரவை நாடினால் புண்ணாற்றும் தன்மை மூலம் புண்ணைக் குறைப்பதோடு, கீரையில் பொதிந்துள்ள ஊட்டங்கள் மீண்டும் வாய்ப்புண் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ளும். பெண்களுக்கு உண்டாகும் மாதவிடாய் சார்ந்த சிக்கல்களுக்குக் கீரையோடு சேர்த்து மலர்களையும் குடிநீரிட்டு வழங்கலாம்.

முற்றிய கீரையாக இல்லாமல் இளம் கீரையை உணவுக்குப் பயன்படுத்த, சுவையும் ஊட்டமும் முழுமையாகக் கிடைக்கும். முற்றிய கீரையில் மருத்துவக் குணமிக்க துவர்ப்புச் சுவையின் அளவு குறைய வாய்ப்பிருக்கிறது.

முள்ளுக் கீரை: கீரையின் பெயரை வைத்தே அதன் தோற்றத்தை அறிந்து கொள்ளலாம். Amaranthus spinosus எனும் தாவரவியல் பெயரும் இக்கீரையின் அமைப்பை வைத்தே உருவாகி இருக்கிறது.

இதை முள்ளிக் கீரை என்று அழைப்போரும் உண்டு. கார்ப்புச் சுவையைக் கொண்ட கீரை என்பதால் மழைக்கால மதிய வேளையில் இக்கீரை யைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். உடலுக்கு மிதமான வெப்பத்தை இக்கீரை அளிக்கும்.

கீரையில் இருக்கும் மெலிதான கார்ப்புச் சுவை, செரிமானச் சுரப்பிகளைத் தூண்டி, பசி உணர்வை அதிகரிக்க உதவியாக இருக்கும். உணவின் மூலம் கிடைக்கும் ஊட்டங்கள் முழுமையாக உள்கிரகிக்கப்படுவதற்கும் முள்ளுக் கீரை பயன்படும். இரும்புச் சத்து, மாங்கனீசு, துத்தநாகச் சத்து, நிறைய ஆல்கலாய்டுகள் முள்ளுக் கீரையில் உண்டு.

கஞ்சி வகைகளில் முள்ளுக் கீரை யைச் சேர்த்துச் சாப்பிடும் வழக்கம் பிரேசில் நாட்டில் இருக்கிறது. மாலத்தீவு, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ் போன்ற பல்வேறு நாட்டு உணவு முறைகளில் முள்ளுக் கீரை இடம் பிடித்திருக்கிறது.

சித்த மருத்துவம்: முள்ளுக் கீரையின் சிறுநீரை வெளியேற்றும் குணம் பற்றியும், வெப்ப வீரியம் குறித்தும் ‘நீரைப் பெருக்கிவிடு நீடனலைத் தானெழுப்பும்…’ எனும் முள்ளுக் கீரைக்குச் சொந்தமான சித்த மருத்துவப் பாடல் வெளிப்படுத்துகிறது. நுரையீரல் பாதையை விரிவாக்கும் தன்மை இருப்பதால், ஆஸ்துமா நோயாளர்களுக்கு உணவாக அமையும்.

மூட்டு வலியால் உண்டான வீக்கங்களுக்கும் கட்டிகளுக்கும் கீரையை அரைத்து வைத்துக் கட்ட நல்ல பலன் கிடைக்கும். விஷ முறிவு மருத்துவத்திலும் விலங்கின மருத்துவத்திலும் முள்ளுக் கீரையின் பங்கு முக்கியமானது. வாழைத் தண்டு சாறோடு, முள்ளுக் கீரையின் சாறைக் கலந்து விஷ முறிவு மருந்தாகக் கிராமங்களில் பயன்படுத்துகின்றனர்.

பண்ணைக் கீரையும் முள்ளுக் கீரையும் இலவசக் கீரை மருத்துவர்கள்.

- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in