டாக்டர் பதில்கள் 23: பித்தப்பைக் கற்களைக் கரைக்க முடியுமா?

டாக்டர் பதில்கள் 23: பித்தப்பைக் கற்களைக் கரைக்க முடியுமா?
Updated on
3 min read

எனக்குப் பித்தப்பையில் 4 சிறிய கற்கள் உள்ளதாக வயிற்றை ஸ்கேன் செய்தபோது சொல்லப்பட்டது. இதனால் தொந்தரவு ஒன்றுமில்லை. எனக்கு எதிர்காலத்தில் அறுவை சிகிச்சை தேவைப்படுமா? பித்தப்பைக் கற்களை மாத்திரை அல்லது உணவுமுறை மூலம் கரைக்க முடியுமா? ஆலோசனை தேவை, டாக்டர் - செ. அண்ணாத்துரை, திருநெல்வேலி.

நவீன மருத்துவத்தில் பித்தப்பைக் கற்களைக் கரைக்க முடியாது. கொழுப்பு நிறைந் துள்ள உணவு வகைகளைக் குறைத்துக்கொள்வதன் மூலமும் சில மாத்திரைகளை எடுத்துக்கொள்வதன் வழியாகவும், ஏற்கெனவே உள்ள கற்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம்.

அதிலும், வயிற்றில் வலி எதுவும் இல்லாதபோது, பித்தப்பைக் கற்களுக்கு மாத்திரைகள் எடுத்துக்கொள்ளவும் தேவையில்லை. பொதுவாக, பித்தப்பைக் கற்கள் பித்தப்பையில் தொற்று ஏற்படுவதற்கு (Acute Cholecystitis) வழி செய்யுமானால் அல்லது பித்தப்பையிலிருந்து புறப்படும் நாளத்தை அவை அடைத்துக்கொள்ளுமானால், அந்தக் கற்களை அகற்ற வேண்டி வரும்.

வலது பக்கம் நெஞ்சுக்கு அடியில், மேற்புற வயிற்றில் அடிக்கடி ஏற்படும் கடுமையான வலி, காய்ச்சல், வாந்தி போன்ற தொல்லைகள் பித்தப்பைத் தொற்றையும் அடைப்பையும் அடையாளம் காட்டும் அறிகுறிகள். அப்போதுகூடக் கற்களை மட்டும் அகற்ற முடியாது.

பித்தப்பையையும் கற்களையும் சேர்த்துத்தான் அகற்ற வேண்டி வரும். ஒருவேளை, பித்தப்பைக் கல் பித்தப்பையிலிருந்து முழுவதுமாக வெளியேறி பித்தநாளத்துக்கு (Bile duct) வந்துவிட்டது என்றால், அப்போது வயிற்று வலியோடு மஞ்சள் காமாலையும் தோன்றும்.

இந்த நிலைமையில் அறுவைசிகிச்சை இல்லாமல், ‘இஆர்சிபி’ (Endoscopic retrograde cholangio pancreatography -ERCP) எனும் முறையில், வாய்வழியாக அனுப்பப்படும் எண்டாஸ்கோப்பி கருவி கொண்டு அந்தக் கல்லை வெளியில் எடுத்துவிடலாம்.

நான் ஒரு சர்க்கரை நோயாளி. வயது 74. இரவு நேரத்தில் வலது கால் விரல் நுனிகளில் கடுமையான வலி ஏற்படுகிறது. தூங்க முடியவில்லை. Gabantin 300 மாத்திரையையும் தூக்க மாத்திரை யையும் சாப்பிடுகிறேன். வலி போகத் தகுந்த ஆலோசனை கூறவும் - பாலசுப்பிரமணியன். மதுரை.

சர்க்கரை நோயாளிகளுக்குப் பொதுவாக ஏற்படும் பிரச்சினைகளில் இது முக்கியமானது. பெரும்பாலும் ரத்தச் சர்க்கரை மாதக்கணக்கில் கட்டுக்குள் இல்லையென்றால், கால் புறநரம்புகள் பாதிக்கப்படும். அப்போது நீங்கள் கூறுவதுபோல் கால் வலி, விரல்களில் வலி போன்ற தொல்லைகள் ஏற்படலாம்.

இந்தப் பிரச்சினைகளுக்கு நீங்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரை சரிதான். அவற்றுடன் நரம்புகளுக்கு வலுகொடுக்கும் மாத்திரை அல்லது ஊசியையும் பயன்படுத்தலாம். பாதம், விரல்களில் தேய்த்துக்கொள்ள களிம்பு வகைகளும் உள்ளன. உங்கள் மருத்துவரின் பரிந்துரைப்படி இவற்றைப் பயன்படுத்துங்கள்.

ஆனாலும், ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைப்பதுதான் இதற்கான முக்கியத் தீர்வு. மூன்று மாத சராசரி சர்க்கரை அளவு (HbA1C) 6.5க்கு மிகாமல் இருக்க வேண்டும். சரியான மருந்து சிகிச்சை, ஆரோக்கியமான உணவுமுறை, தேவையான உடற்பயிற்சி ஆகியவற்றின் மூலம் இது சாத்தியமாகும். உடல் எடையைச் சரியாகப் பேணுவது, பாதப் பராமரிப்பு, பொருத்தமான காலணிகள் அணிவது ஆகியவை இன்னும் முக்கியம்.

ரத்த அழுத்தம், ரத்தக் கொலஸ்ட்ரால் அளவுகளையும் சீராக வைத்துக்கொள்ள வேண்டும். மது, புகைப் பழக்கங்கள் இருந்தால், அவற்றுக்கு விடை கொடுக்க வேண்டும். வருடத்துக்கு ஒருமுறை ‘பயோதிசியோமெட்ரி' (Biothesiometry) என்னும் பாதப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும்.

இப்படியான பல வழிகளில் நரம்புகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கவும் தள்ளிப்போடவும் முடியும். பொதுவாக, நரம்புப் பிரச்சினைகளைத் தொடக்கத்திலேயே கவனித்துவிட்டால் நல்ல தீர்வு கிடைக்கும். தாமதமானால் சிரமமாகிவிடும்.

எனக்கு நாசியின் அடியில் அடிக்கடி புண் ஏற்படுகிறது. சளி பிடிக்கும்போதுதான் இப்படி ஏற்படு கிறது. ஏன்? எப்படித் தடுப்பது? - எஸ்.வி.சுப்புராம், விழுப்புரம்.

சளிக்கு நீங்கள் எடுத்துக் கொள்ளும் மாத்திரை ஒவ்வாமையை ஏற்படுத்தியிருக்கலாம். அதன் விளைவாக இந்த மாதிரியான புண்கள் வரலாம். அடுத்தமுறை சளி பிடிக்கும்போது, நீங்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் நுண்ணுயிர்க்கொல்லி (Antibiotic) மாத்திரையை மாற்றிப் பாருங்கள். அப்படியும் புண் ஏற்பட்டால் மருத்துவரை நேரில் சந்தித்து ஆலோசனை பெறுங்கள்.

எனது மகனுக்கு வயது 22. மிகை தைராய்டு நோய்க்கு ஆறு வருடங்களாக மருந்து உள்கொண்டு வருகிறான். மருத்துவர் அறுவைசிகிச்சை வேண்டாம் எனவும், இன்னும் சிறிது காலம் மருந்து மாத்திரைகளை உள்கொள்ளவும் பரிந்துரைக்கிறார். மகனுக்கு அறுவைசிகிச்சை செய்யலாமா? அல்லது தொடர்ந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாமா? நீடித்த மாத்திரைப் பயன்பாடு பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா? - ஷாகுல் - அமீது, மின்னஞ்சல்.

பொதுவாக, இளம் வயதில் ஏற்படும் மிகைத் தைராய்டு (Hyperthyroidism) நோய்க்கு மாத்திரைகளே போதும். அறுவைசிகிச்சை பெரும்பாலும் தேவைப்படுவதில்லை. இந்த நோய்க்குத் தொடர்ந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் நோய் கட்டுப்படும்.

இதற்குத் தகுந்த மாத்திரைகளை மருத்துவரின் மேற்பார்வையில் தொடர்ந்து எடுத்துக் கொள்ளும்போது பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்பில்லை. அதேவேளை, சரியான இடைவெளிகளில் தொடர் மருத்துவக் கண்காணிப்பும் தேவை.

- கட்டுரையாளர், பொது நல மருத்துவர்; gganesan95@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in