

புற்றுநோய் இல்லாத புதிய உலகம்
மருத்துவர் கு.கணேசன்
தமிழ்நாடு
பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் வெளியீடு
தொடர்புக்கு: 9884156134
பெரும்பாலான புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்துவிட்டால் 100% குணமாக்கிவிடலாம் என நவீன மருத்துவம் கூறுகிறது. அந்த வகையில் புற்றுநோய் தொடர்பான அனைத்து விவரங்களும் ‘புற்றுநோய் இல்லாத புதிய உலகம்’ என்கிற நூலில் சாமானியர்களும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் கு.கணேசன் எழுதியுள்ள இந்நூலில் புற்றுநோய் வந்து குணமான பிரபலங்களின் சிறு பேட்டிகளும், பிரபல புற்றுநோய் மையங்களின் பட்டியலும் இடம்பெற்றுள்ளன. புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை வாசகர்களுக்கு அளித்து புற்றுநோயிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது எப்படி என்பதை இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.
சகல நலச் சமையலறை
மருத்துவர் வி..விக்ரம்குமார்
நம் பதிப்பகம்
தொடர்புக்கு: 9566110745
அன்றாடப் பயன்பாட்டிலிருந்து விலகிய அஞ்சறைப் பெட்டிப் பொருள்களின் மருத்துவக் குணங்களை ‘சகல நலச் சமையலறை’ நூல் விவரிக்கிறது. மிளகு, சீரகம், ஏலம், பெருங்காயம், கிராம்பு போன்ற நறுமணமூட்டிகள் நமது உடல் ஆரோக்கியத்தில் எத்தகைய பங்கை வகிக்கின்றன, அவற்றின் மருத்துவக் கூறுகள் என்னென்ன என்பதை மருத்துவர் வி. விக்ரம் குமார் விளக்கமாகத் தெரிவித்துள்ளார். ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரது இல்லங்களிலும் இருக்க வேண்டிய நூல் இது.
நலவாழ்வு நம் கையில்
மருத்துவர் சு. நரேந்திரன்
நியூ செஞ்சுரி புக்
ஹவுஸ் (பி) லிட்
தொடர்புக்கு: 9597683451
உடல் பருமனைக் குறைத்தல், இதய நோய்களைப் புரிந்து கொள்ளல், புற்றுநோயைத் தடுத்தல் போன்றவற்றுக்கான வழிகாட்டல்கள் இந்நூலில் உள்ளன. சூரியக் குளியல், கடலில் குளிப்பது நல்லதா என்பன போன்ற நம் மனதில் எழும் கேள்விகளுக்குரிய பதில்களையும் நூல் அளிக்கிறது. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் மருத்துவ ஆலோசனைகளை மருத்துவர் சு. நரேந்திரன் வழங்கி இருக்கிறார். மேலும், மருத்துவ உலகில் உலா வரும் மூட நம்பிக்கை குறித்தும் இந்நூல் பேசியிருப்பது கூடுதல் சிறப்பு.
முடக்கிப்போடும் மூட்டு வலி காரணங்களும் தீர்வுகளும்
மருத்துவர் துரை. நீலகண்டன்
செங்கனி பதிப்பகம்
தொடர்புக்கு: 9750856600
கழுத்து, இடுப்பு, முழங்கால், குதிகால், தோள்பட்டை, முழங்கை என அனைத்து மூட்டுப் பகுதிகளிலும் ஏற்படும் வலிக்கான காரணங்களை ‘முடக்கிப்போடும் மூட்டு வலி; காரணங்களும் தீர்வுகளும்’ நூல் அளிக்கிறது. நீண்ட காலமாக மூட்டு வலியினால் அவதிப்படுபவர்கள் எம்மாதிரியான சத்தான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும், எந்தெந்த உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
சரியான சிகிச்சை முறைகள், உரிய வழிகாட்டல்களுடன் மூட்டு வலியிலிருந்து விடுபடலாம்; மூட்டு சிகிச்சை மட்டுமன்றி எலும்பு ஆரோக்கியமாக, வலிமையாக இருக்கவும், முறிந்த எலும்பு விரைவில் ஒன்று சேரவும் தீர்வு உண்டு என்பதை மருத்துவர் துரை.நீலகண்டன் விளக்கி உள்ளார்.
புதுயுகக் குறள்மொழி
டாக்டர் பிரதீப் வி பிலிப்
விகடன் பிரசுரம்
தொடர்புக்கு: 9500068144
டாக்டர் பிரதீப் வி பிலிப் எழுதிய பிலிபிசம் (FILLIPISMS) என்கிற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாக ’புதுயுகக் குறள் மொழி’ வெளியாகியுள்ளது. மனதில் தோன்றும் எதிர்மறையான சிந்தனையைத் தவிர்த்து எப்போதும் நேர்மறையாகச் சிந்தித்தால் வாழ்வில் சிறு சறுக்கல் ஏற்பட்டாலும் அந்த நிலை மாறும்.
நேர்மறையாகச் சிந்தித்தல் ஒரு பயிற்சி முறை; அப்பயிற்சியை உளவியல் ரீதியாக எவ்வாறு உள்வாங்க வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகளை இந்நூல் வழங்குகிறது. வாழ்வின் எந்த ஒரு நெருக்கடியிலும் நல்ல சிந்தனையும், சொற்களும் பலனளிக்கும் என்பதே இந்நூலின் கருப்பொருள்.