

எனக்கு ஒரு வருடமாகச் சளியும் பிடிக்கவில்லை, காய்ச்சலும் வரவில்லை. ஜலதோஷமும் இல்லை. இவ்வாறு இருப்பது ஆரோக்கியமானதா? - ரேணுகாதேவி, தஞ்சை.
கடந்த ஒரு வருடமாக உங்களுக்குச் சளி பிடிக்கவில்லை, காய்ச்சல் வர வில்லை, ஜலதோஷமும் இல்லை. சந்தோஷப்படுங்கள். சுவாச உறுப்பு களைப் பொறுத்த அளவில் நீங்கள் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறீர்கள். உங்கள் உடல் எடை தெரியவில்லை. உங்கள் உயரத்துக்கு ஏற்ப உடல் எடையைப் பேணுங்கள்.
அடுத்து, உங்கள் வயதைத் தெரிவிக்கவில்லை. வயதுக்கு ஏற்ப ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளுங்கள். அந்தப் பரிசோதனைகள் எல்லாமே இயல்பான அளவுகளைக் காட்டினால், உங்களுக்கு நீங்களே ‘சபாஷ்’ போட்டுக்கொள்ளுங்கள். உங்கள் ஆரோக்கியத்துக்கு 100% உத்தரவாதம்.
எனக்கு வயது 53. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகச் சர்க்கரை நோய்க்குச் சிகிச்சை எடுத்துவருகிறேன். தற்போது என்னுடைய பற்கள் வலுவிழந்துள்ளன. உணவைக் கடித்து மெல்லுவதற்குக் கடினமாக உள்ளது. மேல், கீழ் முன் பற்கள் ஆடுகின்றன. முழு உடல் பரிசோதனையின்போது என்னைப் பரிசோதித்த மருத்துவர் பற்கள் தானாகவே விழும் வரை பொறுத்திருந்து பற்களைப் புதியதாகக் கட்டிக் கொள்ளும்படி கூறினார். என்னுடைய பிரச்சினை தீர்வதற்கு என்ன வழி? வேறு மருத்துவச் சிகிச்சை இருந்தால் ஆலோசனை கூறுங்கள். - ஆ. சிவக்குமார், கிருஷ்ணகிரி.
சர்க்கரை நோயாளிகளுக்குப் பெரும்பாலும் ‘பரவலான பல் ஈறு அழற்சி’யின் (Generalized Periodontitis) தாக்குதலால்தான் பற்கள் பலமிழந்து காணப்படும். இந்தப் பிரச்சினைக்குப் பற்கள் மற்றும் அவற்றைச் சார்ந்த ஈறு, எலும்பு ஆகியற்றின் ஆரோக்கியத்தைப் பரிசோதிக்க வேண்டும்.
நோயின் தன்மை ஆரம்பகட்டத்தில் இருந்தால், பற்களைச் சுத்தம் செய்தல், பல் ஈறு சிகிச்சை (Flap Surgery) போன்றவற்றின் மூலம் குணப்படுத்தலாம். நோயின் தன்மை தீவிரமடைந்திருந்து பற்கள் மிகவும் பலவீனமாக இருந்தால் அவற்றை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் செயற்கைப் பல் பொருத்தலாம். இதில் எந்தச் சிகிச்சை முறையை மேற்கொண்டாலும் ரத்தச் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.
மேலும், பற்களைக் காப்பாற்ற முடியாது என்று அறியப்பட்டால், காலம் தாழ்த்தாமல் அந்த இடத்தில் எவ்வளவு விரைவில் செயற்கைப் பல் பொருத்துகிறோமா அவ்வளவு நல்லது. அப்போதுதான் மீதமுள்ள ஈறு மற்றும் தாடை எலும்பை நாம் பாதுகாக்க இயலும். இது நவீனப் பல் மருத்துவச் சிகிச்சைமுறை. இது தவிர வேறு மருத்துவச் சிகிச்சை நவீன மருத்துவத்தில் இல்லை.
எனக்கு அடிக்கடி மூக்கு அடைத்துக்கொள்கிறது. மூக்கில் சொட்டு மருந்து விட்டுச் சமாளித்து வருகிறேன். இது சரியா? - மாரிக்கண்ணன், கோயமுத்தூர்.
மூக்கு அடைத்துக்கொள்வதற்குப் பலதரப்பட்ட காரணங்கள் உள்ளன. முக்கியமாக, சைனஸ் பிரச்சினை, ஒவ்வாமை, அடினாய்டு வீக்கம், இடைச்சுவர் வளைவு (Deviated septum), நீர்க்கட்டி (Nasal Polyps), தைராய்டு பிரச்சினை போன்றவைற்றைச் சொல்லலாம். உங்களுக்கு என்ன காரணம் எனத் தெரிந்து, அதற்குரிய சிகிச்சை எடுப்பதே சரி. மூக்கில் சொட்டு மருந்து விடுவது தற்காலிகமாகத் தீர்வு தரலாம்.
அதுவே சிகிச்சை ஆகாது. மேலும், மூன்று நாள்களுக்கு மேல் மூக்கில் சொட்டு மருந்து விட்டால், அடுத்த முறை அந்த மருந்து செயல்படாமலும் போகலாம். பலருக்கு அடிக்கடி மூக்கில் சொட்டு மருந்து விடுவதாலேயே மூக்கு அடைத்துக்கொள்வதும் உண்டு.
திருச்சியில் என் உறவினருக்குத் தொடையில் ஏற்பட்டிருக்கும் ரத்தக் குழாய் பிரச்சினைக்காக Microsurgery செய்யப்பட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். Plastic surgery, Microsurgery இந்த இரண்டுக்குமுள்ள வித்தியாசம் என்ன, டாக்டர்? - வே. சுந்தரமூர்த்தி, சென்னை - 9.
‘பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை’ என்பது நம் உடல் உறுப்புகளில் ஏற்படும் அனைத்துவகையான குறைபாடு களைப் போக்கும் விதத்தில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை. குறிப்பாக, அந்த உறுப்பின் கட்டமைப்பையும் செயல்பாட்டையும் மறுசீரமைப்பு செய்யப்படும் அழகியல் சிகிச்சை இது.
மார்பில் காணப்படும் அகலமான தீப்புண் ணுக்கு, பயனாளியின் தொடையிலிருந்து சருமத்தை வெட்டியெடுத்து அந்தப் புண்ணின் மீது போர்த்தப்படும் சிகிச்சையை இதற்கு ஓர் உதாரணமாகச் சொல்லலாம். ‘நுண் அறுவை சிகிச்சை’ (Microsurgery) என்பது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் ஒரு பகுதி.
இதில் குறைபாடுள்ள ரத்தக்குழாய்கள், நரம்புகள், தசைகள், தசைநாண்கள் போன்றவை மிக நுணுக்கமாக இணைக்கப்படும். குறிப்பாக, சில மி.மீ.க்கும் குறைவான அளவில் உள்ள நரம்பு, ரத்தக்குழாய் போன்றவை சிதை வடையும்போது, அந்த உடல் பகுதிகளை மருத்துவர் ஒரு நுண்ணோக்கி வழியாகப் பார்த்து, மிகச் சரியாக இணைத்து, அந்தப் பகுதிகள் பழையபடி செயல்பட உதவுவார். விபத்துகளின் போது படுமோசமாகச் சிதைவடையும் நரம்புகள் இணைக்கப்படுவது இதற்கு ஓர் உதாரணம்.
- கட்டுரையாளர், பொது நல மருத்துவர்; gganesan95@gmail.com