

ஒரு நோய்க்கு நேர் மருந் தாகப் பயன்படும் கீரை வகைகளில் துத்திக் கீரை முக்கியமானது. அதாவது மூல நோயின் அறிகுறிகளுக்கு உணவாகவும், வெளிப்பிரயோகமருந்தாகவும் பயன்படும் மருத்துவக் கீரை துத்தி. நோய் களைப் போக்கும் தன்மை கொண்டதால், பெரும்பாலான கிராமங்களில் உணவாகும் மருந்தாகத் துத்திக் கீரையைப் பயன்படுத்துகிறார்கள்.
சித்த மருத்துவம்: ‘மூலநோய் கட்டி முளைபுழுப்புண்ணும்போகும்…’ என்கிற துத்திக் கீரை குறித்த அகத்தியர் குணவாகடப் பாடல், மூல நோய் சார்ந்த அறிகுறிகளுக்குத் துத்திக் கீரை மிக முக்கியமான மருந்து என்பதைச் சுட்டிக் காட்டுகிறது.
ஆசனவாய்ப் பகுதியில் ஏற்படும் கட்டி, புண், ரத்தம் வடிதல் போன்ற பிரச்சினைகளுக்குத் துத்திக் கீரை சிறப்பான பலன்களை அளிக்கும். ‘துத்திக் கீரையை ஏதாவதொரு வகையில் உணவில் சேர்த்துவர எவ் வகையான பிணியும் நீங்கும்’ என்று பெருமைப்படுத்திக் கூறுகிறது சித்த மருத்துவம்.
மலத்தைச் சிரமமின்றி வெளி யேற்றுவது, சிறுநீரைத் தடையின்றி வெளித்தள்ளுவது, உள் உறுப்புகளின் வெப்பத்தைக் குறைப்பது, உடலுக்கு ஊட்டத்தை வழங்குவது எனப் பல்வேறு மருத்துவப் பரிமாணங்களைக் கொண்டது துத்திக் கீரை.
இனிப்புச் சுவையைக் கொண்டு, குளிர்ச்சி யைப் பரிசளிக்கும் துத்திக் கீரை ோடைக்காலத்தில் செழிப்பாக முளைத்து, காணும் இடமெங்கும் பரவி நிற்கும். கோடைக்கால மதிய உணவில் அவ்வப்போது துத்திக் கீரையைச் சேர்த்துக்கொள்ள, வெப்ப நோய்களின் பிடியில் இருந்தும் தப்பிக்கலாம்.
உணவில் துத்தி: துத்திக் கீரையோடு குளிர்ச்சித்தன்மை கொண்ட பசளைக் கீரை, பாசிப் பருப்பு, சின்ன வெங்காயம் சேர்த்துக் கடைந்து, சாதத்தோடு பிசைந்து சாப்பிட, உடலின் வெப்பம் பல மடங்கு குறைந்து, மூல நோய்க்கான உணவாகவும் அமையும்.
வீக்கமுறுக்கி செய்கையைக் கொண்டிருக்கும் கீரை வகை என்பதால், வயதானவர்களுக்கு உண்டாகும் கை, கால் மூட்டு வலிக்கு நிவாரணியாகவும் அமையும். வாத நோய்களுக்கு மருந்தாகும் கீரை வகைகளில் துத்திக் கீரைக்கு முக்கிய இடம் இருக்கிறது.
முதியவர்களுக்கு வரப் பிரசாதம்: மூல நோயுடையவர்களுக்கு மட்டுமன்றி, மலச்சிக்கலால் அவதிப் படும் முதியவர்களுக்கும் துத்திக் கீரை ஒரு வரப்பிரசாதம்தான். மலச்சிக்கல் பிரச்சினையைத் தீர்க்கத் துத்திக் கீரையை உணவு முறைக்குள் சேர்த்துவர, கடினப்பட்ட மலத்தின் தன்மை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும்.
முதியவர்களுக்கு ஆசன வாய்ப்பகுதியில் உண்டாகும் எரிச்சல் மற்றும் வலியின் தீவிரமும் குறை வதை உணரலாம். தோல் நோய் இருப்பவர்களும் அவ்வப்போது துத்திக் கீரையை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
ஆய்வுக்களம்: நுரையீரல் சார்ந்த சிக்கலுக்குத் துத்திக் கீரையின் நுண் பொருள்கள் தீர்வளிக்கும் என்கின்றன ஆராய்ச்சிக் கட்டுரைகள். ஒவ்வாமை சார்ந்த அறிகுறிகளைக் குறைக்கவும் துத்திக் கீரையின் சாரங்கள் உதவுவதாக ஆய்வு பதிவுசெய்கிறது.
நீரிழிவு நோயாளர்களின் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கவும் துத்திக் கீரை உதவும். மன நோய்களுக்கான மருந்தாகவும் துத்திக் கீரை பயன்படும் என்கிறது ஓர் ஆய்வு. புற்று செல்களுக்கு எதிராகச் செயல்படும் ஆற்றல் துத்திக் கீரைக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.
வெளிப்பிரயோகமாக: உலர்ந்த துத்திக் கீரையைக் கோதுமை மாவோடுகலந்து கருப்பை அடித்தள்ளல் பிரச்சினைக்குப் புற மருந்தாகப் பயன் படுத்தும் வழக்கம் ஒடிசா மலைவாழ் மக்களிடம் இருக்கிறது. துத்திக் கீரையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி, ஆசன வாய்ப் பகுதியில் வைத்துக் கட்ட, அப்பகுதியில் ஏற்படும் எரிச்சல், வலி குறையும். ஒற்றடம் இடவும் துத்திக் கீரை பயன்படுகிறது. நீரில் துத்திக் கீரையைப் போட்டு லேசாகக் கொதிக்கவைத்துக் குளிக்க, உடல் வலி மறையும்.
துத்திக் கீரையில் பெருந்துத்தி, சிறுதுத்தி, வாசனைத்துத்தி, மலைத் துத்தி, அரசிலைத்துத்தி, கருந்துத்தி, பணியாரத்துத்தி, பொட்டகத் துத்தி போன்ற பல்வேறு வகைகள் உள்ளன. மஞ்சள் நிறப் பூக்களைச் சூடிக்கொண்டு, இதய வடிவிலான இலைகளின் ஓரத்தில் ரம்பங்கள் போன்ற வெட்டுப் பற்களைத் துத்திக் கீரை கொண்டுள்ளது.
மஞ்சள் நிறப் பூவின் நடுவில் செம்மை நிறம் படர்ந்து காணப்படுவது பொட்டகத் துத்திக் கீரை. Abutilon indicum எனும் தாவரவியல் பெயர் கொண்ட துத்திக் கீரை Malvaceae குடும்பத்தைச் சார்ந்தது. கக்கடி, கிக்கசி, அதிபலா போன்ற வேறு பெயர்களும் துத்திக் கீரைக்கு உண்டு.
இது துத்திக் காலம். அனைத்து இடங்களிலும் மலர்ந்த முகத்துடன் முளைத்துக் கிடப்பதால், துத்திக் கீரையைத் தேடி எங்கெங்கோ அலைய வேண்டியதில்லை. வெட்டவெளியில் பார்வையைச் செலுத்தினால் போதும்; துத்தியும் ஆரோக்கியமும் கைக்கு எட்டும். அதே வேளையில் இந்தக் கீரை குறித்த அறிமுகம் இல்லாதவர்கள், துத்திக் கீரைதானா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு உபயோகிப்பது நலம்.
துத்திக் கீரை, நோய்களைத் துரத்தும்.
- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com