பச்சை வைரம் 24: கொழுப்பைக் குறைக்கும் புளிச்ச கீரை

பச்சை வைரம் 24: கொழுப்பைக் குறைக்கும் புளிச்ச கீரை

Published on

நேர்த்தியாகப் பிளவுபட்ட அழகிய இலைகள், தகுந்த நிறக் கலவையில் மலர்கள், பசுமையை ஏந்திக்கொண்டிருக்கும் நல்ல உயரம்... ஆம் புளிச்ச கீரைத் தாவரத்தின் நிறத் தோற்றமும் மலர்களின் பூஞ்சிரிப்பும் மனதிற்கு ஊட்டமளிப்பவை. கீரையைச் சமைத்துச் சாப்பிடும்போது உடலுக்கு ஊட்டங்களை வாரி வழங்கும்.

பொதுவாகப் பயன்பாட்டில் உள்ள கீரைகள் இனிப்பு மற்றும் கைப்புச் சுவையையே அதிகமாகக் கொண்டிருக்கும். ஆனால், கீரை வகைகளில் இயற்கையான புளிப்புச் சுவையை நமக்கு அறிமுகப்படுத்தும் கீரை, புளிச்ச கீரை.

புளிப்புச் சுவையாக இருப்பினும் உடலுக்குக் குளிர்ச்சியை வழங்கும் சிறப்புக் கீரை இது. பச்சை நிறத் தண்டுகளைக் கொண்ட புளிச்சகீரை ரகத்தில் புளிப்புச் சுவை சற்றுக் குறைவு. அதுவே சிவப்பு நிறத்தைக் கொண்ட புளிச்ச கீரை ரகத்தைச் சமைத்துச் சாப்பிடும்போது, புளிப்புச் சுவை சற்றுத் தூக்கலாக இருக்கும்.

‘தேகசித்தி யாகுஞ் சிறுகாசம் மந்தமறும்…’ எனத் தொடங்கும் அகத்தியர் பாடல், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, மந்தத்தைப் போக்க, தேகத்துக்குப் பலத்தைக் கொடுக்க புளிச்ச கீரை பயன்படும் என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கிறது.

காச்சிரங்கு, காச்சுரை, சணப்பு, புளிச்சிறுகீரை, காய்ச்சொறி, அம்பாடி, நாலிடா ஆகிய வேறு பெயர்கள் புளிச்ச கீரைக்கு உண்டு. பெயருக்கு ஏற்றாற்போல், புளிப்புச் சுவையை முதன்மையாக வைத்திருக்கும் கீரை இது.

உடலில் ஏற்படும் வறட்சியை அகற்றி, மலத்தை இளக்கும் தன்மை புளிச்ச கீரைக்கு உண்டு. Hibiscus cannabinus என்கிற தாவரவியல் பெயர் கொண்ட புளிச்ச கீரை, Malvaceae தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது.

சுவைக் குறிப்புகள்: ஆவியில் அவித்த புளிச்ச கீரையோடு மிளகு, பூண்டு, சின்ன வெங்காயம், உளுத்தம் பருப்பு சேர்த்துச் செய்யப்படும் துவையலை ஒரு பிடிச் சோற்றில் போட்டுப் பிசைந்து சாப்பிட, கீரையின் சுவையோ நம் மதி மயக்கும்.

பல்வேறு காரணங்களால் ஏற்படும் சுவையின்மையைக் குறைக்க, புளிச்ச கீரை சட்னி சிறப்பான தேர்வு. செரிமானச் சுரப்பிகளைத் தூண்டி, முறையான செரிமானத்துக்கு அடித்தளம் அமைக்க புளிச்ச கீரை பேருதவி புரியும். புளிச்ச கீரையை வேகவைக்கும்போது, கொஞ்சம் கூடுதலாகச் சோம்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட செரிமானம் விரைவடையும்.

இந்தியா முழுவதும்: புளிச்ச கீரையை ஊறவைத்த நீரில், பூண்டு, மிளகு, கொஞ்சம் பசளைக் கீரை சேர்த்து சூப் போலப் பருகிவர, உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க, உணவு முறைக்குள் நாம் கட்டாயம் சேர்க்க வேண்டிய கீரை இது. மதிய வேளைகளில் சுடச்சுட வடித்த சோற்றுடன் நெய் விட்டுப் புளிச்ச கீரைக் கடைசலைப் பிசைந்து சாப்பிடும்போது அமுதச் சுவையை வாயார, மனமார உணர முடியும். அதிகம் வேக வைக்கத் தேவையின்றி லேசாக வதக்கியதுமே குழைந்துவிடும் தன்மை புளிச்ச கீரைக்கு உண்டு.

இந்திய உணவுக் கலாச்சாரத்தில் புளிச்ச கீரை இடம்பிடித்துப் பல நூற்றாண்டுகள் கடந்துவிட்டதாக உணவு நூல்கள் சுட்டுகின்றன. ஆந்திர மாநில தினசரி உணவு வழக்கத்தில் புளிச்ச கீரை ஏதாவதொரு வகையில் இடம்பிடித்து விடுகிறது. ஆந்திரத்தில் புளிச்ச கீரையின் பயன்பாடு அதிக அளவில் இருந்தாலும், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் புளிச்ச கீரையின் பயன்பாடு சார்ந்த உணவுக் குறிப்புகள் ஏராளம்.

புகழ்பெற்ற கோங்குரா: ஆந்திரப் பகுதியில் ‘கோங்குரா’ எனப் பெயர்பெற்ற புளிச்ச கீரைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். ஆந்திரத்தின் கோங்குரா சட்னி, துவையல், கோங்குரா பச்சடி… என கோங்குரா ரகத் தொடுஉணவு வகைகளை ருசிக்க வெளிநாடுகளில் இருந்து ஆந்திரத்தைத் தேடிவரும் உணவுப் பிரியர்கள் இருக்கிறார்கள். மேலும் புளிச்ச கீரையைக் கொண்டு நளபாகமாகச் சமைக்கப்படும் கோங்குரா சோறு, கோங்குரா புளியோதரை, கோங்குரா பருப்புச்சோறு, ஊறுகாய், ஜாம், சாறு போன்றவை மிகப் பிரபலம்.

குண்டூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற கோங்குரா ஊறுகாய், காரப் பிரியர்களின் நாமொட்டுகளைக் கிளர்ச்சியூட்டக் கூடியது. அசைவ உணவுத் தயாரிப்பிலும் புளிச்ச கீரையின் துணையை நாடும் ஆந்திர உணவுப் பிரியர்களை இப்போதும் பார்க்கலாம். உணவுப் பொருள்களுக்கு இயற்கையான நிறமூட்டியாகவும் புளிச்ச கீரை பயன்படுகிறது.

உலக அளவில்: மியான்மார் நாட்டில் மூங்கில் குருத்துகளோடு புளிச்ச கீரையைச் சேர்த்துப் பூண்டு, வெங்காயம், மஞ்சள் ஆகியவற்றின் உதவியுடன் வறுத்துச் சமைக்கப்படும் ‘சின்-பவுங்-கியாவ்’ தொடுகை உணவு பிரசித்திபெற்றது. புளிச்ச கீரையின் புளிப்புச் சுவையைக் கொண்டு தயாரிக்கப்படும் நொதிக்க வைக்கப்படும் பானம், மேற்கிந்தியத் தீவுகளின் திருவிழா நாள்களில் பருகப்படுகிறது.

ஆய்வுக் களம்: துத்தநாகச் சத்து, இரும்புச் சத்து, சுண்ணச் சத்து, பாஸ்பரஸ், வைட்டமின் – ஏ, பி என ஊட்டங்களை வாரி வழங்கவும் புளிச்ச கீரை தவறுவதில்லை. Cannabiscitrin, Cannabiscetin, Anthocyanin போன்ற தாவர வேதிப்பொருள்கள், இதன் மருத்துவக் குணத்திற்குக் காரணமாகின்றன. வீக்கமுருக்கி தன்மையும், வலியைக் கட்டுப்படுத்தும் தன்மையும் புளிச்ச கீரைக்கு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

கல்லீரலுக்குப் பாதுகாப்பு அளிப்பதோடு, கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும் புளிச்ச கீரை உதவுகிறது. எதிர்-ஆக்ஸிகரணி தன்மையை நிறைவாக வைத்திருப்பதோடு, புற்று செல்களின் வளர்ச்சியைத் தடுக்கவும் இதிலுள்ள வேதிக்கூறுகள் பயன்படுகின்றனவாம்.

புளிச்ச கீரையை வீட்டுத் தோட்டத்திலேயே வளர்க்கலாம். தேவை இருக்கும்போது பறித்துப் பயன்படுத்தலாம். கடைகளில் வாங்கியதாக இருப்பின், கீரையை ஈரத் துணியால் சுற்றி வைத்து அடுத்த சில நாள்கள் வரை உபயோகப்படுத்தலாம்.

புளிச்ச கீரை, சுவைக்கும் ஊட்டத்துக்கும் உகந்த கீரை!

- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in