

‘மீன் போன்ற கண்கள் கொண்ட கயல்விழியாள்’ என்று உவமை கூறப்படுவதைப் போல, பொன்னாங்கண்ணிக் கீரைக்கு ‘மீன் போன்ற இலைகள் கொண்ட கயல் இலையாள்’ என்று பெயர் சூட்டி கவித்துவமாகக் கூறலாம். ‘தங்கக் கீரை’ என்று பொன்னாங்கண்ணியைச் சொல்லுமளவுக்குக் கீரைகளில் மகத்துவமிக்கது இது.
கண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்தில் இயற்கை படைத்த ‘பசுமைத் தொகுப்பு’தான் பொன்னாங்கண்ணி. கண்கள் சார்ந்து ஏற்படும் பல்வேறு நோய்களைத் தடுக்கும் ‘தங்கச் சத்து’ நிறைந்த கீரை இது. ‘காசம் கண்புகைச்சல் கருவிழிநோய்…’ எனத் தொடங்கும் பொன்னாங்கண்ணி குறித்த சித்த மருத்துவப் பாடல், கண்களுக்கான பிரத்யேக மூலிகையாகப் பொன்னாங் கண்ணியைக் குறிப்பிடுகிறது.
உலகளவில்: தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், இலங்கைப் பகுதிகளில் உணவாக இக்கீரை உள்கொள்ளப்படுகிறது. மெல்லிய தீயில் வேகவைத்த பொன்னாங் கண்ணிக் கீரையோடு, வதக்கப்பட்ட தேங்காய், மஞ்சள், பூண்டு, மிளகு, கறிவேப்பிலைக் கலவையைச் சேர்த்து, சாதத்திற்குத் தொடு உணவாகச் சாப்பிடுவது இலங்கை மக்களின் வழக்கம். தக்காளி, வெங்காயத்தோடு இக்கீரையைச் சேர்த்து சாலட்போல பிரேசில் மக்கள் சாப்பிடுகின்றனர்.
ஊட்டச்சத்து உணவு: மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களின் ஆபத்பாந்தவன் பொன்னாங்கண்ணி. இந்தக் கீரையைத் தண்ணீரில் அலசி இரண்டு தக்காளி, கைப்பிடி பாசிப்பருப்பு, தேவையான அளவு உப்பு சேர்த்து வேக வைத்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். நாள்பட்ட மூல நோய்க்கான உணவாகும் மருந்து இது.
இனிப்புச் சுவையோடு குளிர்ச்சியை வாரி வழங்கும் பொன்னாங்கண்ணிக் கீரையை நோயுற்று மெலிந்தவருக்கான ஊட்ட உணவாகச் சமைத்துக் கொடுக்கலாம். சுண்ணச் சத்து, வைட்டமின் – பி, சி, இரும்புச்சத்து, கரோட்டினாய்டுகள், பாலிபீனால்கள் போன்ற நுண்ணூட்டங்களை நிறைத்து வைத்திருப்பதால், ஊட்டப் பற்றாக்குறையை இது நிச்சயம் போக்கும்.
தினசரி உணவில் பொன்னாங்கண்ணியைச் சேர்த்துவர, நோய் எதிர்க்கும் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு, பல நோய்கள் உடலைத் தீண்ட அச்சப் படும் என்கிறது தேரையர் காப்பியப் பாடல். இயற்கையாக உடலுக்குப் பொலிவைக் கொடுக்க, பொன்னாங் கண்ணியைத் துவையல் ரகத்தில் அவ்வப்போது எடுத்துக்கொள்ளலாம்.
சமையல் நுணுக்கங்கள்: தொடு உணவாக எடுத்துக்கொள்ளும்போது, பொன்னாங்கண்ணியைச் சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவது நல்லதல்ல. வேகவைத்து தக்காளி, பூண்டு, வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து சமைத்துச் சாப்பிடுவது தான் சிறந்தது.
வேகவைத்த கீரையை இறுதியாக வதக்க, சாப்பிடும் உணவிற்கு மொறு மொறுப்புத் தன்மை கூடுதலாகக் கிடைக்கும். கீரையில் உள்ள எதிர்-ஆக்ஸிகரணிக் கூறுகள் முழுமையாகக் கிடைக்கக் கீரையை நெய்யில் வதக்கி, புளி நீக்கிச் சமைத்துச் சாப்பிடும் கற்ப முறையைச் சித்த மருத்துவம் கவனப்படுத்துகிறது. இளம் கீரையை வாங்குவதே நல்லது.
ஆய்வுக்களம்: கல்லீரலுக்குப் பாதுகாப்பளிக்கும் தன்மை பொன்னாங் கண்ணியின் சாரத்துக்கு இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அதிகரித்த கொழுப்புச் சத்தின் அளவைக் குறைக்க, உணவு முறையில் கட்டாயம் சேர்க்கவேண்டிய கீரை இது.
பெயர்க் காரணம்: கொடுப்பை, பொன்னாங்காணி, சீதை, சீதேவி ஆகிய வேறு பெயர்களைக் கொண்டது பொன்னாங்கண்ணி. உணவில் பொன்னாங் கண்ணியை அடிக்கடி சேர்த்துவர, ‘பொன்’ போன்ற தேகத்தைக் காணலாம் என்ற பொருளில், பொன்னாங்காணி (பொன் ஆம் காண் நீ) என்கிற பெயர் ஏற்பட்டது.
உடல் பொன் போலவே மாறிவிடும் என்பதல்ல இதன் பொருள். இந்தக் கீரையை அடிக்கடி உணவாக உள்கொள்பவர்களின் மலம் சீராக வெளியேறி, கழிவு தங்காது. கீரையிலிருக்கும் நுண்ணூட்டங்கள் நரம்புகளுக்கு வலுவைக் கொடுத்து, தோலுக்குப் பொலிவைக் கொடுக்கும்.
வெண்ணிற மலர்களை உடையதாய் குளம், ஆற்றங்கரை போன்ற நீர்வளம்மிக்க பகுதிகளில் பசுமையாகத் துளிர்விடும் ‘நீர்த் தங்கம்’ இது! ‘ஆல்டர்னான்தெரா செஸ்ஸிலிஸ்’ (Alternanthera sessilis) எனும் தாவரவியல் பெயர் கொண்ட பொன்னாங்கண்ணியின் குடும்பம் அமரந்த்தேசியே (Amaranthaceae).
காம்பஸ்டீரால் (Campesterol), லூபியோல் (Lupeol), ஸ்டிக்மாஸ்டீரால் (Stigmasterol) போன்ற நலம் கொடுக்கும் வேதிப்பொருள்கள் பொன்னாங்கண்ணியில் இருக்கின்றன. பசுமை நிறத்திலும் சற்று சிவந்த நிறத்திலும் பொன்னாங்கண்ணி கிடைக்கிறது.
வெப்பத்தைக் குறைக்கும்: கண்களுக்கு மைதீட்டப் பயன்பட்ட இயற்கையான மூலிகைகளில் பொன்னாங்கண்ணியும் ஒன்று. கூந்தல் வளர்ச்சிக்கான மூலிகைத் தைலங்களில் பொன்னாங்கண்ணிக் கீரை பயன்படுத்தப் படுகிறது. பொன்னாங்கண்ணிக் கீரையோடு சில மூலிகைகளைச் சேர்த்து செய்யப்படும் ‘பொன்னாங்கண்ணி நெய்’ எனும் நெய்ப்பான சித்த மருந்து, பித்த நோய்களைக் குறைக்க உதவும்.
பொன்னாங்கண்ணிக் கீரையை அரைத்துச் சாறு பிழிந்து, சம அளவு நல்லெண்ணெய், பசும்பால் சேர்த்து, அதன் பாதி அளவு நெல்லிக்காய் சாறு, கரிசாலை சாறு கலந்து தயாரிக்கப்படும் ‘பொன்னாங்காணி எண்ணெய்யை’ கூந்தல் தைலமாகப் பயன்படுத்த உடல் வெப்பம் பல மடங்கு குறையும். கண் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆரம்ப சிகிச்சை முறையில், இத்தைலத்தைக் கொண்டு குளிக்கும் வழக்கம் முக்கியத் துவம் வாய்ந்தது.
அனைவரது வீட்டிலும் இருக்க வேண்டிய ‘கலப்படமில்லா தங்கம்’ பொன்னாங்கண்ணி!
- கட்டுரையாளர், அரசு சித்த மருத்துவர்; drvikramkumar86@gmail.com