

என் மகனுக்கு ஐந்து வயதாகிறது. சமீபத்தில் ‘பொன்னுக்கு வீங்கி’ வந்து அவதிப்பட்டான். அவனுக்கு ஏற்கெனவே இந்த நோய்க்குத் தடுப்பூசி எடுத்துக்கொண்டதாக நினைவு. அவனுக்கு ஏன் இந்த நோய் வந்தது? மீண்டும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டுமா? - மல்லிகா அர்ஜுனன், மதுரை.
நம் கன்னத்தில் உள்ள உமிழ்நீர்ச் சுரப்பி களை ‘பேராமிக்ஸோ வைரஸ்’ (Paramyxo virus) கிருமிகள் பாதிப்பதால் ‘பொன்னுக்கு வீங்கி’ (Mumps) எனும் நோய் வருகிறது. இதைப் பேச்சு வழக்கில் ‘அம்மைக்கட்டு’ என்று அழைக்கிறார்கள். பெரும்பாலும் இது ஐந்து வயதுக்கு உள்பட்ட சிறு குழந்தைகளுக்கே வரக்கூடும்.
காய்ச்சல், தலைவலி, உடல்வலி போன்றவற்றோடு, கன்னத்தில் இரண்டு பக்கங்களிலும் காதைச் சேர்த்து வீக்கம் உண்டாகும். வீக்கத்தில் வலி ஏற்படும். எச்சில் விழுங்கும்போதும், சாப்பிடும்போதும் வலி ஏற்படும். ஒரு வாரத்துக்கு இந்தத் தொல்லைகள் இருக்கும்; பிறகு தானாகவே குறைந்துவிடும்.
இது ஒரு தொற்றுநோய். வீட்டில் ஒரு குழந்தைக்கு வந்துவிட்டால் பலருக்கும் இது பரவிவிடும். இந்த நோய்க்குச் சிறப்பு சிகிச்சை எதுவும் இல்லை. பாதிக்கப்பட்ட குழந்தையைத் தனிமைப்படுத்துவதுதான் நோயைப் பரவவிடாமல் தடுக்கும் ஒரே வழி. வெயில் காலத்தில் இந்த வகை வைரஸ் கிருமிகள் அதிகம் பரவுவதால், தமிழ்நாட்டில் இப்போது அநேக குழந்தைகளுக்கு இந்த நோய் பரவியுள்ளது.
குழந்தைகளுக்குப் ‘பொன்னுக்கு வீங்கி’ நோய் வருவதைத் தடுப்பதற்காகக் குழந்தை பிறந்த ஒன்பதாம் மாதத்தில் ‘எம்.எம்.ஆர்.’ (MMR – Measles – Mumps - Rubella) எனும் முத்தடுப்பு ஊசி ‘தேசியத் தடுப்பூசித் திட்ட’த்தில் (National Immunization Schedule – NIS) 2016ஆம் ஆண்டுவரை செலுத்தப்பட்டது. 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு, அரசு மருத்துவமனைகளில் ‘எம்.எம்.ஆர்.’ தடுப்பூசி செலுத்தப்படுவது நிறுத்தப்பட்டது.
பதிலாக, ‘எம்.ஆர்.’ (MR – Measle - Rubella) எனும் தடுப்பூசி செலுத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது. ஆனாலும், தனியார் மருத்துவமனைகளில் ‘இந்தியக் குழந்தைகள்நலக் கழக’த்தின் (Indian Academy Of Paediatrics - IAP) வழிகாட்டுதலின்படி, இப்போதும் ‘எம்.எம்.ஆர்.’ தடுப்பூசியைத்தான் செலுத்து கிறார்கள். தற்போது பெரும்பாலான குழந்தைகள் அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்திக்கொள்வதால், அவர்களுக்கு ‘எம்.எம்.ஆர்.’ தடுப்பூசி செலுத்தப்படாமல் விடுபட்டிருக்கலாம்.
அதனால்தான் ‘பொன்னுக்கு வீங்கி’ தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் மறுபடியும் தலைதூக்கியுள்ளது. இதற்குத் தீர்வாக, மீண்டும் ‘எம்.எம்.ஆர்.’ தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
உங்கள் மகனுக்கு ‘எம்.எம்.ஆர்.’ தடுப்பூசி செலுத்தப்பட்டதா, ‘எம்.ஆர்.’ தடுப்பூசி செலுத்தப்பட்டதா எனத் தெரியவில்லை. குழந்தைகள்நல மருத்துவரைக் கலந்தா லோசித்து, இப்போதுகூட ‘எம்.எம்.ஆர்.’ தடுப்பூசி’யைச் செலுத்திக்கொள்ளலாம். இத்தடுப்பூசியை எந்த வயதிலும் போட்டுக் கொள்ளலாம்.
என் வயது 70. எனக்குச் சர்க்கரை நோய் உள்ளது. சமீபத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனைக்குச் சென்றேன். ஏற்கெனவே எனக்கு மாரடைப்பு லேசாக வந்துள்ளது என்றும் அதன் விளைவாகவே இப்போது மூச்சுத் திணறல் வந்துள்ளது என்றும் கூறி சிகிச்சை கொடுத்தார்கள். இது உண்மையாக இருக்குமா? நெஞ்சில் வலி இல்லாமல் மாரடைப்பு வருமா? - குமணன், வந்தவாசி.
ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோயாளிகளுக்கும் மூத்த வயதினருக்கும் நெஞ்சில் வலி இல்லாமல் மாரடைப்பு வருவதற்கு அதிகச் சாத்தியம் உண்டு. இவர்களுக்கு இதயத்தில் ஏற்படும் வலியைத் தெரிவிக்கும் நரம்பு பாதிக்கப்பட்டிருந்தால், வலி இல்லாத மாரடைப்பு வரக்கூடும். இதை ‘அமைதியான மாரடைப்பு’ (Silent Attack) என்கிறோம். சிலருக்கு லேசாக உடல் வியர்த்திருக்கும்.
அது மாரடைப்பின் அறிகுறி எனத் தெரியாமல் மருத்துவரிடம் செல்லாமல் இருந்திருப்பார்கள். அதுபோல், லேசாகக் கிறுகிறுப்பு வந்திருக்கும்; சரியாக மூச்சுவிட முடியாமல் இருந்திருக்கும். இவற்றையும் அலட்சியப்படுத்தியிருப்பார்கள். இந்த மாதிரியான பிரச்சினைகள் பெரிதான பிறகு மருத்துவரிடம் சென்று, இசிஜி பரிசோதனை செய்தால், சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டிருந்த விஷயம் தெரிய வரும்.
அப்போது உங்களைப்போலப் பலருக்கும் இதை ஏற்றுக்கொள்ள மனம் வராது. மருத்துவரின்மேல் சந்தேகம்தான் வரும். இசிஜி பரிசோதனையில் மாரடைப்பு உள்ளதாகத் தெரியவந்தால், அதை ஏற்றுக்கொண்டு, அடுத்தகட்ட சிகிச்சைகளைச் சந்தேகமில்லாமல் மேற்கொள்ள முன்வந்தால்தான், இரவு உறக்கத்தில் இருமல் ஏற்படுவது, நடந்தால் அல்லது படுத்தால் மூச்சுத் திணறல் உண்டாவது போன்ற மாரடைப்பின் சிக்கல்களைத் தவிர்க்க முடியும்.
கடந்த ஆறு மாதங்களாக எனது இடது கையை மேலே தூக்கிப் பக்கவாட்டில் நகர்த்தும்போது வலி ஏற்படுகிறது. கையை முன்பக்கமாக மட்டுமே தூக்க முடிகிறது. மருத்துவரிடம் சென்றபோது சதை இறுக்கியுள்ளது; 15 சிட்டிங் பிசியொதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்ளக் கூறினார். இந்த வலி ஏன் ஏற்படுகிறது? இதற்கு வேறு ஏதாவது சிகிச்சை உள்ளதா? - வளர்மதி, சென்னை.
உங்களுக்கு வந்துள்ள வலிக்குத் ‘தோள்பட்டை இறுக்கம்‘ (Frozen shoulder) ஒரு காரணமாக இருக்கலாம். சி.டி. ஸ்கேன் பரிசோதனையில் இது உறுதிப்படுத்தப்படும். கழுத்து வலி, உடல் பருமன் இவற்றோடு, அதிகச் சுமை தூக்குவதும், தசைகளில் ஏற்படும் காயங்களும் தசை இறுக்கத்தை ஏற்படுத்துகின்றன. அப்போது இந்த வகை வலி வருகிறது.
பெரும்பாலும், சர்க்கரை நோய் இருப்பவர்களை இது பெரிதும் பாதிக்கும். உங்களுக்குச் சர்க்கரை நோய் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். இருந்தால், அதை முதலில் கட்டுப்படுத்துங்கள். வலி உள்ள கைக்குத் தேவையான ஓய்வு கொடுங்கள். இயன்முறைப் பயிற்சிகளைத் தொடருங்கள்.
அதிகப் பளு தூக்காதீர்கள். தரையில் கை ஊன்றி எழுவதைத் தவிருங்கள். வலியுள்ள கையைத் தலைக்கு அடியில் வைத்து இரவில் படுக்காதீர்கள். அநேகமாக, இந்தத் தொடர் சிகிச்சையில் உங்கள் பிரச்சினை சரியாகிவிடும். இல்லையென்றால், எலும்புநல மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ‘ஆர்த்ரோஸ்கோப்பி’ (Arthroscopy) முறையில் நுண்துளை சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பிரச்சினை தீர்ந்துவிடும்.
- கட்டுரையாளர், பொது நல மருத்துவர்; gganesan95@gmail.com