

என் மகனுக்கு 49 வயதாகிறது. அவருக்கு ஏறத்தாழ 25 ஆண்டுகளாக சோரியாசிஸ் நோய் இருக்கிறது. ஆங்கில மருத்துவம், சித்த மருத்துவம் என இரண்டு வகைகளிலும் மருந்துகளை உள்கொள்கிறார். கால்கள், கைகள், உடலின் பிற இடங்களிலும் தோலின் இயல்பான நிறம் மாறி, கறுப்பாகி, சிறு சிறு செதில்கள் உதிர்கின்றன. அவருடைய உடல் நோவும், மன வருத்தமும் எனக்குத் துக்கத்தைத் தருகின்றன. இந்த நோய்க்கு நிரந்தரத் தீர்வு இல்லை என்கின்றனர்; தற்காலிகத் தீர்வாவது உண்டா, டாக்டர்? உங்கள் ஆலோசனையை வேண்டுகிறேன்.. - தா. சந்திரன், திருச்சி.
சோரியாசிஸ் (Psoriasis) நோய் என்பது ஒரு தோல் நோய்; ‘தன்னுடல் தாக்கும் நோய்’ (Auto immune diseases) வகையைச் சேர்ந்தது. அதாவது, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே தோல் செல்களை எதிரிகளாக நினைத்துத் தவறுதலாகத் தாக்குதல் நடத்துவதால் ஏற்படுகிறது.
பலருக்கும் இது வம்சாவளியாக வருகிறது. மற்றவர்களுக்கும் இது வருவது உண்டு. பொதுவாக, ஏதாவது ஓர் ஆபத்துக் காரணியின் தூண்டுதலால் ஏற்படுகிறது.
மன அழுத்தம், தொற்றுக் கிருமி, காலநிலை மாற்றம், ஒவ்வாத உணவு, கடுமையான வெப்பம், புகைபழக்கம், மதுப்பழக்கம், மாசடைந்த சுற்றுச்சூழல் எனப் பலதரப்பட்ட காரணிகள் இந்த நோயைத் தூண்டக்கூடியவை.
இந்தக் காரணி ஆளுக்கு ஆள் மாறும். நம் தற்காப்பு மண்டலம் ஒரு முறை நம் செல்களையே எதிரி என்று நினைத்துவிட்டால், அது வாழ்நாள் முழுவதும் மாறுவதில்லை. அதனால்தான் சோரியாசிஸ் போன்ற தன்னுடல் தாக்கும் நோய்களுக்கு என்ன சிகிச்சை கொடுத்தாலும், முழுவதுமாகக் குணப்படுத்த முடிவதில்லை.
என்றாலும், சோரியாசிஸ் நோயைக் கட்டுப்படுத்தலாம். நவீன மருத்துவத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. இதனால், தற்காலிகமாக அறிகுறிகள் மறைகின்றன. மருந்துகளை நிறுத்திய பின்னர் மீண்டும் அதே அறிகுறிகள் தோன்றுகின்றன. பலருக்குப் பருவகால மாறுதலுக்கு ஏற்ப நோய் கூடுவதும் குறைவதுமாக இருக்கும்.
இந்த நோய்க்கு மாற்று மருத்துவத்திலும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. மருத்துவரின் பரிந்துரைப்படி, உங்கள் மகனின் உணவு முறையை மாற்றிப் பாருங்கள். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் எந்த மருத்துவத்தை மேற்கொண்டாலும், மனம் தளராமல் தொடர்ந்து அதை மேற்கொள்ளுங்கள். பலன் கிடைக்கும்.
கொலஸ்டிரால் பரிசோதனையை உணவு உள்கொள்ளாமல் வெறும் வயிற்றில்தான் மேற்கொள்ள வேண்டுமா, டாக்டர்? - சோ. அய்யலுசாமி, மதுரை.
கொலஸ்டிராலுக்கான ரத்தப் பரிசோதனையை வெறும் வயிற்றில்தான் மேற்கொள்ள வேண்டும் என்று சொன்னது பழைய முறை. இப்போது இதை அவ்வள வாக வலியுறுத்துவதில்லை. மற்ற நேரத்திலும் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளலாம். சமீபத்திய ஆய்வுகளின்படி, வெறும் வயிற்றில் பரிசோதிப்பதற்கும் மற்ற நேரத்தில் பரிசோதிப்பதற்கும் அதிக வித்தியாச மில்லை என்று தெரியவந்திருக்கிறது.
அதாவது, பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சம் 2% தான் வித்தியாசம் இருக்கிறது. ஆகவே, கொலஸ்டிரால் பரிசோதனையை வெறும் வயிற்றில்தான் மேற்கொள்ள வேண்டும் என்பது இப்போது கட்டாயம் இல்லை. கொலஸ்டிரால் வகையில் ‘டிரைகிளிசரைட்ஸ்’ அளவு 400/டெ.லி.க்கும் அதிகமாக இருப்பவர்கள் வேண்டுமானால், வெறும் வயிற்றில் ஒருமுறை பரிசோதித்துக்கொள்ளலாம்.
எனக்கு வயது 26. எடை 70 கிலோ. தொடைகளில் அதிகச் சதை இருப்பதால் உராய்ந்து புண்ணாகிறது. அந்த இடம் கறுத்து அசிங்கமாக இருக்கிறது. அரிப்பு ஏற்படுகிறது. இதற்கு என்ன செய்ய வேண்டும், டாக்டர்? - மோனிகாலட்சுமி, கடலூர்.
உங்கள் வயதுக்கு உங்கள் உடல் எடை மிக அதிகம். இதுதான் உங்களுக்கு முதல் எதிரி. தினமும் இரவில் உறங்கச்செல்லும் முன்னர் மருத்துவரின் பரிந்துரைப்படி இடை உராய்வுப் புண் உள்ள இடத்தில் களிம்பு போடுங்கள். அங்கே ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இறுக்கமான உள்ளாடைகளை அணியாதீர்கள். இது தற்காலிகத் தீர்வுதான். நிரந்தரத் தீர்வுக்கு உங்கள் எடையைக் குறைப்பதுதான் சிறந்த வழி.
என் அம்மாவுக்கு வயது 50. சில வாரங்களாக வலது கை ஆள்காட்டி விரலை அசைத்தாலே வலிக்கிறது என்கிறார். அதை மடக்கவும் முடியவில்லை. எலும்பு மூட்டு மருத்துவரைப் பார்த்தோம். ‘Trigger finger’ என்கிறார். உடனே ஆபரேஷன் செய்ய வேண்டும் என்கிறார். ஆபரேஷனுக்கு அம்மா பயப்படுகிறார். இதற்கு ஆபரேஷன்தான் தீர்வா? வேறு வழி இல்லையா? - கே. சூரியகலா, தேனி
விரல்களை அசைக்க உதவுகிற திசுக்கள் அழற்சியுற்று வீங்கி இறுக்கமாகிவிடுவதால் ‘மடங்கா விரல்’ பிரச்சினை ஏற்படுகிறது. பொதுவாக, சர்க்கரை நோய், தைராய்டு பிரச்சினை உள்ளவர்களுக்கு இது ஏற்படுகிறது. சிலருக்கு விட்டமின்-டி குறைவதாலும், ஹார்மோன் பிரச்சினையாலும் இது வரலாம். வயதானால், எந்தக் காரணம் எனத் தெரியாமலேயும் இது வரலாம்.
பிரச்சினையின் ஆரம்பத்தில் அழற்சி மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக்கொள்வதோடு, விரலுக்கு அதிக வேலை கொடுப்பதைத் தவிர்ப்பதும், தேவையான ஓய்வு கொடுப்பதும், சில பயிற்சிகளை மேற்கொள்வதும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு தரும். இவற்றில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் விரலின் மூட்டில் ஸ்டீராய்டு ஊசி செலுத்திக்கொள்ளலாம். இதில் நிச்சயம் தீர்வு கிடைக்கும். அறுவைசிகிச்சையைக் கடைசி வாய்ப்பாக வைத்துக்கொள்ளலாம். அவசரப்பட வேண்டாம்.
- கட்டுரையாளர், பொது நல மருத்துவர்; gganesan95@gmail.co