டாக்டர் பதில்கள் 26: சர்க்கரை நோய்க்கு ‘ஹெச்பிஏ1சி’ பரிசோதனை ஏன் அவசியம்?

டாக்டர் பதில்கள் 26: சர்க்கரை நோய்க்கு ‘ஹெச்பிஏ1சி’ பரிசோதனை ஏன் அவசியம்?
Updated on
2 min read

சர்க்கரை நோயாளிகளுக்கு ‘ஹெச்பிஏ1சி’ (HbA1C) எனும் பரிசோதனை எதற்கு மேற்கொள்ளப்படுகிறது? அதை அவசியம் செய்ய வேண்டுமா? - பி. மணிமாறன், சென்னை.

பொதுவாக, ஒருவர் ரத்தச் சர்க்கரையைப் பரிசோதிக்கும் போது முன்தினத்திலும் பரிசோதிக்கிற தினத்திலும் அவர் என்ன உணவு, என்ன மருந்து சாப்பிட்டாரோ அதை வைத்துத்தான் ரத்தச் சர்க்கரை அளவு இருக்கும். சிலர் ரத்தப் பரிசோதனை செய்யும் நாளில் மட்டும் அல்லது ஓரிரு நாள்களுக்கு முன்பாக மட்டும் சரியான உணவுமுறையைக் கடைப்பிடித்துவிட்டுப் பரிசோதனை செய்துகொள்வார்கள்.

இதனால், அன்றைக்கு அவர்களுக்குப் பரிசோதனை முடிவுகள் சரியாக இருக்கலாம். மற்ற நாள்களில் அவர்களது உணவுமுறை மாறும். அப்போது சர்க்கரை அளவு அதிகமாகலாம். ஆனால், வெளியே தெரியாது. இந்த நிலை நீடித்தால், சர்க்கரை நோய் அவர்களின் உடல் உறுப்புகளைப் பாதித்து நோயைத் தீவிரப்படுத்தும்.

எப்போதும் அவர்களின் ரத்தச் சர்க்கரை சரியாக இருக்க வேண்டும் என்பதுதான் இதில் முக்கியம். சர்க்கரை நோயாளி ஒருவரின் ரத்தச் சர்க்கரை கடந்த மூன்று மாதங்களில் சரியான கட்டுப்பாட்டில் இருந்திருக்கிறதா, இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள ‘ஹெச்பிஏ1சி’ பரிசோதனை செய்யப்படுகிறது.

இதன் இயல்பு அளவு 5.7 %. இது 5.7 – 6.4 % என்று இருந்தால், சர்க்கரை நோய் வருவதற்குச் சாத்தியமான நிலை (Pre-diabetes) என்று பொருள். இது பொதுவானது. ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு இது பொருந்தாது. 50 வயதுக்குக் கீழ் உள்ள சர்க்கரை நோயாளிகளுக்கு இது 6.5 % என்கிற அளவிலும், 50 – 70 வயதுக்குள் இருப்பவர்களுக்கு 7 - 7-5 %, 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 8% எனும் அளவிலும் இருக்க வேண்டும். இது ஓர் அவசியமான பரிசோதனைதான்.

என் அப்பாவுக்கு வயது 70. அவருக்கு ‘கார்பங்கிள்’, ‘லைப்போமா’ ஆகிய பிரச்சினைகள் இருக்கின்றன. இந்த இரண்டும் ஒன்றா? இவற்றுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். கைப்பக்குவத்தில் இவற்றைக் கரைக்க முடியாதா? - பெயர் வெளியிட விரும்பாத திருச்சி வாசகர்.

‘ராஜபிளவை’ (Carbuncle), ‘கொழுப்புக் கட்டி’ (Lipoma) இந்த இரண்டும் ஒன்றல்ல. இவற்றைக் கைப்பக்குவத்தில் கரைக்க முடியாது. அறுவைசிகிச்சைதான் இவற்றுக்குத் தீர்வு. கொழுப்புக் கட்டியைப் பொறுத்தவரை வலி ஏற்படுத்துகிறது, தொற்று உண்டாகிறது, நரம்பை அழுத்துகிறது, பெரிதாக வளர்கிறது எனத் தொல்லைகள் தருமானால், அறுவைசிகிச்சையில் அதை அகற்ற வேண்டும். இப்படித் தொல்லைகள் எதுவும் அது தரவில்லை என்றால், அப்படியே விட்டுவிடலாம். ஆனால், ராஜபிளவையை அப்படி விட முடியாது.

இது ஒரு கடுமையான பாக்டீரியா தொற்றைக் குறிப்பது. சருமத்தின் அடிப்பாகத்தில் ஏற்படுவது. சிவப்பு நிறத்தில் சீழ் வைத்த பல கொப்புளங்களின் தொகுப்பாகத் தோன்றுவது. காலத்தோடு கவனிக்கத் தவறினால், உடலுக்குள் பரவக்கூடியது. பொதுவாக, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இது ஏற்படுவது உண்டு. பாதிக்கப்பட்டவருக்குக் கொப்புளத்தில் சீழ் பிடித்து வலி உண்டாகும்; குளிர் காய்ச்சல் ஏற்படும்.

இவற்றை உடனடியாகக் கவனிக்க வேண்டும். சீழை அகற்ற வேண்டும். தகுந்த நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோய் இருந்தால் அதைக் கட்டுப்படுத்த வேண்டும். ‘ராஜபிளவை’ அளவில் சிறிதாக இருந்தால் இதோடு சிகிச்சை போதும்; அளவில் பெரிதாக இருந்தால், அறுவைசிகிச்சை மூலம் அதை அகற்ற வேண்டும்.

எனக்கு 40 வயது. ஓட்டுநராக இருக்கிறேன். கடந்த சில வாரங்களாக வலது முழங்கை மூட்டு எலும்பில் வலி ஏற்படுகிறது. ஓய்வெடுத்தால் வலி குறைகிறது. இது எதனால் ஏற்படுகிறது? என்ன செய்யலாம்? - எம். குமாரவேல், கோவில்பட்டி.

உங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையை ‘டென்னிஸ் எல்போ’ (Tennis Elbow) என்று பொதுவாக அழைப்பதுண்டு. ‘லேட்டரல் எபிகான்டிலிடிஸ்’ (Lateral Epicondylitis) என்பது இதன் மருத்துவப் பெயர். இது பெரும்பாலும் கைகளை அதிகம் பயன்படுத்தும் தொழில் செய்ப வர்களுக்கு ஏற்படுகிறது.

ஓய்வில்லாமல் தொடர்ந்து கைகளுக்கு வேலை தரும்போது, உள்ளங்கையில் இருந்து மணிக்கட்டைப் பின்னோக்கி வளைக்கும் தசைநாண்கள் வீங்குவதாலும் கிழிந்து போவதாலும் ஏற்படுகிறது. நீங்கள் ஒருமுறை எலும்புநல மருத்துவரிடம் பரிசோதித்துக்கொள்ளுங்கள். பிரச்சினை தொடக்கநிலையில் இருந்தால் வலி நிவாரணிகள் உதவும்.

போதுமான ஓய்வு எடுத்துக்கொண்டால் வலி குறையும். அதோடு முழங்கை மூட்டுத் தசைகளுக்கு நெகிழ்வுத் தன்மை தருகிற பயிற்சிகளை மேற்கொண்டால் வலி மீண்டும் ஏற்படாது. பாதிப்பு தீவிரமாக இருந்தால், முழங்கையில் ஸ்டீராய்டு ஊசி செலுத்தப்படுவது உண்டு. அதிலும் வலி குணமாகவில்லை என்றால், அறுவைசிகிச்சைகூடத் தேவைப்படலாம்.

- கட்டுரையாளர், பொது நல மருத்துவர்; gganesan95@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in