

ஆயுர்வேத மருத்துவரான எல்.மகாதேவன் அதைப் பிறருக்குக் கற்றுக்கொடுப்பதைத் தம் வாழ்நாள் பணியாகவே கொண்டிருந்தார். கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனங்கோப்பில் உள்ள அவரது மருத்துவமனை தமிழகத்தில் பலருக்கு அறிமுகமான ஒன்று. அவருக்கும் எனக்கும் இடையே 20 ஆண்டுகளுக்கு மேலான நட்பு இருந்தது. அவரது இறப்பு சற்றும் எதிர்பாராதது.
“ஏறக்குறைய 45 ஆண்டு களுக்கு முன்பே எனக்கு தெரிசனங்கோப்பு அறிமுகம். என் அப்பாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, சிகிச்சைக்காக பாளையங்கோட்டையில் இருந்து அவ்வூருக்குச் சென்றோம். மகாதேவ ஐயர், என் அப்பாவுக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்தார்.
அவரது பேரன்தான், டாக்டர் எல். மகாதேவன். இவர் அக்குடும்பத்திலிருந்து வந்த மூன்றாம் தலைமுறை மருத்துவர். ஆயுர்வேதத்தில் இளங்கலைப் பட்டம், எம்எஸ், எம்டி, பிஎச்டி முடித்த மகாதேவனுக்கு ஆயுர்வேத நூல் களில் உள்ள நூற்றுக்கணக்கான செய்யுள்கள் மனப்பாடமாகத் தெரியும்.
சிறந்த சொற்பொழிவாளராக அவர் விளங்கினார். கடினமான ஆயுர்வேதத் தத்துவங்களை மிக எளிமையான முறையில் விளக்க அவரால் முடிந்தது. பாரம்பரிய மருத்துவமுறைகளில் பட்டம் பெற்ற மாணவர்கள், படிப்புக்குப் பின்னர் அத்துறை சார்ந்த மருத்துவர் களிடமும் கற்றுக்கொள்ள இந்திய அரசு வழிவகுத்துள்ளது.
அத்தகைய மாணவர்கள் பலரை மகாதேவன் வழிநடத்தினார். அவரது மருத்துவமனையில் எப்போதும் 20, 30 மாணவர்கள் தங்கியிருப்பார்கள். ஆந்திரம், கர்நாடகம் போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் அவரிடம் ஆயுர்வேதம் கற்க வருவார்கள். இதுவரை 2,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மகாதேவன் கற்பித் திருக்கிறார்.
அவருக்கு அறிமுகம் இல்லாத மாணவர்கள்கூட, நெருக்கடியான சூழல்களில் அவரைத் தொலைபேசி வழியே தொடர்புகொண்டு, தங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள முடிந்தது. ஆயுர்வேத மருத்துவ முறையை வருங்காலத் தலைமுறை யினருக்குக் கொண்டு செல்வதில் அவர் மிகுந்த விருப்பத்துடன் செயல்பட்டார்.
நோயைக் கண்டறிவதில் மகா தேவனுக்குத் தனித்திறன் இருந்தது. நவீன மருத்துவத்தில் தீர்வு கிடைக்கப் பெறாத பலர், அவரது சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனர். குறிப்பாக, நரம்பு தொடர்பான கோளாறுகளைக் குணப்படுத்துவதில் மகாதேவன் சிறந்து விளங்கினார். தங்கி சிகிச்சை பெறுபவர்களுக்கென 50 படுக்கைகள் அவரது மருத்துவமனையில் இருக்கும். 150க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கான செய்முறைகள் அவரிடம் இருந்தன.
பிற மருத்துவ முறைகள் மீது மகாதேவனுக்குக் காழ்ப்பு உணர்வு இருந்ததில்லை. ஆயுர்வேதத்தையும் அலோபதி மருத்துவத்தையும் ஒருங்கிணைத் துப் பயன்படுத்துவதில் அவருக்கு ஈடுபாடு இருந்தது. சித்த மருத்துவம் குறித்த சிறந்த புரிதலும் அவரிடம் வெளிப்பட்டது.
மகாதேவன் 100க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி யுள்ளார். ‘திரிதோடப் பார்வை யில் சித்த மருத்துவம்’ என்பது அவற்றில் முக்கியமான ஒன்று. சில சூழல்களில் சித்த மருத்துவத்தையும் இணைத்து அவர் சிகிச்சை அளித்துள்ளார். இசை, இலக்கியம் உள்ளிட்ட துறைகளிலும் அவருக்குத் தேர்ச்சி இருந்தது.
மகாதேவன் காலை நான்கு மணிக்கு எழுந்து எழுதுதல் போன்ற வேலைகளில் ஈடுபடுவார். பெரும்பாலும் இரவு 7.30 மணிக்குள் உறங்கச் சென்றுவிடுவார்.
மகாதேவனின் தாயும் தந்தையும் பிப்ரவரியில் அடுத்தடுத்து இறந்தனர். அதையொட்டி அவரை ஒரு மாதத்துக்கு முன்புதான் பார்த்து வந்தேன். பெற்றோர் இறந்த ஒரு மாத இடைவெளியில் அவரும் இறந்துள்ளார். மகாதேவனின் இறப்பு, ஆயுர்வேத மருத்துவத் துறைக்குப் பேரிழப்பு. நெருங்கிய நண்பராக மட்டுமல்லாமல், பாரம்பரிய மருத்துவ முறைகள் குறித்து ஆக்க பூர்வமாக உரையாடிவந்த ஒரு துணையையும் இதன் மூலம் நான் இழந்துவிட்டேன்.”
தொகுப்பு: ஆனந்தன் செல்லையா