பச்சை வைரம் 28: சர்க்கரை நோய்க்கு ஆரைகண் நோய்க்குப் புளியாரை

பச்சை வைரம் 28: சர்க்கரை நோய்க்கு ஆரைகண் நோய்க்குப் புளியாரை
Updated on
2 min read

அரைக் கீரை தெரியும்; அதென்ன ஆரைக் கீரை என்கிறீர்களா? குறில் - நெடில் சார்ந்த எழுத்துப் பிழையாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா? இல்லை. மருத்துவக் குணம் நிறைந்த ஆரைக் கீரை என்றொரு ரகம் உண்டு.

அரைக் கீரையின் பயன்பாட்டுடன் ஒப்பிட்டால் சிறு சதவீதம்கூடப் பயன்படுத்தப்படாத கீரை இது. ஆனால், மலைக் கிராமங்களில் வசிப்பவர்கள், ஆரைக் கீரை கிடைக்கும் நாள்களில் உணவாகவும், மருந்தாகவும் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். இனிப்புச் சுவையோடு உடலுக்குத் தேவைப்படும் குளிர்ச்சியை இக்கீரை வழங்கும்.

நான்கு திசைகளிலும் விரிந்த நான்கு அழகான மிகச் சிறிய இலைகள் ஆரைக் கீரைக்கான அடையாளம். ‘Marselia quadrifolia’ என்பது இதன் தாவரவியல் பெயர். நீர்சூழ் பகுதிகளில் வாழும் தன்மையுடையதால் நீர் ஆவாரை, சதுப்பன்னி, நீர் ஆரை போன்ற பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம்.

சித்த மருத்துவம்: அதிக வெப்பம் சார்ந்த நோய்கள், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகளுக்கு உணவாக ஆரைக் கீரை யைப் பயன்படுத்தலாம் என்கிறது சித்த மருத்துவம். கீரையின் குணத்தைத் ‘தின்றா லுரிசைதரும் தீராப் பயித்தியத்தை…’ என்கிற பாடல் தெளிவாக எடுத்துரைக் கிறது.

ஆய்வு நோக்கில்: நீரிழிவு நோயால் உண்டாகும் அதிகமாகச் சிறுநீர் கழிதல் பிரச்சினைக்கும், முதிர் வயதில் உண்டாகும் புரஸ்தகோள வீக்கம் காரணமாகச் சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் இறங்கும் தேக்க நிலைக்கும் ஆரைக் கீரை மருந்தாக அமையும் என்கிறது சித்த மருத்துவம்.

மொத்தத்தில் நீரிழிவு நோயாளர்களும் முதியவர்களும் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டிய கீரை ரகம் இது. சிறுநீரைப் பெருக்க, சுரத்தைத் தணிக்க, உடலில் உண்டாகும் வீக்கங்களைக் குறைக்க ஆரைக் கீரை உதவியாக இருக்கும் என்கின்றன ஆய்வுகள். பல நூற்றாண்டுகளாக ஆரைக் கீரையின் பயன்பாடு பல நாடுகளில் தொடர்ந்து வருகிறது.

ஆரைக் கீரைப் பானம்: சுரம் காரணமாகவோ அல்லது பசியில்லாமல் நாவின் சுவை குறைந்தவர்கள் ஆரைக் கீரையைச் சமைத்து உண்ண படிப்படியாகச் சுவையை உணரத் தொடங்குவார்கள். உடலின் பித்தத்தைக் குறைத்துக் குளிர்ச்சியை உண்டாக்கும் குடிநீர் வகைகளில் ஆரைக் கீரையின் பங்கும் இருக்கிறது. ஆரைக் கீரையைத் தனியாகக் குடிநீர் தயாரித்து, பாலும் நாட்டுச் சர்க்கரையும் சேர்த்துக் கோடைக் காலத்திற்கான கீரைப் பானமாகப் பருகலாம்.

புளியாரைக் கீரை: சுவையின் தன்மையைப் பொறுத்து ‘புளி’யாரை என்று பெயர் பெற்றிருக்கிறது இக்கீரை. புளிப்புச் சுவையை வழங்கும் கீரையாக இருப்பினும், உடலுக்குக் குளிர்ச்சியை வழங்கும் சிறப்பு கீரை இது!

செரிமானத்தின் முடிவில் இனிப்புச் சுவையின் பலன்களைக் கொடுக்கும். பசியின்றி அவதிப்படுபவர்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய கீரை ரகங்களில் புளியாரைக் கீரையும் முக்கியமானது. நாம் மறந்த துவர்ப்புச் சுவையையும் லேசாகக் கொடுக்கும் புளியாரைக் கீரை.

‘Oxalis Corniculata’ எனும் தாவரவியல் பெயர் இந்தக் கீரைக்கு. புளிக்கீரை, புளியாக் கீரை போன்ற வேறு பெயர்களும் இதற்கு உண்டு. பிளவுபட்ட மூன்று சிறிய இலைகள்; மனித இதயம் சிறிதாக உருமாறியது போன்றதொரு வடிவம் அவ்விலைகளுக்கு உண்டு.

சித்த மருத்துவம்: ‘பித்த மயக்கமறும் பேருலகின் மானிடர்க்கு…’ எனத் தொடங்கும் அகத்தியர் குணவாகடப் பாடல், புளியாரைக் கீரையை உணவு முறைக்குள் சேர்த்துவர, ஆசன வாய் எரிச்சலுடன் கூடிய பேதி, ஆசனவாய் எரிச்சல் சட்டென நிற்கும் என்கிறது. சுரம் இருக்கும்போது, புளியாரைக் கீரையோடு மிளகு சேர்த்துக் குடிநீரிட்டு வழங்க, சுரத்தின் தீவிரம் குறையும்.

நஞ்சு முறிவு மருத்துவத்தில்: சில நச்சுத் தாவரங்களின் விஷத்தை முறிக்க, புளியாரைக் கீரையைச் சமைத்துக் கொடுக்கும் வழக்கம் கிராமங்களில் இப்போதும் உண்டு. சித்த மருத்துவ நஞ்சு முறிவு மருத்துவத்தில் புளியாரைக் கீரையின் பங்கு முக்கியமானது. கழிவை முழுமையாக வெளியேற்ற புளியாரைக் கீரையின் சாரங் கள் உதவும் என்கிறது ஆய்வு.

புளியாரைக் கீரை நெய்: புளியாரைக் கீரை, பொன்னாங் கண்ணிக் கீரை, சீரகம், மாசிக்காய், அதிமதுரம், செவ்விளநீர், பால், நெய் போன்றவற்றின் உதவியோடு சித்த மருத்துவ முறைப்படி காய்ச்சித் தயாரிக்கப்படும் நெய் வடிவிலான ‘புளியாரை நெய்’ எனும் மருந்து சிறுநீர் அடைப்பு, சிறுநீர் எரிச்சல், மயக்கம், சில பித்த நோய் அறிகுறிகள் போன்றவற்றில் பலன்தரக்கூடியது.

வெளிப்பிரயோகமாக: வேனில் காலங்களில் உண்டாகும் கட்டிகளுக்குப் புளியாரைக் கீரையை அரைத்துக் கட்ட, உடனடியாக அப்பகுதிகளில் குளிர்ச்சியை உணரலாம். வீக்கமும் விரைவில் வடியும். பித்தம் சார்ந்து ஏற்படும் கொப்புளங்களுக்கும் வெளிப்பிரயோக மருந்தாகப் புளியாரைக் கீரையைப் பயன்படுத்தலாம். கண் நோய் மருத்துவத்திலும் புளியாரைக் கீரைக்கு முக்கிய இடமுண்டு.

ஆரையும் புளியாரையும் நாம் மறந்த இரட்டைக் கீரைகள். ஆனால் மறதியைப் போக்கி மீண்டும் பயன்படுத்தப்பட வேண்டிய பொக்கிஷக் கீரைகள்.

- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in