

அலர்ஜி ஆஸ்துமா உள்ள சிறுவர்களுக்கு எந்த மாதிரியான உடற்பயிற்சி கொடுப்பது நலம் பயக்கும்? - வீ. வெள்ளிங்கிரி, மேட்டுப்பாளையம்.
ஒவ்வாமை காரணமாக ஆஸ்துமா வருபவர்களுக்கு மூச்சுப் பயிற்சிகள் நல்லது. அதோடு, நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, கால்பந்து, கோல்ஃப், கூடைப்பந்து போன்றவற்றையும் மேற்கொள்ளலாம். பொதுவாக, குளிர்ச்சியான சூழல்களில் உடற்பயிற்சிகளை மேற்கொள்ளக் கூடாது.
மாசு, தூசி, பூக்கள், மகரந்தங்கள் போன்ற ஒவ்வாமைப் பொருள்கள் உள்ள இடங்களில் உடற்பயிற்சி செய்யக் கூடாது. பயிற்சிகளுக்கு முன்னால் மூச்சுக்குழலைத் தளர்த்தும் இன்ஹேலர் மருந்தை இரண்டு முறை உறிஞ்சிக்கொள்ளலாம்.
‘வார்ம்-அப்’ செய்த பின்னர் படிப்படியாக உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஜிம்முக்குச் செல்லலாம். அங்கு நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டியது அவசியம். உடற்பயிற்சிக்கும் ஆஸ்துமாவுக்கும் உள்ள தொடர்பின் மறுபக்கத்தையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது, ‘உடற்பயிற்சியால் தூண்டப்படும் ஆஸ்துமா’ (Exercise induced asthma) என்றே ஒரு வகை ஆஸ்துமா உண்டு. ஆகவே, உடற்பயிற்சி செய்யும்போது ஆஸ்துமா எந்த வகையிலாவது அதிகரிக்குமானால் அந்தப் பயிற்சியை மேற்கொள்ளக் கூடாது.
வயிற்றில் உள்ள அல்சருக்கு இயற்கை வழியில் தீர்வு பெறும் வழிகள் என்னென்ன, டாக்டர்? - தமிழ்மணி, மின்னஞ்சல்.
நீங்கள் குறிப்பிடுவது இரைப்பையில் உள்ள புண் (Peptic ulcer) என நினைக்கிறேன். இவ்வகைப் புண்ணைக் குணப்படுத்த முறையான உணவுப் பழக்கம் முக்கியம். நேரத்தோடு சாப்பிடுவது, அளவோடு சாப்பிடுவது, நிதானமாகச் சாப்பிடுவது, காரம், மசாலா, புளிப்பு நிறைந்த உணவைத் தவிர்ப்பது, புகைபிடிப்பதை நிறுத்துவது, மதுவை மறப்பது, வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின் பேரில் மட்டுமே பயன்படுத்துவது, காபி மற்றும் கோலா பானங்களை அளவோடு உபயோகிப்பது, கவலை, மன அழுத்தம், பதற்றம், கோபம், எரிச்சல் போன்ற உளம் சார்ந்த குறைபாடுகளைக் களைவது, தியானம், யோகாசனம் மேற்கொள்வது ஆகியவை அல்சர் வராமல் தடுக்கும் இயற்கை வழிகள் எனலாம்.
அடுத்ததாகச் சில நிபந்தனை கள்: காலை உணவைத் தவிர்க்க வேண்டாம். எப்போது சாப்பிட்டாலும், வயிறு நிறைய சாப்பிடாதீர்கள். உணவைச் சீரான இடைவெளியில் பிரித்துச் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். துரித உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
சாப்பிட்டு மூன்று மணி நேரத்துக்குள் நொறுக்குத் தீனி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவு சாப்பிட்டதும் குளிர் பானங்கள், கோலா பானங்கள், பழச்சாறுகள் போன்றவற்றைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இரவில் எளிதாகச் செரிக்கக்கூடிய உணவைச் சாப்பிடுங்கள். உணவு சாப்பிட்ட உடனே பழங்களைச் சாப்பிடாதீர்கள். அவற்றை இடைவேளைகளில் சாப்பிடுங்கள்.
எனக்கு நீண்ட நாள்களாக உடல் வலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, இடுப்பு வலி, கால்களில் வலி உள்ளது. அந்த உடல் வலியினால் மிகவும் சோர்வடைகிறேன் எடுத்த வேலைகளை முடிக்க முடியவில்லை. என்ன காரணம்? இதற்கு எந்த மருத்துவரை அணுக வேண்டும் என்று ஆலோசனை தாருங்கள் - கார்த்திகேயன், மின்னஞ்சல்.
உங்களுக்கு ‘ஃபைப்ரோ மயால்ஜியா’ (Fibromyalgia) எனும் ‘தசைநார் வலி’ இருக்கிறது. பரவலான உடல்வலியைக் குறிக்கும் மருத்துவ வார்த்தை இது. இதற்கு இதுதான் காரணம் என்று எதையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஒவ்வொருவருக் கும் ஒரு காரணம் இருக்கும். சிலநேரம் பல காரணங்கள் ஒன்று சேர்ந்துகொள்ளும். என்றாலும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் முடிவுப்படி சிலவற்றை இங்கே குறிப்பிடலாம்.
ஹார்மோன்களின் சமச்சீர்த்தன்மை பாதிக்கப்படுவதுதான் இந்த நோய் வர முக்கியக் காரணம். நமக்கு உடலில் வலி ஏற்படும்போது ‘செரட்டோனின்’ ஹார்மோன் சுரக்கும். நாம் வலியால் பாதிக்கப்படாத அளவுக்கு அந்த வலியை இது கட்டுப்படுத்தும். தசைநார் வலி ஏற்படுபவர்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பு குறைந்துவிடும். அல்லது முற்றிலும் சுரக்காமல் போய்விடும். இதனால் லேசான வலியைக்கூட இவர்களால் தாங்க முடியாது.
அடுத்து, சிலருக்கு நரம்பு மண்டலத்தில் வலியை உணரச் செய்கிற வேதிப்பொருள்களின் அளவு அதிகரித்துவிடும். அப்போது அவர்களுக்குத் தசைநார் வலி வரும். அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படுபவர்களுக்கும் நீண்ட காலம் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த மாதிரியான வலி ஏற்படுவதை அனுபவத்தில் காண்கிறோம்.
குடும்பத்தில் திடீரென ஏற்படும் அதிர்ச்சி, இழப்பு, விபத்து, சோக நிகழ்வுகள் இந்த வலியைத் தூண்டுகின்றன என்பதும் சரியான தூக்கமின்மையும் அதீதக் குளிரும் இந்த வலியை அதிகப்படுத்தும் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ள உண்மைகள். முதலில், நீங்கள் பொதுநல மருத்துவரைக் கலந்தாலோசித்து சிகிச்சை பெறுங்கள். தேவைப்பட்டால் மனநல நிபுணரையும் சந்தியுங்கள். சரியாகிவிடும்.
- கட்டுரையாளர், பொது நல மருத்துவர்; gganesan95@gmail.com