

எனக்கு ஒரு வாரமாக ஆசனவாயில் வலி அதிகமாக உள்ளது. மருத்துவர் பரிந்துரைப்படி Cremaffin Syrup குடித்தேன். களிம்பு தடவினேன். இருந்தபோதும் வலி குறையவில்லை. என்ன காரணம்? அடுத்து என்ன செய்வது? - சுந்தரமூர்த்தி, காட்டுமன்னார்கோயில்.
ஆசனவாயில் தொற்றுள்ள மூலநோய் இருக்குமானால் அல்லது கண்ணாடியை வைத்துக் கீறியது போல் வெடிப்புகள் (Anal Fissure) இருந்தால் இம்மாதிரி வலி ஏற்படக்கூடும். அல்லது அந்த இடம் சுண்டுவிரல்கூட நுழைய முடியாதபடி சுருங்கி இருக்கும். அப்போதும் இந்த மாதிரி கடுமையான வலி மணிக்கணக்கில் படுத்தி எடுக்கும். மலச்சிக்கல்தான் இதற்கு முதல் காரணம்.
அதிக நேரம் அமர்ந்தே இருப்பது அடுத்த காரணம். இந்த இரண்டையும் தவிருங்கள். மருத்துவர் கொடுத்திருக்கும் மருந்துகளைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள். மருத்துவர் பரிந்துரைப்படி பொருத்தமான நுண்ணுயிர்க் கொல்லி மருந்தையும் அமீபா எதிர்ப்பு மருந்து ஒன்றையும் சேர்த்து எடுத்துக்கொள்ளுங்கள். ‘சிட்ஸ் பாத்’ (Sitz Bath) எனும் முறையில் ஆசன வாயைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதும் முக்கியம்.
உணவுமுறையிலும் கவனம் செலுத்துங்கள். நிறையத் தண்ணீர் குடியுங்கள். கீரை, காய்கறி, பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். துரித உணவையும் நொறுக்குத் தீனிகளையும் குறைத்துக் கொள்ளுங்கள். நீண்ட தூரப் பயணங்களைத் தவிருங்கள். வலி தொடர்கிறது என்றால், மருத்துவர் யோசனைப்படி வெடிப்புள்ள ஆசனவாயைச் சற்றே விரித்துவிட்டால் நிவாரணம் கிடைக்கும்.
எனக்கு அடிக்கடி தலைசுற்றலும் வாந்தியும் வருகின்றன. இதற்கு எந்த மருத்துவரை அணுக வேண்டும்? தலைசுற்றல் வரும்போது அதைத் தவிர்க்க வீட்டில் நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? - அன்பரசன் அன்பழகன், மின்னஞ்சல்.
நீங்கள் காது-மூக்கு-தொண்டை நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். ரத்த அழுத்தப் பரிசோதனையும் முழு ரத்தப் பரிசோதனைகளும் உதவும். ஆடியோகிராம், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட காதுக்கான அனைத்துப் பரிசோதனைகளும் தேவைப்படும். தலைசுற்றலுக்குக் கழுத்தெலும்புகள் பிரச்சினை உள்ளிட்ட வேறு காரணமும் உடன் இருப்பதாகச் சந்தேகப்பட்டால், அவற்றுக்குரிய பரிசோதனைகளும் அவசியப்படும். காரணம் புரிந்துவிட்டால் சிகிச்சை கொடுப்பது எளிது.
தலை சுற்றுவதுபோல் உணர்ந்தால், உடனே தரையில் படுத்துக்கொள்ளுங்கள். கால்களைச் சற்று உயரமாக வைத்துக்கொள்ளுங்கள். படுக்க முடியாத போது தரையில் உட்கார்ந்துகொண்டு, உடலை முன்பக்கமாகச் சாய்த்து, முழங்கால்களை மடக்கி, கால்களுக்கு இடையில் தலையை வைத்துக்கொள்ளுங்கள். படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது நேராக எழுந்திருக்காமல், முதலில் பக்கவாட்டில் படுத்துக்கொண்டு அந்தப் பக்கவாட்டிலேயே எழுந்திருங்கள். எழுந்தவுடனேயே நடந்துசெல்ல வேண்டாம்.
படுக்கையில் சிறிது நேரம் உட்கார்ந்த பிறகு நடந்தால் தலை சுற்றல் ஏற்படாது. படுக்கையிலிருந்து எழுந்ததும் எதையாவது எடுப்பதற்குக் குனியவோ சட்டென்று திரும்பவோ முயலாதீர்கள். தலைக்குத் தலையணை வைக்காதீர்கள். உடலின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உடனடியாக மாறாதீர்கள்.
உதாரணத்துக்கு, புரண்டு படுக்கும்போது திடீரெனப் புரளாதீர்கள். உடல் திரும்பும்போது தலையை மட்டும் திருப்பாதீர்கள். உடலோடு திரும்புங்கள். மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதைக் குறைத்துக்கொள்ளுங்கள். ரோலர் கோஸ்டர் போன்ற ராட்டினங்களில் சுற்றுவதைத் தவிருங்கள்.
நான் சமீபத்தில் குடலிறக்கத்துக்கு ஆபரேஷன் செய்துகொண்டேன். மறுபடியும் இந்தப் பிரச்சினை வராமல் இருக்க நான் என்ன செய்ய வேண்டும், டாக்டர்? - கணபதி, கோபிசெட்டிபாளையம்.
குடலிறக்கத்துக்கு (Hernia) அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் இரண்டு வாரங்களுக்குக் கடுமையான வேலைகள் செய்யக் கூடாது. நீண்ட பயணங்கள் மேற்கொள்ளக் கூடாது. இருமல், சளி பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடுத்ததாக, மலச்சிக்கலை எப்போதும் தவிர்க்க வேண்டும். அதிக எடையுள்ள பொருள்களைத் தூக்கக் கூடாது. புகை பிடிக்கக் கூடாது. மதுப் பழக்கம் ஆகாது. சிறுநீர்ப் பாதை அடைப்பு இருந்தால் அதற்குச் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
இருமல், சளி பிடித்தால் உடனடியாகச் சிகிச்சை எடுக்க வேண்டும். உடல் பருமன் ஏற்படாமல் எடையைப் பேண வேண்டும். மற்றபடி, மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு மற்றவர்கள்போல் எல்லாவித வேலைகளையும் மேற்கொள்ளலாம்.
எனக்கு 26 வயது. கணினி, திரையரங்குத் திரை, மின்விளக்கின் ஒளி போன்றவை என் கண்களைக் கூசவைக்கின்றன. கைபேசியில் Zero Brightness வைத்தும்கூடத் திரையில் மாறி வரும் வண்ணங்கள் கண்களை உறுத்துகின்றன. புத்தகம் வாசிக்கிறபோது இப்பிரச்சினை இல்லை. இயற்கையான வெளிச்சத்தையும் இருட்டையுமே மனம் விரும்புகிறது. இது என்ன வகையான குறைபாடு? கணினித் திரையை, கைபேசிப் பயன்பாட்டைத் தவிர்க்கவே முடியாத இந்த நவீனக் காலத்தில் இதற்கு என்ன தீர்வு, டாக்டர்? - நு. அல்மாஸ் அகமது, சென்னை.
கண் மருத்துவரைச் சந்தித்து உங்கள் கண்களுக்குத் தேவையான பொதுவான பரிசோதனைகளை மேற்கொள்ளுங் கள். முக்கியமாக, விழித்திரைப் பரிசோதனை முக்கியம். ‘மேக்குலா’ (Macula) என்கிற பகுதியில் பிரச்சினை இருக்கிறதா என்பதையும் பரிசோதித்துக்கொள்ளுங்கள். ‘உலர் கண்’ பிரச்சினை உள்ளதா என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும். இவை எல்லாமே சரியாக இருந்தால், தனிச் சிறப்புப் பார்வைக் கண்ணாடிகள் சில இருக்கின்றன. மருத்துவரின் யோசனைப்படி அணிந்துகொள்ளுங்கள். உங்கள் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும்.
- கட்டுரையாளர், பொது நல மருத்துவர்; gganesan95@gmail.com