

உணவு அறிவியலை மையப்படுத்தி நமது உணவில் சேர்க்கப்படும் தவிர்க்க முடியாத கீரை கறிவேப்பிலை! உணவுக்குச் சுவை, மணம் மற்றும் நலத்தை ஒருசேர வழங்கும் ‘ராஜ கீரை’ இது. விலை மலிவான கறிவேப்பிலைக் கீரை கொடுக்கும் பலன்களோ விலை மதிப்பில்லாதவை!
கார்ப்புச் சுவையை வழங்கும் மிகக் குறைவான கீரை வகைகளில் கறிவேப்பிலையும் ஒன்று. உணவில் தவறாமல் இடம்பிடித்தும் நம்மால் ஓரமாக ஒதுக்கி வைக்கப்படும் கீரை யாகக் கறிவேப்பிலையைச் சொல்லலாம்.
ஏற்கெனவே உணவில் சேர்ந்த கறி வேப்பிலையின் நுண் கூறுகள் பல்வேறு நோய்களுக்குப் பாதுகாப்பு அரணாக அமையும் என்றாலும் முழுமையாக உண்டால்தான் முழுப் பலன் கிடைக்கும்.
சித்த மருத்துவம்: ‘வாயினருசி வயிற்றுளைச்சல்’ எனத் தொடங்கும் கறிவேப்பிலைக் கீரை சார்ந்த சித்தர் அகத்தியரின் மருத்துவப் பாடல், கறிவேப்பிலையால் சுரம், சுவையின்மை, செரிமானக் கோளாறுகள் நீங்கும் என்பதைப் பதிவுசெய்கிறது. நுணுக்க மாகப் பார்த்தால் கறிவேப்பிலை தாளிப்பதற்காக மட்டும் பயன்படும் உணவுப்பொருள் அல்ல. சேர்க்கப்படும் இடங்களில் எல்லாம் மறைமுகமாக நற்சாரங்களைச் செலுத்தி உணவை மருந்தாக மாற்றும் மாயாஜாலக் கீரை.
ஆய்வுக் களம்: கணை யத்தில் உள்ள பீட்டா செல்களின் செயல்பாடுகளைக் கறிவேப்பிலை மேம்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நீரிழிவு நோயாளர்களை அவதிப்படுத்தும் கை, கால் எரிச்சலைக் குறைக்கக் கறிவேப்பிலைக் கீரை சிறந்த மருந்து. நுண் வீக்கங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உடையதால், ரத்தக் குழாய்களில் உண்டாகும் சிறு காயங்களையும் இது குணப்படுத்தும்.
நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்க, கறிவேப்பிலை பெருமளவில் உதவும். எதிர் ஆக்ஸிகரணி தன்மை நிறைந்த கறிவேப்பிலை பல்வேறு நோய்களுக்கு ரகசியமாக முட்டுக்கட்டை போடும்.
கறிவேப்பிலைப் பொடி: கறி வேப்பிலைக் கீரையைப் பறித்து, உலர வைத்துப் பொடித்து வைத்துக் கொண்டு சிறிது மிளகுத் தூள், பருப்புப் பொடி கலவை, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கறிவேப்பிலை/பருப்புப் பொடியாகப் பயன்படுத்தலாம். மதிய உணவில் கறிவேப்பிலைப் பொடியைப் போட்டுச் சிறிது நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட செரிமானக் கோளாறுகள் குணமாகும்.
இதில் சேர்க்கப்படும் நெய்யானது, கறிவேப்பிலையின் நுண் கூறுகளை உடலுக்கு முழுமையாகக் கிடைக்கச் செய்யும் உணவு வாகனமாக அமையும். கறிவேப்பிலைப் பொடியோடு சீரகம், தோல் சீவிய சுக்குத் தூள், மல்லித் தூள் சேர்த்து நல்லெண்ணெய் கலந்து சாப்பிடப் பசியின்மை, வாயுக் கோளாறு, மலச்சிக்கல் போன்றவை குணமாகும்.
கறிவேப்பிலைத் துவையல்: கறிவேப்பிலைக் கீரையுடன் மிளகாய், உப்பு, புளி சேர்த்துத் துவையல் செய்து துணை உணவாகப் பயன்படுத்தலாம். இது பேதி, செரியாமை, சுவையின்மை, மயக்கம் போன்றவற்றுக்கு மருந்தாக அமையும். உணவுக்குத் தொட்டுக் கொள்ள, ‘சாஸ்’ போன்ற பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு இது போன்ற மருத்துவக் குணங்கள் நிறைந்த மூலிகைத் துவையல்களின் பயன்பாட்டை அதிகரிப்பது உடல் நலத்துக்குச் சிறப்பு.
இரும்புச் சத்து, சுண்ணச் சத்து, பாஸ்பரஸ், மக்னீசியம், நார்ச்சத்து, வைட்டமின் – பி, கிளைக்கோஸைடுகள் என அத்தியாவசிய நுண்கூறுகளை எக்கச்சக்கமாகக் கொண்டிருக்கிறது கறிவேப்பிலை.
இதில் உள்ள விட்டமின் – ஏ, கண்களைப் பாதுகாக்கும். கறிவேம்பு, கறியபிலை, கருவேப்பிலை ஆகிய வேறு பெயர்களும் இதற்கு உண்டு. Murraya koenigii எனும் தாவரவியல் பெயர் கொண்ட கறிவேப்பிலையின் குடும்பம் Rutaceae.
சிறார்களுக்குக் கறிவேப்பிலையை உணவாகக் கொடுத்துப் பழக்கிவிட் டால், பசியைத் தூண்ட மருந்துகளின் அவசியம் இருக்காது. இளநரையைத் தடுப்பதற்குக் கறிவேப்பிலை சார்ந்து தயாரிக்கப்படும் உணவை அடிக்கடி சிறார்களுக்குக் கொடுக்கலாம்.
‘கேரட் சாப்பிட்டால் கண்களுக்கு நல்லது’ என்று குழந்தைகளுக்கு ஊட்டி வளர்ப்பதைப் போல, ‘கறிவேப்பிலையைச் சாப்பிட்டால் கண்களுக்கு மட்டுமல்ல, பல உள் உறுப்புகளுக்கும் நல்லது’ என்று குழந்தைகளுக்குக் கறிவேப்பிலையின் மகிமையைச் சொல்லிப் பழக்கலாம்.
கர்ப்பிணிகளுக்கு உண்டாகும் செரிமானக் கோளாறுகளை நிவர்த்தி செய்யவும், ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், உடல் சோர்வைத் தடுக்கவும் கறிவேப்பிலை உதவும். கஞ்சித் தண்ணீரோடு கறிவேப்பிலைத் துவையலைத் தொட்டுச் சாப்பிட மேற்சொன்ன பலன்கள் கிடைக்கும்.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கும் மிகை ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க நினைப்பவர்களுக்கும் கறிவேப்பி லைக் கீரை சிறந்த நண்பன். ரத்தச் சிவப்பணுக்களை அதிகரிக்க கறிவேப்பிலை பயன்படுகிறது. செரியாமையால் உண்டாகும் பேதியை நிறுத்த, கறிவேப்பிலையை அரைத்து மோரில் கலந்து குடிக்கலாம். இக்கீரை செரிமானச் சுரப்புகளைச் சுரக்கச் செய்து பசியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.
சாதப் பொடி, துவையல் மட்டுமன்றி கறிவேப்பிலை சாதம், கறிவேப்பிலை வடகம், கறிவேப்பிலை சட்னி எனப் பல்வேறு வகைகளில் கீரையை நலம் கொடுக்கும் உணவுப் பொருளாகத் தயாரிக்கலாம். கறிவேப்பிலைக் கீரை சார்ந்த தயாரிப்புகளில் பனை வெல் லத்தைச் சேர்த்துக்கொள்ள சுவையும் பலனும் அதிகரிப்பதை உணரலாம்.
கறிவேப்பிலைக் கீரையின் பலன்களை உணர்ந்த பிறகாவது மோரில் மிதக்கும் கறிவேப்பிலைகளையும் உணவில் எட்டிப்பார்க்கும் கறிவேப்பிலைகளையும் தவறாமல் அகத்துக்குள் அனுப்புவோம்.
- கட்டுரையாளர், சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com