

சி
த்த மருத்துவம் குறித்துப் பரவலான விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் இந்தச் சமயத்தில், கடந்த 15 முதல் 18-ம் தேதி வரை, சென்னை அரசினர் சித்த மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற ‘நலம் வாழ் – சித்த மருத்துவக் கண்காட்சி 2018’, அந்த மருத்துவ முறையின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதாக இருந்தது.
சுமார் 20-க்கும் மேற்பட்ட அரங்குகள். அந்த அரங்குகளுக்குச் சித்தர்களின் பெயரே சூட்டப்பட்டிருந்தன. மூலிகைகளைப் பற்றி ஒரு வரிச் செய்தி, சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கருவிகளின் அறிமுகம், மன அழுத்தத்தைக் குறைக்கும் நகைச்சுவைக் குறும்படம், இயற்கை வேளாண்மை குறித்த விளக்கம் என கண்காட்சியைச் சின்னச் சின்ன விஷயங்களால் அசத்தியிருந்தார்கள் மாணவர்கள்.
உடலுக்கும் உள்ளத்துக்கும் பயனளிக்கும் பல்வேறு ஆசனங்களை எவ்வாறு முறையாகச் செய்வது என்பது குறித்து மாணவர்கள் ஒரு செய்முறை விளக்கப் பாடமே எடுத்துவிட்டார்கள். இந்தக் கண்காட்சியின் இன்னொரு ஆச்சரிய அம்சம்… ‘சைவ ஆட்டுக்கால்!’. அதுகுறித்து மாணவர் ஒருவரிடம் கேட்டபோது, “இதை ‘முடவன் ஆட்டுக்கால்’ என்று சொல்வார்கள்.
இது ஒரு கிழங்கு வகை. பார்ப்பதற்கும், சுவைப்பதற்கும் ஆட்டுக்கால் போலவே இருப்பதால் இதை ‘சைவ ஆட்டுக்கால்’ என்கிறார்கள். இது ஏலகிரி, கொல்லிமலை போன்ற பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது. இதை ‘சூப்’ வைத்துச் சாப்பிட்டால் மூட்டுகளுக்கு நல்லது” என்றார்.
மாணவர்களே தங்கள் செலவில் நடத்திய இந்தக் கண்காட்சிக்குப் பதிவுக் கட்டணம் வெறும் ஒரு ரூபாய்தான்!
படங்கள்: ந. வினோத்குமார்