செரிமானத்துக்கு உதவும் கொத்துமல்லிக் கீரை

செரிமானத்துக்கு உதவும் கொத்துமல்லிக் கீரை
Updated on
2 min read

மற்ற உணவுப் பொருள்களை வாங்கும்போது இலவச இணைப்பாகக் கிடைக்கும் ‘கொசுறுக் கீரை’தான் கொத்து மல்லிக் கீரை என்கிற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. ஆனால், தனது நறுமணத்தாலும் நலக்கூறுகளை உள்ளடக்கிய ஆற்றலாலும் உடலுக்கு அவ்வளவு நலம் பயக்க வல்லது கொத்துமல்லிக் கீரை. இந்த உண்மையை நீங்கள் உணர்ந்தால் போதும், அடிக்கடி கொத்துமல்லிக் கீரைக் கட்டுகளை வாங்கி உங்கள் காய்கறிப் பையில் நிரப்பிக்கொள்வீர்கள்.

உலகளாவிய உணவியல்: நம்மூர் சட்னிபோல, மெக்சிகோவில் கொத்துமல்லிக் கீரையை வைத்துத் தயாரிக்கப்படும் ‘குவாக்கமோல்’ எனும் தொடு உணவு மிகப் பிரசித்தம். அமெரிக்க நாடுகளில் ‘சிலாண்ட்ரோ’ என்கிற பெயர்பெற்ற கொத்துமல்லிக் கீரை, பல்வேறு வகையான உணவு வகைகளில் அங்கு சேர்க்கப்படுகிறது.

‘சாஸ்’ ரக உணவில் மேற்கத்திய நாடுகளில் கொத்துமல்லிக் கீரையின் தாக்கம் அதிகம். எகிப்தியப் பழங்காலக் குறிப்புகளில் கொத்துமல்லிக் கீரையின் பயன்பாடு பற்றிய விவரம் இருக்கிறது.

கார்ப்புச் சுவையைக் கொண்டிருந்தாலும் உடலுக்குத் தேவைப்படும் வெப்பத்தையும் குளிர்ச்சியையும் சரியாகப் பிரித்து வழங்கும் கீரை இது. செரிமானத்துக்கு உதவுவதோடு கார்ப்புச் சுவை கொடுக்கும் மருத்துவப் பலன்கள் அனைத்தையும் கொத்துமல்லிக் கீரை வழங்கும். செரிமானச் சுரப்புகளைத் தூண்டி, பசியை அதிகரிக்கும். மந்தமாக இருக்கும் செரிமான மண்டலத்தை உற்சாகமான நிலைக்குத் திருப்பும் பெரும் பணியைக் கொத்துமல்லிக் கீரை மேற்கொள்ளும்.

Coriandrum sativum எனும் தாவரவியல் பெயர்கொண்ட கொத்துமல்லிக் கீரையின் குடும்பம் Apiaceae. கீரையின் விதைகளை மையப்படுத்தி உருள் அரிசி, தனியா ஆகிய பெயர்களும் உண்டு.

சித்த மருத்துவம்: ‘கொத்து மல்லிக் கீரையுண்ணில் கோரவ ரோசகம்போம்…’ எனும் அகத்தியர் குணவாகடப் பாடல் கொத்துமல்லிக் கீரையின் மருத்துவக் குணங்களைப் பட்டியலிடுகிறது. பல்வேறு காரணங்களால் ஏற்படும் சுவையின்மை அறிகுறிகளுக்குக் கொத்துமல்லிக் கீரையைத் துவையல் போலச் செய்துகொடுக்க, சுவை மொட்டுகள் மீண்டும் சுவை பரப்பத் தொடங்கும்.

உடலில் அதிகரித்திருக்கும் பித்தத்தைத் தன்னிலைப்படுத்த உதவும் கீரை. சுரத்தின் தாக்கத்தில் இருப்பவர்களுக்குக் கஞ்சி ரக உணவை வழங்கும்போது, கொத்துமல்லிக் கீரையின் துணையோடு செய்த தொடு உணவு வகைகளைக் கொடுக்கலாம். நோயில் இருப்பவர்களுக்கான பத்திய உணவுப் பட்டியலிலும் கொத்துமல்லிக் கீரை இடம்பெறுகிறது.

வாய் நாற்றம் பிரச்சினை இருப்பவர்கள், கொத்துமல்லிக் கீரையோடு அதன் விதைகளையும் (தனியா) சேர்த்து மென்று சாப்பிடலாம். அல்லது இரண்டையும் நீரிலிட்டுக் கொதிக்க வைத்துக் குடிநீர் வடிவிலும் எடுக்கலாம். மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள், கொத்துமல்லிக் கீரை, அதன் விதை சேர்த்துத் தயாரிக்கப்பட்ட குடிநீரைப் பருக, பழுதுபட்ட கல்லீரலின் செயல்திறன் மேம்படும்.

மோரில் கொத்துமல்லிக் கீரையைப் பச்சையாகத் தூவிப் பருக, வேனில் கால வெப்பம் உடலில் பெரிய அளவில் தாக்கத்தைக் காட்டாது. வயிற்றுப் புண் இருப்பவர்கள் கொத்துமல்லிக் கீரையின் பயன்பாட்டை அதிகரிக்கலாம். கிருமிநாசினி தன்மையும் இந்தக் கீரையின் சாரங்களுக்கு இருப்பதாகப் பதிவிடுகிறது ஆய்வு.

கொத்துமல்லிக் கீரை இரண்டு கைப்பிடி, புதினா ஒரு கைப்பிடி, கறிவேப்பிலை ஒரு கைப்பிடி, பச்சை மிளகாய் நான்கு, தக்காளி ஒன்று என எடுத்து அனைத்தையும் தனித்தனியே எண்ணெய் விட்டு வதக்கி ஆற விடுங்கள். பிறகு மிக்ஸியில் அல்லது கல்லுரலில் இட்டு மையாக அரையுங்கள். தேவையான அளவுக்குக் கல்லுப்பு சேர்த்துக் காலை அல்லது மதிய உணவில் தொடுகறியாகச் சாப்பிட்டு வந்தால் பழுதுபட்ட செரிமான சக்தி, ஆற்றல் மிக்கதாக உருவெடுக்கும்.

ஆய்வுக்களம்: ரத்தக் குழாய்களில் கொழுப்புத் திட்டுகள் படியும் செயல்பாட்டைக் கொத்துமல்லிக் கீரை தடுப்பதாகக் குறிப்பிடுகிறது ஓர் ஆய்வு. நீரிழிவு நோயாளர்கள் தங்கள் உணவுக் குறிப்பேட்டில் அடிக்கடி சேர்க்க வேண்டிய கீரை ரகம் இது. கீரையில் இருக்கும் பாலிபீனால்கள், தங்கள் எதிர்-ஆக்ஸிகரணி தன்மையின் மூலம் இதயத் தசைகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பு அளிக்கின்றனவாம். கீரையில் உள்ள ஆவியாகக் கூடிய எண்ணெய்க்கு வலி நிவாரணி செய்கை இருப்பது குறிப்பிடத்தக்கது.

கீரையை எண்ணெய் ஊற்றி வதக்கிச் சூடேற்றி மூட்டு வீக்கங்களுக்கு ஒற்றடமிட்டு, கட்டியும் வைக்க விரைவில் வீக்கமும் வலியும் குறையும். தோல் நோய்களுக்கும் தலை பாரமாக இருக்கும் போதும், கீரையின் சாற்றைப் பிழிந்து வெளிப் பிரயோகமாகத் தடவலாம்.

கவனம்: கூடுதல் வெப்பமும் குளிர்ச்சியும் கொத்துமல்லிக் கீரையின் மருத்துவத் தன்மையைக் குறைத்துவிடும். ஆகையால் பறித்த உடன் கொத்துமல்லிக் கீரையை உணவில் பயன்படுத்த முழுப் பயன்களை அனுபவிக்கலாம். குளிர்சாதனப் பெட்டியில் கீரையை வைத்துப் பயன்படுத்துவதைத் தவிர்க்க முயலலாம். வீட்டுத் தொட்டிகளில் கீரையின் ஆதாரமான தனியாவைத் தூவி ஈரப் பதத்தைத் தொடர்ந்து பராமரித்தால் பசுமையான கொத்துமல்லி துளிர்விட்டு உணவு வகைகளில் நறுமணத்தையும் நற்கூறுகளையும் பரப்பும்.

கொத்துமல்லிக் கீரை, கொத்தாக ஆரோக்கியத்தைப் பரிசளிக்கும்.

- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in